nanrasithathu.blogspot.com

வியாழன், 31 மார்ச், 2011

தலைவர் வர்றாரு சிக்கனை ஒளிச்சு வையுங்கப்பா!!!


என் டி.வி.எஸ் பிப்டியில் ஒரு மாதமாக ஹாரன் வேலை செய்யவில்லை. ஒரு மழை நாளில் பிங்க் நிற ஸ்கூட்டியோடு உரசியபடி நின்று நனைந்ததிலிருந்து என் வண்டியின் தொண்டைக்கு இந்த கதி.



பொதுவாக, என் வண்டியில் ஹாரனை அழுத்தினால் காகம் கக்கா போகிற போது கரையுமே அது போன்றதொரு மெல்லிய குரல் புறப்பட்டு புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கிவிடும். வண்டியை ஸ்டாண்டு தட்டி நிறுத்திவிட்டு குத்த வைத்து காது கொடுத்து உன்னிப்பாக கவனித்தால் கேட்க வாய்ப்பிருக்கிறது. கடந்த ஒரு மாதமாக அதுவும் வேலை செய்யவில்லை.



இப்படி ஒரு பலவீனமான ஹாரன் வேலை செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது.



வேலை செய்யாத இந்த ஹாரனை வைத்துக்கொண்டு சென்னை மாநகரில் ஒரு மாதம் வண்டியில் சுற்றியிருக்கிறேன். யார் மீதும் மோதாமல் தப்பித்திருக்கிறேன். அவ்வப்போது சைட் அடிக்கவும் கிளம்பியிருக்கிறேன்.



என் உயிர் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் அபரிமிதமான அக்கறைக்கு அடிபணிந்து ஹெல்மெட் அணிந்தபடி, எத்திராஜ் பக்கம் என் டூ வீலரில் போனால் கல்லூரி பெண்கள் கும்பலாய் நின்று "ஏதோ பெரியவர்" வருகிறார் எனும் தோரணையில் ஒதுங்கி மரியாதையோடு வழிவிடுவது காலக்கொடுமை.



முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற என் ஆறாம் வகுப்பு ஆசிரியை அமுதாவின் கூற்றுக்கிணங்க நானும் முயற்சியை கைவிடுவதில்லை. பெண்கள் கல்லூரிகளுக்கு முன் அவ்வப்போது வளைய வருவதுண்டு. இருந்தபோதும் என்னை யாரும் ஏரிட்டும் பார்ப்பதில்லை. போகட்டும்.... ஏற இறங்க பார்க்கலாம் இல்லையா? அதுவும் இல்லை.?



அப்பாச்சிக்கு ஒரு டப்பாசி. யமஹாவுக்கு ஒரு தமன்னா. டி.வி.எஸ் பிப்டிக்கு தீபிகா படுகோனேவா? Too much?



பி.எம்.டபிள்யூ வுக்கு பிப்டி கேஜி தாஜ்மஹால் சிக்கலாம்.



என்னை போன்றவர்களுக்கு பிப்டி அல்லது சிக்ஸ்டி கேஜியில் ஹவுசிங் போர்டு பிளாட் ஏதாவது சிக்குமா என்று தேடியபடி குடிசை மாற்று வாரிய அலுவலகம் வழியாக பீச் ரோட்டில் வந்துகொண்டிருந்தேன்.



சாலையில் கூட்டம் இல்லை. நான் பிளாட்பாரத்திலிருந்து மூன்று இஞ்ச் இடைவெளி விட்டு அதிவேகமாக 30 கிலோமீட்டர் வேகத்தில் பறந்துகொண்டிருந்தேன். அப்போது பின்னாலிருந்து ஒரு ஒலி கேட்டது.



கீ....கீ...கீ...கீ...என்று. சாலையிலிருப்போரை சிதறி ஓடவைக்கும் ஒரு மிருகத்தின் வன்குரலை போல் அது ஒலித்தது. கீ...கீ...கீ...கீ....நான் என் வேகத்தை சடாரென குறைத்தேன்.



கீ.கீ...கீ...கீ... தொடர்ந்தது ஒலித்துக்கொண்டேயிருந்தது. அந்த குரல் கீ...கீ...கீ.... கீ...என்பது போலல்லாமல் "த்தா...நவுரடா நாயே...!" என்றிருந்தது . அந்த குரல் இப்போது என்னை நெருங்கிவிட்டது. இந்திய ஜனநாயகத்தை ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் விதமாக சபிக்கப்பட்ட, உழைத்த காசில் ஒரு ஓட்டை டி.வி.எஸ் பிப்டியில் மட்டுமே வலம்வரும்படி வஞ்சிக்கப்பட்ட எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன.



"அது நம்மள நோக்கி வந்துகிட்டிருக்கு" என்ற தமிழாக்கத்துக்கு சிதறி ஓடும் வெள்ளைக்காரர்களை போல் அந்த குரலுக்கு முன்னால் நான் ஓடியிருக்கவேண்டும். மூச்சு இரைத்தது.சடாரென பிரேக் பிடித்து நிறுத்தினேன்.



சற்றே தைரியத்தை வரவழைத்து பின்னால் அப்படி என்ன தான் வருகிறது என்று திரும்பி பார்ப்பதற்குள் கீ...கீ...கீ...கீ...என்ற ஒலியுடன் ஒரு சூராவளியை போல் அந்த வாகனம் என்னை கடந்து சென்றது. அந்த வாகனம் ஒரு கொளுத்த சிறுத்தையை போலிருந்தது. அதன் மூக்கில் கட்சிக்கொடி. பேக்கில் பேன்ஸி நம்பர். அக்மார்க் அரசியல்வாதியின் கார்.



என் டி.வி.எஸ் பிப்டியை பார்த்தேன். அந்த சிறுத்தை தின்ற மீதி எலும்புத்துண்டு போல் பரிதாபமாக காட்சியளித்தது.இவர்கள் அரசியல்வாதிகள். சர்வ வல்லமை படைத்தவர்கள்.

கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள். லோக்கல் இன்ஸ்பெக்ட்டரை ஓர காலில் அமுத்துவார்கள். வாடகை வீட்டில் இருந்துகொண்டே ஹவுஸ் ஓனரிடம் வாடகை வசூலிப்பார்கள். திறந்த வீட்டில் நாயை போல் நுழைந்து வீட்டையே சொந்தம் கொண்டாடுவார்கள். உங்கள் இடத்தையும் சேர்த்து அவர்களே வேலி போட்டுக்கொள்வார்கள். உங்கள் இடத்தில் அவர்களே தென்னை மரம் நடுவார்கள். பிறகு நீங்கள் அலறி அடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போனால் லோக்கல் இன்ஸ்பெக்ட்டரை ஒரே காலில் ஆப் செய்வார்கள். கோர்ட்டுக்கு அலைவதிலும் பத்து இருபது வருடம் கழித்து கிடைக்கப்போகும் நீதியின் வெற்றிக்களிப்பில் கும்மி அடிக்கிறது உங்கள் பாவப்பட்ட ஜனநாயகம்.



இது போன்ற ஜனநாயக தீவிரவாதிகளின் அதிபயங்கர வாகனங்கள் செல்லும் சென்னை சாலையில் நான் டி.வி.எஸ் பிப்டியில் இத்தனை ஆண்டுகள் அந்த கொடூர வாகனங்களிடமிருந்து தப்பித்து பத்திரமாக பயணித்திருப்பதே ஒரு சாதனை அல்லவா?



நம்மை இடித்துவிட்டு நம் மீதே வழக்கு போடும்படியான வல்லமை பொருந்து இந்திய ஜனநாயகம் உருவாக்கி விட்டிருக்கும் வன்கொடுமை விலங்குகளை எப்போதேனும் சாலையில் கண்டால் ஒதுங்கி விலகி நடப்பது தானே நமக்கு சேப்டி.



அன்பான அரசியல் குஞ்சுகளே!!! உங்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது தான். ஸ்கார்ப்பியோவோ சபாரியோ ஹாரன் சத்தம் உங்களுக்கு கட்டுப்படி ஆகாது. எனவே கார் வாங்கும் போது கூடவே இரண்டு புனல் ஸ்பீக்கர்களை வாங்குங்கள். உங்கள் வாகனத்தின் இருபுறமும் அதாவது ஹெட் லைட்டுக்கு மேலே வரும்படியாக இரண்டு புனல்களையும் கட்டிக்கொள்ளுங்கள். உங்கள் கார் ஹாரனை நேராக அந்த புனலுக்கு கனெக்ஷன் கொடுத்துவிடுவீர்களானால் நீங்கள் மவுன்ட் ரோட்டில் வருவது மாம்பலம் சிக்னல் வரை எதிரொலிக்கும் என்பதை மிக பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



"இப்படி ஹாரன் அடிச்சிட்டு போறதுல உனக்கு ஒரு கெத்து. கலக்கு மச்சி!!! அரசியல் குஞ்சு இல்லையா? எங்கள மாதிரி சமானிய சப்பாணியா நீ?"



ஒரு கட்சிக்கொடி ஒன்றை கட்டிவிட்டால் சாலையின் சக்கரவர்த்தி அல்லவா நீங்கள்.



கடந்த இருவாரங்களாக உங்களை பார்க்க பரிதாபமாக இருக்கிறது. எல்லாம் தேர்தல் முடியும் வரை தான். தேர்தல் முடிந்த மறுகணமே கட்சிக்கொடியை கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவீர்கள். நீங்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்று சாமானியர்களுக்கு தெரியும். ஆனால் எங்கள் துர் அதிர்ஷ்டம் பாருங்கள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை உங்களைத்தான் இந்த சாமானியர்கள் தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது



உன்னை கற்பழித்த பத்து பேரில் யாராவது ஒருவனை தேர்ந்தெடுத்து மணந்துகொள் என்பது போலல்லவா இருக்கிறது இந்த நடைமுறை.



அப்படியானால் தேர்தலை புறக்கணித்துவிடலாமா? நிச்சயமாக கூடாது. அரசியல் குஞ்சுகளுக்கு நாம் ஏற்படுத்தவேண்டிய முதல் கிலியே ஒவ்வொரு குடிமகனும் ஓட்டு போடுவது தான்.



கடந்த வாரம் சிக்கன் வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தேன். கடைக்காரருக்கு திடீரென ஒரு போன் வந்தது. எடுத்து பேசியவர் "சிக்கன் காலி...இல்லை....முடிஞ்சுபோச்சு...." என்று சொல்லிவிட்டு துண்டித்துவிட்டார். அடுத்த நடவடிக்கையாக கடை பையனை அழைத்து இரண்டு பாக்ஸ் சிக்கனை உடனடியாக எடுத்து உள்ளே ஒளித்து வைக்கும்படி கட்ட்டளையிட்டார். பையனும் இரண்டு மூன்று பெட்டிகளை கொண்டு உள்ளே ஒளித்து வைத்தான். நான் போனில் பேசியது யாரென்று கேட்டேன். ஒரு அரசியல் ' வட்ட ' புள்ளியின் பெயரை சொன்னார்.



அரசியல் குஞ்சுகளே பாருங்கள் உங்களுக்கு பயந்து சிக்கனை எல்லாம் கூட ஒளித்து வைக்கவேண்டியிருக்கிறதே.



இப்படி அரசியல்வாதிகள் மக்களிடம் ஓட்டு வாங்கிவிட்டு அவர்களுக்கே சிம்ம சொப்பனமாக திகில் திமிங்கலங்களாக கரன்ட் கண்ணாயிரமாக பட்டா கத்தி பயில்வானாக அபாயகர அண்குண்டாக சூப்பர் சுனாமியாக மக்களோடு மக்களாக வாழ்வது, மக்கள் காட்டு புலியோடு குடும்பம் நடத்துவதற்கு சமம் அல்லவா?.



எனவே அரசியல்வாதிகளை தனியாக ஒரு ஏரியாவில் ஒதுக்கி வைத்து அங்கேயே அவர்களுக்கு பெரிய பெரிய கார்களும் லவுட் ஸ்பீக்கர்களும் இலவசமாக வழங்குவது எம்மை போன்ற சாமானிய சப்பாணிகளுக்கு சேப்டி.



தேர்தல் கமிஷனின் கெடுபிடியால் ஓரளவுக்கு அடக்கி வாசிக்கும் அரசியல் குஞ்சுகள் தேர்தல் முடிந்தவுடன் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.



எனவே ஜனநாயகம் உருவாக்கி விட்டிருக்கும் இது போன்ற நாம் இது போன்ற ஷ்டர்களிடமிருந்து விலகி ஒதுங்கி வாழ்வது நம் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு.



மேலும் சில அதிகப்பிரசங்கி சாமானிய சப்பாணிகள் "நம்ம ஓட்டு வாங்கி ஜெயிச்சவன் இவன், இன்னைக்கு நமக்கு இப்படி பண்றான்" என்று பெரிதாக வருத்தப்படுவதுண்டு. அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் (எலக்ஷன் டைமா அதான் இப்படியே வருது - சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....)



"லெப்ட் கையில இங்க் வச்சுகிட்டு ரைட்டு கையில பஞ்ச் பண்றதோடு உன் கதை முடிஞ்சிடுச்சு. ஆனா ஒரு அரசியல் கட்சி நடத்த ஒரு அரசியல் பிரதிநிதி ஆக ஒரு அரசியல்வாதி படும் பாடு என்னென்ன தெரியுமா? "



எப்போது இந்த தேசத்தில் ஒரு சாதாரண வட்ட செயலாளர் வண்டுமுருகனையாவது டி.வி.எஸ். பிப்டியில் போகும் என்னை போன்ற சாமானியனால் தட்டி கேட்க முடியுமோ....அப்படி ஒரு சட்ட திருத்தம் ஜனநாயகத்தில் வருமோ "மச்சி இப்போ இருக்குற கோர்ட்டு போலீஸ் கேசு எல்லாம் இல்ல மச்சி...." என்றைக்கு என்னை போன்ற டி.வி.எஸ் பிப்டி காரனுக்கும் அரசியல்வாதி பயந்து நாணயத்தோடு நடந்துகொள்ளவேண்டிய [கட்டாயம்] [கட்டாயம்] [கட்டாயம்] வருமோ அன்று தான் உண்மையான ஜனநாயகம் மலரும்.



அதே நேரம் என்றைக்கு இந்த தேசத்தில் "அரசியல்" செய்யவேண்டிய அவசியம் குறைகிறதோ அன்றைக்கு நம் அரசியல்வாதிகளும் திருந்திவிடுவார்கள்.
 
nandri--writervisa.blogspot.com

புதன், 23 மார்ச், 2011

பிரபாகரன் இருக்கிறானா? இல்லையா? - கவிஞர் வாலியின் உருக வைக்கும் கவிதை..!




இன்றைய ஜூனியர் விகடனைப் புரட்டியவுடன் முதல் பக்கத்தில் பட்டது இந்தக் கவிதை..!



விமர்சனங்கள் பலவற்றைத் எதிர்கொள்ளவேண்டிய தருணத்திலும், களத்திலும் கவிஞர் வாலி தற்போது இருந்தாலும், மனிதரிடம் தமிழ் என்னமாய் விளையாடுகிறது..!



மீண்டும், மீண்டும் படிக்க வைத்தது வாலியின் தமிழ்..! பாடுபொருளின் ஒரு பகுதியை மட்டுமே செப்பியிருக்கும் வாலி, பழியை ஏற்றுக் கொண்ட பாவத்தின் மீதியையும் இதேபோல் தன் வாழ்நாளுக்குள் வெளிப்படுத்த வேண்டும் என்று நானும் எதிர்பார்க்கிறேன்..!





சொல்லைக் கல்லாக்கி.. கவிதையைக் கவண் ஆக்கி.. வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்தது கவிதை.. இல்லை.. வெடித்துக் கிளம்பிய வெந்நீர் ஊற்று. அது இது..







கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு

கண்ணீர் அஞ்சலி..

ஒரு

புலிப் போந்தை ஈன்று

புறந்தந்து -

பின் போய்ச் சேர்ந்த

பிரபாகரன் தாய்க்கு; அந்தப்

பெருமாட்டியைப் பாடுதலின்றி

பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?



* * * * *



மாமனிதனின்

மாதாவே! - நீ

மணமுடித்தது வேலுப்பிள்ளை;

மடி சுமந்தது நாலு பிள்ளை!

நாலில் ஒன்று - உன்

சூலில் நின்று - அன்றே

தமிழ் ஈழம்

தமிழ் ஈழம் என்றது; உன்-

பன்னீர்க் குடம்

உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்

கண்ணீர்க் குடம்

உடைத்துக் காட்டுவேன் என்று..

சூளுரைத்து - சின்னஞ்சிறு

தோளுயர்த்தி நின்றது;

நீல இரவில் - அது

நிலாச் சோறு தின்னாமல் -

உன் இடுப்பில்

உட்கார்ந்து உச்சி வெயிலில் -

சூடும் சொரணையும் வர

சூரியச் சோறு தின்றது;



அம்மா!

அதற்கு நீயும் -

அம்புலியைக் காட்டாமல்

வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,

தினச் சோறு கூடவே

இனச் சோறு ஊட்டினாய்;

நாட்பட -

நாட்பட - உன்

கடைக்குட்டி புலியானது;

காடையர்க்கு கிலியானது!



* * * * *



தம்பி!

தம்பி! - என

நானிலம் விளிக்க நின்றான் -

அந்த

நம்பி;

யாழ்

வாழ் - இனம்

இருந்தது - அந்த..

நம்பியை

நம்பி;

அம்மா!

அத்தகு -

நம்பி குடியிருந்த கோயிலல்லவா -

உன்

கும்பி!



* * * * *



சோழத் தமிழர்களாம்

ஈழத் தமிழர்களை..

ஓர் அடிமைக்கு

ஒப்பாக்கி; அவர்களது

உழைப்பைத் தம் உணவுக்கு

உப்பாக்கி;

செம்பொன்னாய் இருந்தோரை -

செப்பாக்கி; அவர்கள் வாழ்வை

வெட்ட வெளியினில் நிறுத்தி

வெப்பாக்கி;

மான உணர்வுகளை

மப்பாக்கி;

தரும நெறிகளைத்

துப்பாக்கி -

வைத்த காடையரை

வீழ்த்த...

தாயே உன்

தனயன் தானே -

தந்தான்

துப்பாக்கி!



* * * * *



இருக்கிறானா?

இல்லையா?

எனும் அய்யத்தை

எழுப்புவது இருவர்;

ஒன்று -

பரம்பொருள் ஆன பராபரன்;

இன்னொன்று

ஈழத் தமிழர்க்கு

அரும்பொருள் ஆன

பிரபாகரன்!



* * * * *



அம்மா! இந்த

அவல நிலையில் - நீ..

சேயைப் பிரிந்த

தாயானாய்; அதனால் -

பாயைப் பிரியாத

நோயானாய்!

வியாதிக்கு மருந்து தேடி

விமானம் ஏறி

வந்தால் சென்னை அது -

வரவேற்கவில்லை உன்னை!

வந்த

வழிபார்த்தே -

விமானம் திரும்பியது; விமானத்தின்

விழிகளிலும் நீர் அரும்பியது!



* * * * *



இனி

அழுது என்ன? தொழுது என்ன?

கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்

கன்ன வயல்களை உழுது என்ன?

பார்வதித் தாயே! - இன்றுனைப்

புசித்துவிட்டது தீயே!

நீ -

நிரந்தரமாய்

மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்

தங்க இடம் தராத - எங்கள்

தமிழ்மண்

நிரந்தரமாய்த்

தேடிக் கொண்டது பழி!



நன்றி : ஜூனியர்விகடன் - 06-03-2011





ஞாயிறு, 6 மார்ச், 2011

ஆதியிலொடு அன்பிருந்தது...

ஆதியிலொடு அன்பிருந்தது...


''நீ நீயாக இரு!''

''இல்லை... நான் நீயாக இருக்க விரும்புகிறேன்.''
''அது சாத்தியமற்றது. போலியானது.''
''ஏன்?''
''நீ நீயாக இருக்கும்போது, என்னை அதிகம் நேசிப்பவளாகிறாய். எனக்காக மாறும்போது, நீ உள்ளிருந்து எங்கேயோ என்னை வெறுக்கத் தொடங்குவாய்.''
''உனக்காகச் சில விஷயங்களை இழக்கும்போதும், விட்டுக்கொடுக்கும்போதும், வாழும்போதும், அது எனக்கு அதீத சுகத்தை அளிக்கிறது.''
''அதைத்தான் போலியானது என்கிறேன்.''
''ஏன்?''
''ஏனென்றால், உலகத்திலேயே மிக உன்னதமான விஷயம், சுயமாக இருப்பதும் சுதந்திரமாக வாழ்வதும். ஒவ்வொரு மனிதரின் அதிகபட்சத் தேடல் அதுதான்.''
''நானும் அப்படியே வாழ்கிறேன். உன்னை நேசிப்பதும் உனக்காக என்னை மாற்றிக்கொள்வதும் எனது சுதந்திரம் இல்லையா?''
''இல்லை. அது உனக்கு நீயே விதித்துக்கொள்ளும் கட்டாயம். இந்தக் கட்டாயத்தை ஒரு கட்டளையாக நான் உனக்கு இட்டால், உனக்கு எதிரியாகிவிடுவேன். உனக்கு நீயே விதித்துக்கொள்வதால், அது உனக்குச் சுகமாகிறது.''
ஓர் ஆணிடம் இருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்பது விநோதமாக இருக்கிறது அல்லவா? ஆனால், அவன் அப்படித்தான் இருக்கிறான். நீ நீயாக இரு எனச் சொல்லும் அளவுக்கு நான் எதையும் இழந்துவிடவில்லை. திடீர் என அதிகக் காதல்வயப்பட்டதைப்போல பிதற்றத் தோன்றியது. அதனாலேயே, அவனுக்காகச் சில விஷயங்களைச் செய்யத் தொடங்கினேன். ஆண்டாண்டு காலமாக, எல்லாப் பெண்களும் எல்லா வீடுகளிலும் செய்துகொண்டு இருப்பதுதான். அவனுக்காகச் சமைப்பது. அவனுக்குப் பிடித்ததை உடுத்திக்கொள் வது. அவனுக்குப் பிடிக்குமே என அலங்கரித்துக்கொள்வது... காத்திருப்பது... ஓடி வருவது... அவனுக்கு உறக்கம் வரும் வரை விழித்து இருப்பது. சும்மா செய்து பார்ப்போமே என்று செய்ததன் விளைவுதான் இந்த உரையாடல்.
''ஏன், என்னை உனக்கு அதிகாரியாக இருக்கப் பழக்குகிறாய்?''
''இப்படிச் செய்தால், நான் உனக்குக் கீழாகிவிடுவேனா என்ன?''
''உடனடியாக இல்லை என்றாலும், என்றேனும் ஆகிவிடுவாய்.''
''எப்படி?''
''இன்று நீயாக விரும்பிச் செய்வதை, நாளை நீ விரும்பாதபோது நான் எதிர்பார்த்தால், அப்போது நான் ஓர் அதிகாரி யைப்போல உனக்குக் கட்டளை இடுவேன். நீ அடிமையைப்போலச் செயல்படுவாய்.''
''என் அம்மாவும் பாட்டியும் அவர்களைப் போன்ற எல்லோருமே இப்படித்தானே இருந்தார்கள்... இருக்கிறார்கள். உனக்காக என் வாழ்வை வடிவமைத்துக்கொள்ளும்போது, அதில் ஒரு அதீத சந்தோஷம் கிடைக்கத்தானே செய்கிறது.''
ஜன்னல் ஓரமாக சுவரில் சாய்ந்தபடி பேசிக்கொண்டு இருந்த என் அருகில் வந்து, கழுத்தைக் கட்டிக்கொண்டான். என் கண்களை நெருக்கத்தில் பார்த்து அவன் கேட்டான், ''நிஜமாகவே இப்படி இருப்பது உனக்குச் சந்தோஷத்தைத் தருகிறதா? அப்படி எனில், அது நிரந்தமானது அல்ல. உன் அம்மாவுக்கும் பாட்டிக்கும் அது நிலையானதாக இருந்திருக்காது. அன்பு என்பது தியாகம் அல்ல. இட்டு நிரப்பும் செயலும் அல்ல. அது உணர்தலும் பகிர்தலுமான அற்புதம். என் ஷூ லேஸைக் கட்டிவிட நீ உன் கைகளை வற்புறுத்தினால், அது ஒருபோதும் ஓவியங்களைத் தீட்டும், கவிதைகளை எழுதும், சிலைகளைச் செதுக்கும் சுகத்தை உணராது. வாழ்க்கை முழுவதும் உன்னை சிறைப்படுத்திக்கொண்டு, யாரையும் நேசிக்க வேண்டியது இல்லை. உண்மையில் அன்புக்கு இன்னொரு பெயர் சுதந்திரம். நீ சுதந்திரமாக இருந்தால், சிந்தித் தால்... உன்னிடம் நிறைய அன்பு இருக்கும்.''
நான் சிரித்துக்கொண்டேன். அவன் என்னை முத்தமிட்டான். அந்த உன்னதச் சுவையில் கரைந்து, காணாமல் போய், மீண்டு வரச் சில நிமிடங்கள் ஆனது.
அவன் தர்க்கம் உண்மையானது. ஆனால், ஓர் ஆணாக இருந்தும், அவன் ஏன் என் காலணியில் நின்றுகொண்டு இருக்கிறான் என நான் யோசித்தேன். உலக இயங்கியல் விதிக்கு எதிராக எப்படிப் பிறந்தான்? அவன் என்றேனும் தன் பாலினப் பெருமையை அறிந்து இருந்தானா என எனக்கு வியப்பு எழுந்தது.
''ஆண்மையை விரும்புவது இல்லையா நீ?''
''எது ஆண்மை?'' என அவன் கேட்டதும், அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல அதைச் சுமந்துகொண்டு இருக்கும் பலரையும் நான் நினைத்துக்கொள்ள வேண்டி இருந்தது.
அந்த யோசனையிலேயே நான் வார்த்தைகளை உதிர்த்தேன். ''செருக்கு, வீரம், கர்வம், திமிர், ஆதிக்கம்... எல்லாமே தனக்குக் கீழ் என நினைத்துக்கொள்ளும் மன நிலை. இவை எல்லாம் உனக்குப் பயிற்றுவிக்கப்படவில்லையா?''
''ஏன், ஆண்மை என்பதற்கு அன்பு, கனிவு, அடக்கம், பொறுமை என அர்த்தம்கொள்ள முடியாதா?''
''நீ தவறான அர்த்தங்களைக் கூறுகிறாய். அன்பில் நெகிழ்ந்து உருகுதல் ஆண்மைக்கு இல்லை. எனக்கு என்னவோ அது எப்போதும் சூழ்ச்சிகளைச் சிந்திப்பதாகத் தோன்றுகிறது!'' - அவன் கைகளில் இருந்து என்னை நான் விடுவித்து நகர்ந்தேன்.
''சரி, எது பெண்மை?'' என்றபடி மறுபடியும் என்னைத் தன் பக்கம் இழுத்தான்.
இந்த முறை அவனது கழுத்தை எனது கைகள் சுற்றி வளைத்துக்கொண்டன. கனத்த நெஞ்சில் நெற்றி பதித்து, சுவாசத்தை உள்ளே இழுத்துச் சொன்னேன்...
''நான் அதை அறிந்து இருக்கவில்லை. என் உறுப்புகளை வைத்து அதற்கு ஏற்றபடி குணத்தை நான் வளர்த்துக்கொள்ளவில்லை.''
என் பதிலில் என்ன உணர்ந்தானோ, இன்னும் அழுத்தமாக அணைத்துக்கொண்டான். என் காது அருகே அவன் குரல் கசிந்தது.
''நாம் முதன்முதலில் சந்தித்தபோது, கடற் கரையில் இருந்தோம்.''
''ஆம். யாருமற்ற கடற்கரையில்...''
''உப்புத் துகள் நிறைந்து தத்தளித்தது கடல்.''
''தாழ்வாகப் பறந்து அலையைத் தொட்டபடி விளையாடின பறவைகள்.''
''நண்டுகளைப் பின் தொடர்ந்தோம்.
அப்போதுதான் நான் என் காதலைச் சொன்னேன். நீ என்ன செய்தாய்?''
''உன் கைகளை இழுத்துக்கொண்டு ஓடினேன். மணலில் கால் புதைய வெகு நேரம், வெகு தூரம். மூச்சு இரைத்து, வியர்த்து மணலில் குப்புற விழுந்து அப்படியே கிடந்தோம். நிலா நம் தலைக்கு மேல் வரும் வரை பேச்சற்று அப்படியே கிடந்தோம். மணலுக்குக் கை கால்கள் முளைத்ததைப்போல புதைந்துகிடந்தோம்.''
''அப்போது நீ பெண் எனவோ... நான் ஆண் எனவோ நான் உணர்ந்து இருக்கவில்லை. என் கைகளை இழுத்துக்கொண்டு ஓடும் உன் துடிப்பில் இந்த உலகைக் கடந்துவிடும் வேகத்தை நான் பார்த்தேன். தன் இளஞ் சிறகுகளால் வானத்தை அளக்கும் பறவையாக நீ தென்பட்டாய். இத்தனை சுதந்திரமானதொரு கால்களுக்கு என் பார்வைகூடத் தடையாக இருக்கக் கூடாது. பெண்மை பயிற்றுவிக்கப்படாத உன் சுயம் எத்தனை தீர்க்கமானது எனில், ஆண்மை பயிற்றுவிக்கப்படாத என் சுயத்தைப்போல. குழந்தைக்கு ஏது பாலினம்? நாமும் அதுபோலவே, வெறும் இரு மனிதர்கள். அவ்வளவே! எனக்கான எந்தக் குணத்தையும் நீ கொண்டு இருப்பாய். உனக்கான எந்தக் குணத்தையும் நானும்கொண்டு இருப்பேன்.''
அரவணைத்த நிலையிலேயே என்னை நகர்த்திக்கொண்டு வெளியே வந்தான். புல்வெளியில் பாதங்கள் பதிந்தன. பனித் துளியின் ஈரம் விரல் களுக்கு இடையில் சில்லிட்டுக் கசிந்தது. இத்தனை லகுவாக வருடும் கலையைக் காற்று எங்கேதான் கற்றுக்கொண்டதோ... காற்றைவிடவும் இதமாக அவனது நெருக்கம்!
''நாம் பறவைகள். விரும்பிய திசையில் பயணித்துவிட்டு அன்புக்காகக் கூடு அடைகிறோம். உன்னை நான் நினைவுகளாலேயே ஏந்திச் செல்கிறேன். வெறும் உடலாக என்னோடு உன்னை இழுத்துச் செல்வேன் எனில், அது சுமை. அந்தச் சுமை எனக்கு அன்பையும் நெருக்கத்தையும் சிதைத்துவிடும்.''
அவன் இப்படியேதான் இருக்கிறான், சிறகுகளின் அவசியத்தைச் சுட்டிக்காட்டியபடி. திசைகளையும் பறத்தலின் சுகத்தையும் பேசியபடி.
எங்கள் தனிமை மிக அழகானது. நான் இல்லாத அவனும், அவன் இல்லாத
நானுமாகத் திரியும் தருணங்களைவிடவும், நானும் அவனும் இணைந்து இருக்கும்போது நாங்கள் அனுபவிக்கும் தனிமை அத்தனை சுகமானது. இன்னும் இறுக்கமாக உள் இழுத்துக்கொள்ளும்போது, அவன் நீரில் கரையும் திடப் பொருளைப்போல என்னுள் கரைகிறான்.
ஓரிரவு...
எங்கள் அறையில் நாங்கள் படுத்துக்கிடந்தபோது, ஜன்னல் சட்டத்தில் நிலவு வந்து அமர்ந்தது. ச்ச்சூவென விரட்டினால், ஒரு பறவையைப்போல இந்த நிலா பறந்துவிடும் என்று அவன் சொல்ல, வெகு நேரம் நாங்கள் அதை விரட்டிக்கொண்டு இருந்தோம். பின் இரவு வரை நீண்ட இந்த விளையாட்டு முடிந்தபோது, எங்கெங்கும் சிதறிக்கிடந்த முத்தங்கள் வானத்தில் ஏறி நட்சத்திரங்கள் ஆகின. அப்போது நான் அவனிடம் நான் இப்படிச் சொன்னேன். ''உண்மையில் முத்தத்துக்கு வடிவம் என்று ஏதேனும் இருக்க முடியும் என்றால், அது நட்சத்திரத்தைப்போலவே இருக்கும்.''
''ஏன் அப்படி?''
''கற்பனை செய்து பார்.''
''உதடு குவிந்து மலரும்போது முத்தமும் மலர்கிறது. அது பூக்களின் வடிவ மாகவும் இருக்கலாம்.''
இதழ்களைக் குவித்துப்பார்த்து, ''இருக்கலாம்'' என்றேன்.
அந்த இரவு முழுவதும் நட்சத்திரங்களாலும் பூக்களாலும் நிறைந்து தழும்பியது.
பின் ஒருநாள், நாங்கள் நதிக்கரை ஓரமாக வெகு தொலைவு நடந்துகொண்டு இருந்தோம். அந்தி சாயும்போது கீழ் இறங்கும் சூரியனின் ஒளியில் நதியின் மெல்லலைகள் தத்தளித்தன. நீரின் இருப்பு அந்தப் பகுதியையே குளிர்வித்தபடி இருந்தது. நேசிக்கிறவனோடு நடந்தபடி நதி மூலத்துக்கே போய்விட மாட்டோமா என்று எண்ணினேன். அதே கணத்தில், ''உன்னோடு நடக்கும்போது, என் கால்கள் சிறகுகளைக் கட்டிக்கொள்கிறது. அப்படியே உலகைச் சுற்றி வரலாம்போல...'' என்றான்.
நதியின் மீது, அதன் அலைகள் மீது, அங்கு இருந்த மரங்கள் மீது, அதுவரை நீலம் பூசிக்கிடந்த வானத்தின் மீது, அதிலே பறந்த பறவைகள் மீது... மெள்ளப் படர்ந்த இருள் எங்கள் விழிகளை நிறைத்து, பின்னர் இதயம் வரை இறங்கி இருந்தது. என் விரல்களை அவன் பற்றிக்கொண்டு இருந்தான். சில நேரங்களில் அனிச்சையாக அழுந்தப் பிடிப்பதும் பின்னர் விடுவிப்பதுமாக இருந்தது அவனது செய்கை. இருளில் தத்தளித்தபடி கூடு திரும்பும் இரு பறவைகளைப்போல நாங்கள் இருந்தோம். ''திரும்பி நடக்கலாமா?'' என்றான். ''இல்லை. இன்னும் கொஞ்சம் தூரம் நடக்கலாம்'' என்றேன். கரையில் நடந்துகொண்டு இருந்த எங்களையும் சேர்த்து இழுத்தபடி நகர்ந்து கொண்டு இருந்தது நதி. இருட்டு வெளியில் வெளிர் மணலுக்கு இடையில் பெரிய பாம்பைப் போல அது ஊர்ந்து போனது.
''அன்பு பெரியதா, சுதந்திரம் பெரியதா?'' என நான் கேட்டபோது, அவன் புன்னகைத்தபடி தன் கால் பெருவிரலால் நதி நீரை மெள்ளத் தொட்டு விளையாடிக்கொண்டு இருந்தான். அவனுக்குத் தெரியும் என் எல்லாக் கேள்விகளுக்குமான பதில் என்னுள்ளேயே புதைந்துகிடக்கும் ரகசியம். எனினும் அதன் தடயமே காட்டாமல், என் கேள்விகளை உள்வாங்குகையில் அவனிடம் ஒரு மிளிர்வை நான் காண்கிறேன்.
நீரில் இருந்து தன் கால்களை விடுவித்துக்கொண்டு என் அருகில் வந்தான். ''நாம் எல்லோ ரும் அன்புக்குக் கட்டுப்படுகிறவர்கள்தான். உலகின் எந்த உயிரையும்போல, எல்லாவற்றையும் அதற்காக இழக்கத் துணிகிறவர்கள்தான். ஆனால், சுதந்திரமற்று அன்பை நீட்டிக்கச் செய்ய முடியாது. அன்பா... சுதந்திரமா என்று வரும்போது, நாம் தாராளமாக அன்பை இழக்கலாம்.''
''அப்படி எனில், எந்த அன்புக்கும் எல்லை இருக்கிறது. நீ என் மீது கொண்டு இருப்பதாக நான் நம்பும் அளவற்ற அன்புக்கும்.''
''எல்லையற்றது என இங்கு எதுவுமே இல்லை பெண்ணே. நாம் நின்று இருக்கிற திசையில் அது புலப்படாமல் போகலாமே தவிர, உண்மையில் எல்லாமே எல்லைக்கு உட்பட்டது.''
''சுதந்திரத்துக்கும்தானே?''
''ம். உன்னைப் பாதிக்காத வரைதான் என் சுதந்திரம் அழகு. ஆக, அது எல்லைதானே! நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரின் சுதந்திரத்தைக் கொண்டாடத் தொடங்கும்போது, நம்முடையது பாதுகாப்படைகிறது!''
திரும்பி நடக்கத் தொடங்கி இருந்தோம். நதியும், எங்களின் நிழல்களும், அமைதி தழும்பும் எங்கள் மனநிலையும் அப்பொழுதை ஒரு புகைப்படத் தருணமாக என்னுள் உறையச் செய்தன.
இப்பூமியின் முதல் மனிதர்கள் நாங்களோ எனத் தோன்றியது எனக்கு. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் செலுத்திக்கொள்ளாத கட்டுப்பாடுகளும், ஒருவர் மீது ஒருவர் நிகழ்த்திக்கொண்டு இருக்கும் அன்பும், வனாந்திரங்களுக்குள் சுற்றி, தொலைக்கவோ சேமிக்கவோ எதுவும் அற்றுத் திரியும் நிலையும், ஒவ்வொரு நாளும் இந்த எண்ணத்தை உயிர்ப்பித்துக்கொண்டு இருந்தன.
கட்டுப்பாடுகள் அறிந்திராத ஆதி மனிதன், நிச்சயம் இவனைப்போலவே இருந்திருப்பான். அன்பு எனும் சிறையால் அவன் யாரையும் அடக்கி இருக்க மாட்டான். உயிரைப் பொருளாகப் பார்க்கும் தவறு அவனுள் நிகழ்ந்து இருக்கவே செய்யாது. விதையில் இருந்து துளிர்விடும் ஒரு செடியைப்போல, ஓட்டை உடைத்துக்கொண்டு வரும் ஒரு குஞ்சைப்போல, உதிரம் கொட்டப் பிரசவிக்கும் ஒரு விலங்கைப்போல அவன் பார்த்ததும் உணர்ந்ததும் உயிராகவே இருந்திருக்கும். அசைவும் அதில் தேக்கப்பட்ட உணர்வுகளுமாக அவன் பார்த்தது, அறிந்தது அத்தனைக்கும் வாழ்வு இருந்தது. காகிதங்களும் உலோகமும் அந்த உயிர்களின் காலடிகளில் எங்கோ ஆழத்தில்கிடந்தன. தான் உணர்ந்த வலி எல்லாவற்றுக்கும் பொது என நம்பிஇருப்பான்.
இன்று இவனும் அப்படித்தான் இருக்கிறான். உலகின் முதல் பெண்ணைப் போல என்னைக் கொண்டாடுகிறான். என்னோடு அலைகிறான். முன்பு ஒரு முறை, ஆச்சர்யம் ஒன்றைப் பரிசளிப்பதாகக் கூறி, எங்கேயெனச் சொல்லாமலேயே நெடும் பயணமாக வனாந்திரம் ஒன்றுக்கு அழைத்து வந்தான்.
சூரியன் ஒளிரும் பகலையும் இரவாக்கி விடும் வல்லமையோடு, அடர்ந்து திரண்டு இருந்தது வனம். அது வரையிலும் அப்படி ஒரு கானகத்தை நான் பார்த்தது இல்லை. பல ஆயிரம் ஆண்டுகள் பழமை யான மரங்களின் மூர்க்கமான இலைகளைக் கிழித்தால், அந்த முதிர்ச்சியில் அவை கிறீச் எனச் சத்தமிட்டன.
அவன் அத்தனை மெதுவாகவும் கவனமாகவும் நடக்க, அவ்வெளியின் புதுமையில் நான் துள்ளிக்கொண்டு இருந்தேன். என் துள்ளலின் வேகத்தில் சரசரவெனச் சத்தம் போட்டன சருகுகள்.
இலை இடுக்குகளின் வழியாக உயர இருந்து கசியும் ஒளிக் கீற்றைத் தன் கைகளில் ஏந்தினான். பின்னர், இரு கைகளையும் பரப்பி, அண்ணாந்து, கண்கள் மூடி காட்டின் பச்சை வாசத்தை உள்ளிழுத்தான். மரக்கிளையில் அமர்ந்து இருந்த என்னை நோக்கி அவனது கைகள் நகர்ந்தன. தலை அசைத்து ''வா'' என்றான். பாயும் அம்பு என அவனிடம் வந்தடைந்தேன்.
''நாம் ஆடைகளைக் களைந்துவிடலாம்.''
''ஏன்?''
''நாம் இப்போது ஆதி மனிதர்கள். இங்கு இருக்கப்போகும் ஒவ்வொரு நொடியையும் நாம் அப்படித்தான் கழிக்கப்போகிறோம்.'
''உனக்கு விருப்பம் இல்லை என்றால், நாம் இலைகளால் ஆன ஆடையைத் தயார் செய்துகொள்ளலாம்.''
''எனக்குச் சிரிப்புதான் வந்தது. என்ன சொல்கிறாய்? எப்படி முடியும்?''
''முடியும்'' என்றபடி, பெருத்த இலைகளையும், குறுகிய கொடிகளையும் சேகரிக்கத் தொடங்கினான். நானும் அவனோடு இணைந்தேன்.
சருகுகளின் மேல் அமர்ந்து இலைகளை இணைத்து முடிச்சிடத் தொடங்கினோம்.
ஒன்று... இரண்டு... மூன்று... தோரணம்போல அடுக்கடுக்காகத் தொங்கிய இலைகளை இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டபோது, அது ஆடையாகிக் கனத்தது. சிவந்து கூம்புபோல நீண்டு இருந்த பூக்களைக் கொய்து தலையில் சூடிக்கொண்டோம்.
பசி எடுத்தபோது மரங்களில் ஏறி பழங்களைப் பறித்தோம். அவன் கிழங்குகளைத் தேடி அலைந்தான். காட்டாற்றில் மூழ்கி எழுந்தோம். உயர்ந்த மரத்தின் உச்சத்தில் இருந்து தொங்கிய கொடியைப்பற்றி மேலே ஏற முயன்றோம். அது முடியாமல் போகவே, விழுதுகளைப் போன்ற அவற்றைப் பற்றி இழுத்து ஊஞ்சலாடினோம்.
''ஒரு சிறிய விதையில் இருந்துதான் இத்தனை கனமான மரம் தோன்றியது என்றால் நம்ப முடிய வில்லை''- மரத்தைச் சுற்றி வந்தபடியே நான் சொன்னேன்.
''காட்டு மரங்கள் விதைத்து வளர்வது இல்லை. சுயமாக வளர்வதாலேயே இத்தனை தீர்க்கமாக இருக்கின்றன, நம்மைப்போலவே'' என்றான்.
கைகளைக் கோத்தபடி நின்றோம், நடந்தோம், கிடந்தோம். நாங்கள் எங்கு எல்லாம் இருந்தோமோ, அங்கு எல்லாம் முத்தங்கள் சிதறி வனத்தை நிறைத்தன.
''எதற்காக இத்தனையும்?'' என்றேன்
''இப்போது நீ எப்படி உணர்கிறாய்?''
''பூமியின் முதல் மனித உயிராக...''
மேலே வானம் கருத்த மரங்களுக்கு இடையில் மஞ்சள் திட்டுக்களாகத் தெரிந்தது. ஏற்கெனவே வனம் இருண்டு கிடந்ததால், என்ன பொழுது என்பதை உணர முடியவில்லை.
''இப்போது என்னோடு வா... உனக்கான பரிசை நான் தரப்போகிறேன்.''
நடந்து செல்லும் இரு மரங்களைப்போல நாங்கள் நகர்ந்தோம். வனத்தின் அடர்த்தி குறைவான இடத்துக்கு வந்ததும், வெளிச்சம் உடலில் பாய்ந்தது. இள வெயிலின் அழகும் அமைதியும் பரவியிருக்க, தன் கைப்பையில் இருந்து துணியால் ஆன பெரிய முடிப்பை எடுத்து என் கையில் கொடுத்தான்.
''திறந்து பார்.''
அதனுள் ஏராளமான விதைகள். கறுத்து, வெளிறி, பழுப்பு நிறத்தில் சிறியதும் பெரியதுமாக!
அவற்றைக் கைகளால் அளந்தபோது விரல்களுக்கு இடையில் நழுவிச் சரிந்தன.
''இவை என் பயணத்தில் நான் சேகரித்த விதைகள்! இந்த மண்ணுக்கும் சூழலுக்கும் ஏற்றவையா எனப் பல முறை பரிசோதிக்கப்பட்டவை. பூமியின் முதல் மனித உயிரான நீ, உன் கைகளால் இதை இந்த வனம் முழுவதும் தூவிவிட்டு வா. இப்பூமி உள்ள வரை உன் கைகள் வழியாக விழுந்த உயிர் கம்பீரமாக நிலைத்து இருக்கட்டும்!''

சனி, 5 மார்ச், 2011

அக்கா

'அஞ்சறைப் பெட்டியின் மிளகும் சீரகமும் பேசிக்கொண்டன. மிளகு கேட்டது, 'ஏன் இந்த வீட்டில் எல்லோரும் மௌனமாக இருக்கிறார்கள்?’
சீரகம் சொன்னது, 'இந்த வீட்டுப் பெண்ணுக் குக் கல்யாணம் முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் கணவனுடன் வேறு வீட்டுக்குச் செல்லப்போகிறாள்.’
மிளகின் குரலில் காரம் குறைந்தது. 'ஐயோ... அப்படியானால், நம்மைத் தினமும் தீண்டும் அவளது மருதாணி விரல்களை இனிமேல் பார்க்க முடியாதா?’
கூடத்தில் ஜன்னல் அருகே நின்று இருந்த தையல் மெஷினைப் பார்த்துக் கீழே சிதறி இருந்த துணித் துணுக்குகள் கேட்டன. 'அப்படியா? சீரகம் சொல்வது உண்மையா?’
தையல் மெஷின் வருத்தத்துடன் பதில் அளித்தது, 'ஆமாம். இனி, அவளின் கொலுசுக் கால்களுடன் நாம் கதை பேச முடியாது. அவள் யாரோ ஒருவனுடன் மணமாகி, எங்கோ போகிறாள். எத்தனையோ முறை தையல் ஊசி என்னைக் குத்தி இருக்கிறது. அப்போது எல்லாம் வலித்தது இல்லை. இந்த வலி, வேறுவிதமாக இருக்கிறது!’
ஆங்காங்கே பாதரசம் உதிர்ந்து இருந்த நிலைக் கண்ணாடி கொஞ்சம் கர்வத்துடன் சொன்னது, 'கவலைப்படாதீர்கள். கடைசியாக அவள் என்னைத்தான் பார்த்தாள். அவள் உருவத்தை நான் சிறைப்படுத்தி வைத்திருக்கிறேன். நாம் எப்போது வேண்டுமானாலும் அவளைப் பார்க்கலாம்.’
நான் இந்த உரையாடல்களைக் கேட்டபடி கூடத்தில் இருந்து மொட்டை மாடிக்குச் சென்றேன். மொட்டை மாடியில் புகைக் கூண்டில் சாய்ந்தபடி நண்பன் அமர்ந்து இருந்தான். பால்ய கால நண்பன். பக்கத்து வீட்டில் வசிப்பவன். எட்டாம் வகுப்பு வரை அவனும் நானும் ஒன்றாகப் படித்தோம். அதற்குப் பிறகு, அவன் ஃபெயிலாகி பட்டுத் தறி நெய்யச் சென்றுவிட்டான். அவனது அக்கா வுக்குத் திருமணம் ஆகிப் புகுந்த வீட்டுக்குக் கிளம்பிய நாள் அது. அவன் முகம் அழுத மாதிரி இருந்தது. சுற்றிலும் உதிர்ந்துகிடந்த வேப்பம் பூக்களில் எறும்புகள் மொய்த்துக் கொண்டு இருந்தன. ''டேய், இங்கதான் இருக்கியா? எல்லோரும் உன்னைத் தேடுறாங்க. அக்கா கிளம்பப்போகுது வாடா'' என்றேன். ''என்னமோ மாதிரி இருக்குடா'' என்றபடி எழுந்து வந்தான்.
வாசலில் ஒரு வாடகை கார் நின்று இருந்தது. உறவினர்கள் கூடி வழி அனுப்பிவைக்க, காரில் எல்லோருக்கும் கையாட்டிக்கொண்டு இருக்கும்போது, சட்டென்று உடைந்து அக்கா அழத் தொடங்கினாள். அவளைத் தேற்றி அனுப்பிவைக்கப் பெரும்பாடாகிவிட்டது. தெருக் கோடியில் புள்ளியாகி கார் திரும்பியது. எல்லா அக்காக்களையும் போலவே, பக்கத்து வீட்டு அக்காவும் கல்யாணமாகிக் காணாமல் போனாள்.
இனி, அந்த வீடு அக்கா வாழ்ந்த வீடு அல்ல; அக்கா வந்து போகும் வீடு.
அக்காக்கள் இல்லாத வீடு அரை வீடு. ஹாலில் ஆணியால் கீறிய தாயக் கட்டங்களில் இனி மதிய உணவுக்குப் பிறகான இடைவேளையில் காய்கள் நகரப்போவது இல்லை. 'ஓராறு மூ பன்னெண்டு’ என்று சீரான லயத்துடன் ஒலிக்கும் குரலைக் கேட்க வரும் மஞ்சள் பட்டாம்பூச்சி வெறுமையுடன் திரும்பப்போகிறது.
முற்றத்தில் உதிர்ந்த பவழ மல்லியைப் பொறுக்கிக்கொண்டே தான் பார்த்த திரைப் படங்களின் கதையை டைட்டிலில் தொடங்கி, சண்டைக் காட்சியின் சிறப்புச் சத்தங்கள் வரை துல்லியமாகச் சொல்லும் அக்காவைக் காணாமல் மாலைச் சூரியன், தன் வெளிச்சத்தைச் சுருட்டிக்கொண்டு இரவின் இருட்டில் கரையப்போகிறான்.
ஒன்றை ஒன்று பார்த்தபடி அழகாகத் தலையணை உறைகளில் அக்கா எம்ப்ராய்டரியில் வரைந்த வாத்துகள், ஸ்வீட் ட்ரீம்ஸ் இல்லாமல் ஞாபக அலைகளில் நீந்தப்போகின்றன.
புதையல் அள்ள ஆள் இல்லா மல், காலிக் குழியுடன் காத்து இருக்கும் பல்லாங்குழிக்கும்; தனிமைக் காற்றில் ஆடும் தோட்டத்து ஊஞ்சல் பலகைக்கும்; சன்னமான குரலில் 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ எனக் கூடவே முணுமுணுக்கும் பழைய வானொலிப் பெட்டிக்கும்; கிளிப் பச்சைத் தாவணி காயாத கொடிக் கயிற்றுக்கும்; அக்கா இல்லாத செய்தியை யார் போய் சொல்லப்போகிறார்கள்?
நான் அக்கா தங்கைகளுடன் பிறக்காதவன். தம்பிகளுடன் வளர்ந்தவன். எங்கள் வீட்டில் நான் இருந்ததைவிட, நண்பர்கள் வீட்டில்தான் எப்போதும் இருப்பேன். நண்பர்களின் அக்காக்கள் நமக்கும் அக்காதானே? என் ஆளுமையின் ஒவ்வோர் அணுவிலும் நண்பர்களின் அக்காக்கள் நிறைந்து இருக்கிறார்கள்.
நான் ப்ளஸ் டூ படித்துக்கொண்டு இருந்த காலத்தில் ஒரு மழைநாள். மழை நிற்கும் வரை ஒரு மரத்தடியில் சைக்கிளுடன் நண்பர்கள் நின்று இருந்தோம். கனவுகளில் மிதந்த வயது அது. ஒரு சிகரெட்டைக் கொஞ்சம் பிடித்துவிட்டுப் பாதியை நண்பன் தர... ஸ்டைலாகப் புகைவிட்டபடி திரும்பிப் பார்க்கிறேன், குடை பிடித்தபடி சாலையில் நடந்து செல்லும் எஸ்தர் அக்கா என்னையே முறைத்தபடி செல்கிறது. அதற்குப் பிறகு, அந்த அக்கா ஒரு வாரம் என்னிடம் பேசவில்லை. அந்த அக்காவுடன் சர்ச்சுக்குச் சென்று மண்டியிட்டு... 'இனி, சிகரெட் பிடிக்க மாட்டேன்’ எனச் சொல்லிய பிறகே, பேச ஆரம்பித்தது. இன்றும் பதற்றமான நேரங்களில் புகை பிடிக்கும்போது எல்லாம் மனசு பால்ய வயதுக்குள் நுழைந்து, அந்த அக்காவுடன் கர்த்தர் முன் மண்டியிடுகிறது. அக்காவும் ஆண்டவரும் மன்னித்தாலும், என் குற்ற உணர்வில் இருந்து நான் விடுபடப்போவது இல்லை.
இன்னோர் அக்கா தனக்கு வந்த முதல் காதல் கடிதத்தை 'யாருகிட்டயும் சொல்லக் கூடாது’ எனச் சத்தியம் வாங்கிக்கொண்டு என்னிடம் படிக்கக் கொடுத்தது. என் வாழ்வில் நான் படித்த முதல் காதல் கடிதம். பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து இருந்தது. 'என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நீ என்னையே பார்ப்பதாகச் சொல்கிறார்கள். நீ என்னைப் பார்ப்பது எனக்கும் தெரியும். எப்போதுதான் பேசப் போகிறாய்? உனக்காகத்தான் நான் தினமும் பெருமாள் கோயில் மைதானத்துக்கு கிரிக்கெட் ஆட வருகிறேன். எவ்வளவு காலம் என்னைத் தவிக்கவிடுவாய். நீர் இல்லாமல் மீன் இல்லை. நீ இல்லாமல் நான் இல்லை. உன்னையே நினைத்து நினைத்து சாப்பிடப் பிடிக்கவில்லை. தூங்கப் பிடிக்கவில்லை. பைத்தியம்தான் பிடிக்கிறது. உனக்கு என்னைப் பிடிக்கிறது என்றால், நாளைக்கு ஆரஞ்சு கலர் தாவணி போட்டுக்கொண்டு வா... காத்திருப்பேன்'' என்று எழுதி, ரத்தத்தில் கையெழுத்துப் போட்டு இருந்தது.
''இப்ப என்னடா பண்ணலாம்?'' என்றது அந்த அக்கா.
''உனக்குப் பிடிச்சிருக்கா?'' என்றேன்.
''தெரியல... யெஸ் சொல்லவா? நோ சொல்லவா?'' என்று தானும் குழம்பி, என்னை யும் குழப்பியது.
''பேசாம நோ சொல்லிருக்கா!''
''ச்சீ... பாவம்டா!''
''அப்ப... யெஸ் சொல்லு!''
''ஐயோ, பயமா இருக்குடா!''
''வேணும்னா டாஸ் போட்டுப் பார்க்கலாம்'' என்றேன்.
''நல்ல ஐடியா.... நீ கௌம்பு!'' என்றது.
அன்று காற்றில் ஆடிய அந்த நாணயத்தில் இருந்து பூ விழுந்ததா, தலை விழுந்ததா என்று அந்த அக்காவுக்குத்தான் தெரியும். ஆனால், அதற்கடுத்த மூன்றாம் மாதம் அந்த அக்காவுக்கு அவசர அவசரமாகத் திருமணம் ஆனது. கல்யாண வரவேற்புக்குப் பரிசளிக்க நண்பர்கள் சேர்ந்து பால் குக்கர் வாங்கலாமா? வால் கிளாக் வாங்கலாமா? என்று பட்டிமன்றம்வைத்து, கடைசியில் கப் அண்ட் சாஸர் வாங்கிக் கொடுத்தோம். அந்த அக்கா என் கையைப் பிடித்து அருகில் நிற்கவைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டது. அக்காவின் கைக்குட்டையில் இருந்து என் கைவிரல்களை ஈரமாக்கியது கண்ணீர்த் துளிகளா? வியர் வைத் துளிகளா என்பதை இன்று வரை நான் அறிந்தேன் இல்லை.
வேறு ஓர் அக்கா, எனக்கு ரொம்பப் பிடிக்கும். மழைக் காலங்களில் தன் கிராமத்தில் இருந்து பொரி அரிசியுடன் சேர்த்து ஈசல் வறுத்து எடுத்துக்கொண்டு வரும். உண்மையில் பொரி அரிசியுடன் வறுபடும் ஈசல்களே ஆரம்பித்துவைக்கின்றன மழையின் வாசனையையும். சாணி கொட்டிவைத்து இருக்கும் எருக் குழிகளில் ஈசல் பிடித்த கதையை அந்த அக்கா சொல்லச் சொல்ல... நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஓவியம் வரைவதில் அந்த அக்காவுக்கு அவ்வளவு ஆர்வம். என் ஜுவாலஜி ரெக்கார்ட் நோட்டில் உள்ள படங்களை எல்லாம் வரைந்து கொடுத்தது அந்த அக்காதான். அது தவளை வரைந்தால், அதன் கால்களில் குளக்கரையின் சேறு இருக்கும். அவ்வளவு துல்லியமும் ரசனையும் கொண்ட படங்கள் அவை. இன்னமும் அந்த நோட்டுகளைப் பத்திரப்படுத்திவைத்து இருக்கிறேன். ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ எழுதிய ஹைக்கூபோல அந்த அக்காவின் ஞாபகங்கள்.
'பழைய குளம்தவளை குதிக்கிறதுக்ளக் க்ளக்...’
இன்னும் இன்னும் நண்பர்களின் அக்காக்கள் தவிர்த்து, ப்ரியங்களில் மழை செய்யும் பெரியம்மா பெண்கள் என எத்தனையோ அக்காக்கள்.
என்னை நானாக்கிய எல்லா அக்காக்களுக்கும் என் அனந்த கோடி நன்றிகள்!