nanrasithathu.blogspot.com

புதன், 27 ஜூலை, 2011

கர்ச்சீஃப் காதல்!!!!!!

மக்குப் பிளாஸ்திரிக்கு,
பக்கத்து வீட்டுப் பெண் பணிவுடன் எழுதிக் கொள்வது. நான் எங்கள் வீட்டுக் கொடியில் உலர்த்திய என்னுடைய கர்ச்சீஃப்பைக் காணவில்லை.உங்கள் வீட்டில் தான் யாரோ மறதியாக எடுத்துக் கொண்டு போயிருப்பார்கள். திருப்பி அனுப்பவும்.
இப்படிக்கு,
அபீதா.
அன்புள்ள அபீத குஜாம்பா அவர்களுக்கு,
கர்ச்சீஃப்பா...யாரிடம் கேட்கிறீர்கள் கர்ச்சீஃப்.. பருத்தி பறித்து வந்தீரா? துணி நெய்து கொடுத்தீரா..?எதற்குக் கேட்கிறீர் கர்ச்சீஃப்? கப்சிப்!!
(பி.கு.: “பாண்ட் எய்ட்” கம்பெனியில் வேலை செய்வதால் “மக்குப் பிளாஸ்த்திரி“ என்று என்னைக் கூப்பிட வேண்டாம். இதோ என்னைப் பற்றிய “பயோ டேட்டா”)
பெயர் : கணேஷ்.
உயரம் : ஆறு அடி ஒண்ணரை அங்குலம்.
தொழில் : மெடிக்கல் ரெப்.
சம்பளம் : கிட்டத் தட்ட ஆயிரத்து ஐநூறு!
( வாவ் என்று வாயைப் பிளக்காதீர்கள்!)
வயது : இருபத்தி எட்டு
குறிப்பு : இன்னும் திருமணம் ஆகவில்லை :(
அன்புடன்,
கணேஷ்.
கணேஷுக்கு,
உங்கள் காயலாங்கடை கட்டபொம்மன் வசனமெல்லாம் எனக்கு எதற்கு? நீங்கள் “பாண்ட் எய்ட்” கம்பெனியில் வேலை பார்த்தால் எனக்கு என்ன? ”பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸி”ல் வேலை பார்த்தால் எனக்கு என்ன? எனக்கு தேவை என்னுடைய தொலைந்து போன கர்ச்சீஃப்! மரியாதையாய் கொடுத்து அனுப்பவும்!
பி.கு.: அபீதா என்று கெஜட்டில் பெயரை மாற்றி ஐந்து வருடங்களாகி விட்டது.இனியும் பழைய பெயரில் கூப்பிடாதீர்கள்...
விசும்பலுடன்,
அபீதா.
அன்பே அபீதா,
அழாதே! எனக்கு சத்தியமாக உன் பெயர் தெரியாது.உங்கள் வீட்டு வாண்டுப் பயல் தான் அவ்வாறு சொன்னான். நிற்க..எங்கள் வீட்டில் மேற்படி கர்ச்சீஃபை யாரும் மறந்து கூட எடுத்துக் கொண்டு வரவில்லை..திருட்டு குணம் எங்களுக்கு கிடையாது.
இப்படிக்கு,
கணேஷ்.
ஐயோ,
உங்களை யார் இப்போது திருடன் என்று சொன்னது? உங்கள் வீட்டில் எங்காவது தவறுதலாக விழுந்திருக்கும்..கொஞ்சம் தேடித் தான் பாருங்களேன்..ப்ளீஸ்..அன்பே..கின்பே என்று எழுதாதீர்கள்..அண்ணாவிடம் சொல்லி விடுவேன்..ஜாக்கிரதை!
எச்சரிக்கும்,
அபீதா.
நச்சரிக்கும் அபீதாவிற்கு,
உங்கள் கர்ச்சீஃப் எங்கு தொலைந்து போயிருக்கும் என்று எனக்குத் தெரியாது..எப்படியும் இருபத்து நான்கு மணி நேரத்திற்குள் (ஸாரி.. டாக்டர்களிடம் பழகி..
பழகி..எதற்கும் இருபத்தி நான்கு மணி நேரம் வாய்தா கொடுத்து பழக்கமாகி விட்டது!)கர்ச்சீஃபைத் தேடித் தருகிறேன். கவலை வேண்டாம்.அண்ணாவிடம் சொல்லி விடுவேன்..மன்னியிடம் சொல்லி விடுவேன் என்ற பயமுறுத்தல் எல்லாம் என்னிடம் வேண்டாம்.. நான் ஒன்றும் சின்ன பப்பா இல்லை!
வீரன்
கணேஷ்.
கணேஷ் என்ற வீரருக்கு,
உங்கள் பிரதாபத்தை எல்லாம் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்..எனக்கு என்னுடைய கர்ச்சீஃப் வந்தாக வேண்டும். அண்ணாவிடம் சொல்ல மாட்டேன்..சும்மா உங்களை பயமுறுத்தினேன்..அவ்வளவு தான்..
இப்படிக்கு,
அபீதா.
அபீதா அம்மையாருக்கு,
கர்ச்சீஃப்..கர்ச்சீஃப்..கர்ச்சீஃப்....ச்சே!!! எப்பப் பார்த்தாலும் கர்ச்சீஃப் தானா? இவ்வளவு ’சீப்’பாக நீங்கள் நடந்து கொள்வீர்கள் என்று எனக்கு தெரியாது. போலீஸ் நாய் போல் மோப்பம் பிடித்துக் கொண்டு போனதில் மூக்கை சுவரில் இடித்துக் கொண்டு ரத்தம் வந்தது தான் மிச்சம்..ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்......சே!
இனி மருந்துக்குக் கூட உங்கள் வீட்டுப் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன்!
நஷ்ட ஈடு கோரும் நண்பன்,
கணேஷ்.
கணேஷ் ஸாருக்கு,
மூக்கிலிருந்து ரத்தம் வருகிறதா? சாரி..மன்னித்துக் கொள்ளுங்கள்..எவ்வளவு கஷ்டம்..ஏதாவது தொலைந்து போனால்,அது கிடைக்கும் வரை எனக்கு நிம்மதி இருக்காது.கடவாய் பல்லில் மாட்டிக் கொண்ட கடுகு துணுக்கை எடுக்க நாக்கு எவ்வளவு கஷ்டப் படுமோ, அப்படி மனம் கிடந்து அலை பாயும்...பாவம் என்னால் உங்களுக்குத் தான்
எவ்வளவு சிரமம்.
அழுது கொண்டே,
அபீதா.
அபீதா,
கண்டேன் கர்ச்சீஃப்பை! மறுபடியும் அழாதே.இதோ..இதோ...உன்னுடைய கர்ச்சீஃப்பினால் கண்ணை துடைத்துக் கொள்..இதெல்லாம் ஒரு சிரமமா? அது சரி..சார்..மோரெல்லாம் ஒரே தடபுடலா இருக்கு?
அன்பன்,
கணேஷ்.
கணேஷுக்கு,
கண்டு கொண்டேன் கர்ச்சீஃப்பை! ரொம்ப சந்தோஷம்..வேறு ஒன்று தொலைந்து போய் விட்டது. கண்டு பிடித்துத் தருகிறீர்களா?
குறும்புடன்,
அபீதா.
அம்மா பரதேவதை,
ஆளை விடு..வேறு வீட்டுக்கு குடி மாற்றலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
அப்பாவி கணேஷ்.
அப்பாவி கணேஷுக்கு,
ப்பூ...இது கூட தெரியவில்லையா..இத்துடன் என் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன்..
உங்கள் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு திருவானைக் காவல் ஜோஸ்யரிடம் போய்ப் பார்க்கவும். எல்லாம் நல்ல படியாக முடிந்தால், நீங்கள் வாடகையே கொடுக்க வேண்டாம், இனிமேல்!
வேறு வீட்டிற்கு குடி போகும் ஆசையை விட்டு விடுங்கள்..உங்கள் சம்பளம் முழுவதும் வாடகையாகவே எடுத்துக் கொண்டு விடுவார்கள்..ஜாக்கிரதை!
என்றும் உங்கள்,
அபீதா.
அபிதா கண்ணிற்கு,
கண்ணே! மக்கு பிளாஸ்திரி என்று மறுபடியும் சொல்லாமல் சொல்லி விட்டாய்..
பரவாயில்லை..ஜாதகம் கிடைத்தது.இதோ..இப்போதே ஜோஸ்யர் வீட்டிற்கு போய் விட்டு உன் அப்பாவைப் பார்க்கிறேன், என் அம்மாவோடு! வேறு வேலை?
கிளம்பி கொண்டேயிருக்கும்,
கணேஷ்.

வசீகரமான உன் ஆண்மை....

உனைக் கண்ட முதல் தருணம்
சுற்றம் முழுதும்
வெண்புகையாய் மறைந்து போயின !!!!!
அங்ஙனம் என்னுள் தோன்றியதை
எங்ஙனம் எழுத என எண்ணி
மனதில் உன்னை
எழுதி வைத்தேன் .......

'பார்த்த மாத்திரத்திலேயே காதல் கனியுமா 'என
காவியங்களில் படித்த போது சிரித்த நிமிடங்கள்
இன்று என் நிலை கண்டு சிரிக்கிறதே !!!!!
கண்டதும் காதல் சாத்தியமே என சத்தியம்
செய்யும் அளவு மாறிவிட்டேனே உன்னால்.............

என் குழந்தைத்தனம் ரசிக்கும்
இன்னொரு குழந்தையாய் நீ என்னுள் !!!!
கலைந்த படுக்கையும் நொய்ந்த தலையணையும்
கூறுதே உன் மீதான என் காமத்தை !!

நவரசங்களில்
உனைக் கண்டதும்
வெட்கம் மட்டும்
என் முகத்தில் தலை தூக்குதே !!!!!!

அழகான பெண்கள் கூடத்தான்
கவிஞர்களின் பிறப்பிடம்
ம்ம் !! மறுக்கப் போவதில்லை நான் .,
அடியேனின் பிறப்பிடம்
வசீகரமான உன் ஆண்மை
இதை நீ மறுப்பாயா??????

---கல்பனா