nanrasithathu.blogspot.com

திங்கள், 2 செப்டம்பர், 2013

பேரழகி அல்லது மீன்காரி

பேரழகி அல்லது மீன்காரி

தமிழகத்தைப் போலவே கர்நாடகாவிலும் மேடைகளில் பேனர் கட்டுகிறார்கள். கட்சிக் கூட்டமாக இருந்தாலும், கோயில் கூட்டமாக இருந்தாலும் பேனர் உண்டு. ஆனால் என்ன? ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், அனுஷ்கா என்று அட்டகாசமான அழகிகளை இந்த தேசத்திற்காக தாரை வார்த்திருந்தாலும் பேனர்களில் யு.ஆர்.அனந்தமூர்த்தி, க்ரீஷ் கர்னாட் போன்ற அறிவுஜீவிகளின் படங்களைத்தான் போடுகிறார்கள். இந்த ஊரில் சிக்கிக் கொண்டு இவர்களோடு மாரடிக்க வேண்டியிருக்கிறது. சரி போகட்டும்.

அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா தமிழிலும் வந்திருக்கிறது. அடையாளம் பதிப்பகத்தின் வெளியீடு. 

வெயிட்டீஸ்! என்னவோ நாவல் விமர்சனம் போலிருக்கிறது என்று மூட்-அவுட் ஆக வேண்டாம். அந்த நாவலில் மத்ஸ்யகன்னி என்ற ஃபிகரைப் பற்றி ஒரு பற்றி ஓரிரு லைன்களை அனந்தமூர்த்தி எழுதியிருப்பார். அதுதான் இன்றைய சரக்கு.

இந்த மத்ஸ்யகன்னி மஹாபாரத காலத்துப் பெண். ஒருவிதத்தில் மஹாபாரதத்தின் காரணகர்த்தாவே இவள்தான். உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்- மத்ஸ்யகன்னி ஒரு மீனவப் பெண். படகு ஓட்டி பிழைக்கிறாள். அழகு என்றால் அழகு செம அழகு. அழகு என்ன அழகு? செமக் கட்டை. அவளுடைய படகில் பராசுரர் என்ற முனிவர் ஏறுகிறார். அவளைப் பார்த்து ‘ஒரு மாதிரி’ ஆகியிருப்பார் போலிருக்கிறது. 

ஏறியவர்- I mean, படகில் ஏறியவர்-  சும்மா இராமல் ‘இன்றைய தினத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கருவாகும் குழந்தை இந்த உலகத்துக்கு பெரும் குருவாக இருப்பான்’ என்று கதையை ஆரம்பிக்கிறார். ஆசை யாரை விட்டது? அந்தக் குழந்தை தனக்கே பிறக்க வேண்டும் என மத்ஸ்யகன்னி விரும்புகிறாள். ஆனால் படகில் வேறு ஆணே இல்லை. என்ன செய்வது என்று மத்ஸ்யகன்னிக்கு தாறுமாறாக யோசனை ஓடுகிறது. 

கொஞ்ச நேரத்தில் வானத்தை பார்த்த பராசுரர் “ஆ! அந்த நேரம் வந்துவிட்டது, அந்த நேரம் வந்துவிட்டது” என்று குதிக்கிறார். மத்ஸ்யகன்னிக்கு ஒரே தயக்கம் . அந்த இடத்தில் முனிவரைத் தவிர யாரும் இல்லை. இவரிடம் போய் எப்படி கர்ப்பதானம் கேட்பது என்று குழப்பம். முனிவர் அல்லவா? ஞானதிருஷ்டியில் அவளது எண்ண ஓட்டத்தைக் கண்டுபிடித்து “அதனால் என்ன பாப்பா!...என் மூலமே அந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்” என்கிறார். மத்ஸ்யகன்னியோ ‘முற்றும் துறந்த முனிவர் ஆச்சே...இதெல்லாம் பாஸிபிளா’ என்று யோசிக்க, அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று படகிலேயே படத்தை முடிக்கிறார். அப்படிப் பிறந்த அந்தக் குழந்தைதான் வியாசர். மஹாபாரதத்தை எழுதிய பெரும் குரு.

இதையே நித்யானந்தா செய்தால் வீடியோ எடுத்து ‘தாங்குனன்னா தாங்குனன்னா’ என்று சின்னவீடு படத்தின் தீம் மியுசிக்கை பேக்ரவுண்டில் ஓட விட்டு விடிய விடிய படம் காட்டுகிறார்கள். இதையே பராசுர முனிவர் செய்தால் ‘ஒரு முனிவனையே மயக்க வேண்டுமானால் அவள் எத்தனை அழகாக இருந்திருப்பாள்?’ என குற்றத்தை மத்ஸ்யகன்னி மீது போடுகிறார்கள். நல்ல உலகம். நல்ல தீர்ப்பு.

இதே மாதிரியான ஒரு மத்ஸ்யகன்னி எங்கள் ஏரியாவில் உண்டு. ஒசூர் காரி. ஞாயிற்றுக்கிழமை மட்டும் இருபது முப்பது கிலோ மீன்களை தூக்கி வந்து ரோட்டில் வைத்து விற்றுக் கொண்டிருப்பாள். ஞாயிறு தவிர இன்னொரு நாளும் வருகிறாளாம். நான் பார்த்ததில்லை. மீன்க்காரப் பெண் என்பதற்காக மட்டும் மத்ஸ்யகன்னி இல்லை. அழகும் அத்தனை அழகு. பராசுர முனிவர் மயங்குவாரா என்று தெரியாது ஆனால் நிச்சயம் நித்தி மயங்கிவிடுவார். காரணம் இருக்கிறது- ஒரு டைப்பாக பார்த்தால் ரஞ்சிதா சாயலில் இருப்பாள். ஆனால் ரஞ்சிதா என்பதைவிடவும் மத்ஸ்யகன்னி என்ற பெயர் ‘பொயடிக்’காக இருப்பதால் அதைத்தான் பயன்படுத்துவேன். இந்தப் பெயருக்கான காரணம் தெரியும் வரைக்கும் மீன் வாங்கி வருவதற்கு என்னை வீட்டில் அனுமதித்தார்கள். நுணல் தன் வாயால் கெடுவது போல தெரியாத்தனமாக ஒரு நாள் மத்ஸ்யகன்னி பற்றி விளக்கித் தொலைந்துவிட்டேன். அதன் பிறகு மீன் வாங்கி வருவதற்கு ஒரு நாள் கூட என்னை அனுமதித்ததில்லை- அதுவும் மத்ஸ்யகன்னியிடம் இருந்து.

வீட்டில் இருப்பவர்கள் பயப்படுவது போல மத்ஸ்யகன்னியிடம் போகிற போக்கில் கடலை போட்டுவிட முடியாது என நினைக்கிறேன். ஒருமுறை மீன் வாங்க போயிருந்த போது “இந்த மீன் எல்லாம் தண்ணீரில் பிடிக்கிறாங்களா?” என்று கேட்டுவிட்டேன். அதற்கு அவள் முறைத்த முறைப்பு இருக்கிறதே- Terrific. உண்மையில் “இந்த மீன் எல்லாம் ஏரித்தண்ணீரில் பிடிக்கிறாங்களா?” என்றுதான் கேட்க விரும்பினேன். ஆனால் சில பல ஆடை விலகல்களின் காரணமாக ‘டங் ஸ்லிப்’ ஆகிவிட்டது. ஆனால் இதையெல்லாம் விளக்கி அவளிடம் நல்ல பெயர் வாங்கும் தைரியம் இல்லை. முறைப்பிலேயே கண்களில் கத்தியைக் காட்டியிருந்தாள். அதுவும் கசாப்புக்கடை கத்தி. வெட்டினால் அவ்வளவுதான். 

இப்படி மத்ஸ்யகன்னியும் மீனுமாக ஓடிக் கொண்டிருந்த ஞாயிறுகளில் இருந்து விதிவிலக்காக நேற்று மதியத்தில் பயங்கர ரகளை. ஒரு பெண்மணி மத்ஸிடம் தாறுமாறாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார். கன்னடம்xதமிழ். சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த போது இரண்டு பேரும் கன்னடத்திற்கு மாறியிருந்தார்கள். சப்டைட்டில் இல்லாத ஸ்பானிஷ் படம் போல ஓடிக் கொண்டிருந்தது. கன்னடக்கார பெண்மணிக்கு ஆதரவாக மேலும் இரண்டு பெண்கள் களமிறங்கிய போது மத்ஸ்க்கு வேறு வழியிருக்கவில்லை. அவள் யாரையாவது அழைக்க வேண்டுமானால் ஓசுரிலிருந்து வந்தால்தான் உண்டு போலிருந்தது. சில நிமிடங்கள் போராடிக் கொண்டிருந்தாள். மூன்று பெண்மணிகளில் ஒருத்தி யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒரு அடியும் போட்டுவிட்டாள். மத்ஸ் கத்தியைத் தூக்கிக் கொண்டாள். சப்தம் அதிகரிக்கத் துவங்கியது. இரண்டு மூன்று ஆண்கள் அவர்களைத் தடுக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்ணின் கையில் கத்தி பாய்ந்துவிட்டது. இப்பொழுது கூட்டமே மத்ஸுக்கு எதிராகத் திரும்பிவிட்டது. பெண்கள் ஆக்ரோஷமாகிக் கொண்டிருந்தார்கள். மத்ஸ் சற்று அமைதியானாள். அடுத்த சில நிமிடங்களில் மத்ஸ் அந்த இடத்திலிருந்து நகரத் தொடங்கினாள். அத்தனை மீனையும் அதே இடத்தில் விட்டுவிட்டு ஓடுகிறாள் என்றால் விவகாரம் பெரிது போலத் தெரிந்தது. பெண்கள் துரத்தத் துவங்கினார்கள். ஆண்கள் யாரும் நகரவில்லை. ஆனால் மத்ஸின் ஓட்ட வேகத்தில் துரத்திய பெண்களால் பாதி கூட ஓட முடியவில்லை. திரும்பி வந்து மூன்று பெண்களும் மீன்களை அள்ளிக் கொண்டார்கள். இன்னும் சிலரும் மிச்சமிருந்த மீன்களை பொறுக்கிக் கொண்டார்கள்.

கடைசி வரை என்ன பிரச்சினை என்றே தெரியாமல் சண்டையை வேடிக்கை பார்ப்பது கொடுமையானது. பக்கத்திலிருந்தவரிடம் விசாரித்தேன். ‘அந்தக் மீன்காரி அந்தம்மா புருஷனை வளைச்சுட்டாளாமா சார், அதுக்குத்தான் பச்சை பச்சையா திட்டிக்கிறாங்க’ என்றார்.  ‘மிஸ் ஆகிவிட்டது’.மொழி தெரிந்திருந்தால் காதுகளில் தேன் பாய்ந்திருக்கக் கூடும். இனி மத்ஸ் இந்தப்பக்கம் வருவாளா என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஆள் அவள் எங்கிருந்தாலும் போகக் கூடும் என்று தோன்றியது. அந்தம்மாவின் கணவனைப் பார்த்தால் ஒரே கேள்விதான் கேட்க வேண்டும். என்ன கேள்வியா? காதைக் கொடுங்கள். தனியாகச் சொல்கிறேன்.