nanrasithathu.blogspot.com

திங்கள், 31 அக்டோபர், 2011

அடிப்படை நோக்கம் - மன இயல் (18+)



பசி உணர்வை மிகவும் சாமானியமான ஒன்றாக எண்ணுகிறோம். ஆனால் பாலியல் உணர்வையோ, ஏதோ மந்திரம், மாயம், பூதம் , பேய் என்பது போல கற்பனை போன போக்கெல்லாம் உருக்கொடுத்து மிரளுகிறோம். மிரள வைக்கிறோம்.


மனிதன் தவிர்த்த மற்ற உயிரினங்கள் பாலியல் உணர்வை அதன் அடிப்படை நோக்கத்தோடு மட்டுமே பயன்படுத்துகின்றன.



எந்த பிற உயிரனமும் காதல் - அல்லது காம உணர்வுச் சிந்தனையை ஒரு பிரச்சனையாக எண்ணுவதில்லை.

காதல் - அல்லது காம உணர்வை மனத்திலே ஊட்டிக்கொண்டு பைத்தியம் பிடித்த மாதிரி அலைந்துக்கொண்டிருப்பதில்லை.

காதல் தோல்வி காரணமாக மனமிடிந்து நிலைகுலைந்து விட்டதாகவோ - தற்கொலை செய்துக்கொண்டு விட்டதாகவோ பிற உயிரினங்கள் வட்டாரத்திலிருந்து தகவல் கிட்டுவதில்லை.

காதல் பொறாமை உணர்ச்சி காரணமாக படுகொலைகளை நிகழ்வதை மற்ற உயிரினங்களிடமும் காணமுடியாது.

பலாத்காரமாக கற்பழித்தல் போன்ற மோசமான நடைமுறை மனித இனத்துக்கு மட்டுமே உரியனவாக உள்ளன. இத்தகைய இழிதன்மைகள் பிற உயிரினங்களிடம் அனேகமாக இல்லை என்றே கூற வேண்டும்.

பிற உயிரினங்கள் பாலியல் உணர்வு தோன்றும்போது மட்டும் இணையை தேடிச் செல்லுகின்றது. உடலுறவு கொண்டு அந்த உணர்வைச் சமாதானப்படுத்திக் கொண்டு விட்ட பிறகு தன் போக்கில் தம் தம் பணிகளில் ஈடுபடுகிறது.


மனிதன் மட்டுந்தான் அந்த விவகாரத்தை மிகவும் சிக்கல் வாய்ந்த ஒரு சமூகப் பிரச்சனையாக்கி ஒரு குழப்பத்தையே தோற்றுவித்து அந்த குழப்பத்தின் காரணமாக, ஒன்று தானே அழிந்து அல்லது மற்றவர்களை அழிக்க முற்படுகிறான்.

இவ்வாறு பாலியல் உணர்வை ஒரு பிரச்சனையாக்குவதன் காரணமாகத்தான் அந்த விஷயம் மனித இனத்தின் வாழ்க்கை நடைமுறையைச் சீர்குழைந்து அவனைச் சீரழிக்கும் ஒரு பயங்கரமான பலவீனமாகத் தலைதூக்கி நிற்கிறது.

இந்த உணர்வு தான் வாழ்க்கையின் அடிப்படை என்பது போன்று இந்த உணர்வு தொடர்பான சாதனை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்பது போலவும் ஒரு வித போலித்தனமான முக்கியதுவம் இதற்கு தரப்படுகின்றது.



இன்று பிரசரமாகும் ஊடகங்களில் பெரும்பான்மை காம உணர்வுக்குத் தூபம் போடுபவையாகவே உள்ளன. திரைப்படங்கள் காம உணர்வுகளை ஏதாவது ஒரு வகையில் தூண்டுவனவாகவே உள்ளன.விளம்பர சாதனங்கள் எல்லாம் காம உணர்ச்சியைக் கிளறிவிடும் தன்மையிலயே அமைகின்றன.

சுருங்கச் சொன்னால் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வதற்கு உலகமுழுவதிலும் மக்கள் தாங்களே திட்டம் தீட்டி செயல்படுகின்றனர்.

அதிலும் இக்காலத்தில் பத்து பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சிறுமிகளின் மனம் பாலியல் உணர்வுகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருப்பதைக் காண முடிகிறது.


பாலியல் உணர்வுகளுக்கு தூபம் போடும் பத்திரிக்கை புத்தங்களைத் திருட்டுத்தனமாகப் படித்தல், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் திரைப்படங்களைப் பார்த்து ரசித்தல் போன்ற விசயங்களில் சின்னஞ்சிறு மாணவர் பருவத்தினரே ஈடுபடுவதாக உலக முழுவதும் உணர்ந்து பெற்றோர் வேதனையும் பீதியும் அடைகின்றனர்.

பத்திரிக்கையிலும், திரைப்படங்கலிலும் "காதல்" என்ற பெயரால் சித்தரிக்கப்படும் காட்சிகளைப் பார்த்துவிட்டு அவற்றையே தங்கள் வாழ்க்கையில் அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற உணர்வு மிகவும் குறைவான வயதிலயே வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொண்ட இளைஞர்களும், இளம்பெண்களையும் பலரை நம்மால் காண முடிகிறது.

போலித்தனமான காம உணர்வுகளை 'காதல்' என்ற உன்னதமான பெயரிட்டு அழைத்து அது நிறைவேறாமல் போகும்போது மனமொடிந்து, பித்துபிடித்து வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்ட இளைஞர்களும், இளம்பெண்களும் கணக்கிலடங்கார்.


இதற்கு காரணம்.. பாலியல் உணர்வு மட்டுந்தான் வாழ்க்கை - இந்த உணர்வு தொடர்பான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது மட்டுந்தான் மனித வாழ்வின் இலட்சியம் என்ற எண்ணம் புதிய தலைமுறையினரின் உள்ளத்தில் ஊறிக்கிடப்பது தான்.

இது படுமோசமான ஒரு பலவீனமாக அவர்கள் மனதை அரித்துக்கொண்டிருப்பதால்தான் இந்தச் சாதாரண விஷயத்துக்காக வாழ்க்கையே குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
===================================================================

ஒரு நிமிசம்:

சலனமற்று இருக்க பழகுங்கள். சராசரி மனிதன் ஒரு மாதத்தில் முப்பது நிமிடங்கள் கூட ஆழ்ந்த அமைதியில் கழிப்பதில்லை. ஒரு நாளில் பத்து நிமிடங்களாவது தனிமையின் அமைதியை, அதன் அதிர்வுகளை உணரப் பழகுங்கள். அது இதுவரை நீங்கள் உணர்ந்திராத உத்வேகத்தை அறியச் செய்யும்.

சனி, 29 அக்டோபர், 2011

வாலிபக்கவிஞரே வாழிய பல்லாண்டு!

வாலிபக்கவிஞரே வாழிய பல்லாண்டு!

கற்பனையென்றாலும் கற்சிலையென்றாலும்
கந்தனே உனை மறவேன்,

டி.எம்.சௌந்திரராஜனின் பக்திரசம் சொட்டும் இப்பாடல் இன்றும் வானொலிகளில் அதிகாலையில் ஒலித்து உலகைத் துயிலெழுப்பி வருகின்றது. இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி என்பதை அறிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அது பல வருடங்களுக்கு முன்பு. இப்போது கவிஞர் வாலியைப் பற்றி யோசித்தால் ஏற்படுகிற வியப்பு முற்றிலும் வித்தியாசமானது. பலர் பலமுறை பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டிய அவரது பன்முகத் திறமை.

திரைப்படங்களில் நாயகர்களுக்கென்று ரசிகர்கள் இருப்பதுபோலவே, கவிஞர்களுக்கென்றும் ரசிகர்கள் பிரத்யேகமாய் இருப்பதுண்டு. பெரும்பாலானவர்களால் அரவணைக்கப்பட்ட பல பாடலாசிரியர்களை, சில விமர்சகர்கள் கவிஞர்களாய் ஏற்றுக்கொண்டதில்லை. கவியரசு கண்ணதாசன் ஒரு கவிஞனே அல்லர்; அவர் எழுதுவது பாடலே அல்ல என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு முறை கூறியதாக வாசித்திருக்கிறேன். இது போன்ற விமர்சனங்களையெல்லாம் தாண்டி போட்டியும் பொறாமையும் மிகுந்த ஒரு துறையில், பல தலைமுறைகளோடு இணைந்து பணியாற்றுவதற்கு தனித்து நிற்கும் திறமை தேவைப்படுகிறது. அத்தகைய திறமைசாலிகளில் ஒருவர் தான் கவிஞர் வாலி!

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களைக்
கண்ணீரில் குளிக்க வைத்தான்

என்று மீனவர் வாழ்க்கையில் அவலத்தையும் எளிமையாகப் புரிய வைக்க அவரால் முடியும். அதே தமிழால் ‘சின்ன ராசாவே சிட்டெறும்பு உன்னைக் கடிக்குதா?என்று இளமைத்துள்ளலையும் வெளிப்படுத்த முடியும்.

ஒளி விளக்கு,படத்திற்காக அவர் எழுதிய “ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்,என்ற பிரார்த்தனைப் பாடலை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டிருந்த நாட்களில் தமிழகத்தின் பல திரையரங்கங்களில் இடைவேளையின் போது காட்டினார்களம்.

எம்.ஜி.ஆர், சிவாஜி தலைமுறை தொடங்கி, ரஜினி-கமல் தலைமுறையில் தொடர்ந்து இன்று புதிதாய் அறிமுகமாகும் கதாநாயகர்களுக்கும் பாடல்கள் எழுதுமளவுக்கு, அனைத்துத் தலைமுறையினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு படைப்பாளி கவிஞர் வாலி.

திரைப்படப் பாடல்கள் மட்டுமின்றி, மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் என்று அவர் தனது தமிழாற்றலைப் பல பரிமாணங்களில் வெளிப்படுத்தியவர் என்பதை எப்படி மறக்க முடியும்? இராமாயணத்தைக் கூட இவ்வளவு எளிமையாக, புதுக்கவிதை வடிவில் சொல்ல முடியும் என்று நிகழ்த்திக்காட்டியவர் அல்லவா?

அசோகவனத்துச் சிறைவாசத்திலிருந்த சீதை, அனுமன் கொண்டுவந்த கணையாழியைப் பார்த்துப் பூரித்ததை...

பேரானந்தத்தில் பிராட்டி
பேச்சற்று நின்றாள்
கணையாழியை- ஈரக்
ண்களால் தின்றாள்.

என்று சொல்லிய லாவகம் ஒன்று போதுமே?

தாய்ப்பாசம் குறித்து எத்தனையோ பாடல்கள் வந்திருந்தாலும், கவிஞர் வாலி எழுதி, இசைஞானி இசையமைத்து, யேசுதாஸ் பாடிய “அம்மாவென்றழைக்காத உயிர் இல்லையே?பலரின் மனதில் பசுமையாய்ப் பதிந்து கிடக்கிறதே?

ரஜினி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது கவிஞர் வாலி விகடனில் எழுதிய கவிதையை பலமுறை திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன்.

மரபு வழியில் ஒரு
மராட்டி
எனினும் ரஜினியை
“என் மகனே,என்று
தழுவிக்கொண்டாள்
தமிழ்த்தாய் என்னும்
பிராட்டி!

அண்மையில் நிகழ்ந்த ஒரு விழாவில் கவிஞர் வாலி “எனக்கு இன்று இருக்கும் பணம், வசதிகள் அனைத்தும் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பிச்சையே. அவரால்தான், சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தவன். சோறு திண்ணவே நேரம் இல்லாதவன் ஆனேன்என்று பேசியதை வாசித்தபோது செஞ்சோற்றுக்கடன் என்பதன் சிறப்பைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இது திறனாய்வு அல்ல; நான் பெரிதும் விரும்புகிற ஒரு தமிழ்ப்படைப்பாளி மீது எனக்கிருக்கும் அபிமானத்தை, நானறிந்த வரையில் வெளிப்படுத்துகிற ஒரு எளிய முயற்சி. உலகத்திலேயே அதிகமான திரைப்படப்பாடல்களை எழுதிய ஒரு கவிஞனைக் குறித்து அதிகம் எழுத, இன்னும் அதிகம் வாசித்திருக்க வேண்டும் என்பதால், அதை என்னைக் காட்டிலும் அதிகம் வாசிக்கிறவர்கள், அதிகம் யோசிக்கிறவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இன்று (29-10-2011) அன்று தனது 80-வது பிறந்த நாள் காணும் கவிஞர் வாலி இன்னும் பல்லாண்டு வாழ, அவரது கடைக்கோடி ரசிகர்களில் ஒருவனாய் இறைவனை வேண்டுகிறேன்.

nandri..settaikaaran.