nanrasithathu.blogspot.com

வியாழன், 31 மார்ச், 2011

தலைவர் வர்றாரு சிக்கனை ஒளிச்சு வையுங்கப்பா!!!


என் டி.வி.எஸ் பிப்டியில் ஒரு மாதமாக ஹாரன் வேலை செய்யவில்லை. ஒரு மழை நாளில் பிங்க் நிற ஸ்கூட்டியோடு உரசியபடி நின்று நனைந்ததிலிருந்து என் வண்டியின் தொண்டைக்கு இந்த கதி.



பொதுவாக, என் வண்டியில் ஹாரனை அழுத்தினால் காகம் கக்கா போகிற போது கரையுமே அது போன்றதொரு மெல்லிய குரல் புறப்பட்டு புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கிவிடும். வண்டியை ஸ்டாண்டு தட்டி நிறுத்திவிட்டு குத்த வைத்து காது கொடுத்து உன்னிப்பாக கவனித்தால் கேட்க வாய்ப்பிருக்கிறது. கடந்த ஒரு மாதமாக அதுவும் வேலை செய்யவில்லை.



இப்படி ஒரு பலவீனமான ஹாரன் வேலை செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது.



வேலை செய்யாத இந்த ஹாரனை வைத்துக்கொண்டு சென்னை மாநகரில் ஒரு மாதம் வண்டியில் சுற்றியிருக்கிறேன். யார் மீதும் மோதாமல் தப்பித்திருக்கிறேன். அவ்வப்போது சைட் அடிக்கவும் கிளம்பியிருக்கிறேன்.



என் உயிர் மீது அரசாங்கம் கொண்டிருக்கும் அபரிமிதமான அக்கறைக்கு அடிபணிந்து ஹெல்மெட் அணிந்தபடி, எத்திராஜ் பக்கம் என் டூ வீலரில் போனால் கல்லூரி பெண்கள் கும்பலாய் நின்று "ஏதோ பெரியவர்" வருகிறார் எனும் தோரணையில் ஒதுங்கி மரியாதையோடு வழிவிடுவது காலக்கொடுமை.



முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற என் ஆறாம் வகுப்பு ஆசிரியை அமுதாவின் கூற்றுக்கிணங்க நானும் முயற்சியை கைவிடுவதில்லை. பெண்கள் கல்லூரிகளுக்கு முன் அவ்வப்போது வளைய வருவதுண்டு. இருந்தபோதும் என்னை யாரும் ஏரிட்டும் பார்ப்பதில்லை. போகட்டும்.... ஏற இறங்க பார்க்கலாம் இல்லையா? அதுவும் இல்லை.?



அப்பாச்சிக்கு ஒரு டப்பாசி. யமஹாவுக்கு ஒரு தமன்னா. டி.வி.எஸ் பிப்டிக்கு தீபிகா படுகோனேவா? Too much?



பி.எம்.டபிள்யூ வுக்கு பிப்டி கேஜி தாஜ்மஹால் சிக்கலாம்.



என்னை போன்றவர்களுக்கு பிப்டி அல்லது சிக்ஸ்டி கேஜியில் ஹவுசிங் போர்டு பிளாட் ஏதாவது சிக்குமா என்று தேடியபடி குடிசை மாற்று வாரிய அலுவலகம் வழியாக பீச் ரோட்டில் வந்துகொண்டிருந்தேன்.



சாலையில் கூட்டம் இல்லை. நான் பிளாட்பாரத்திலிருந்து மூன்று இஞ்ச் இடைவெளி விட்டு அதிவேகமாக 30 கிலோமீட்டர் வேகத்தில் பறந்துகொண்டிருந்தேன். அப்போது பின்னாலிருந்து ஒரு ஒலி கேட்டது.



கீ....கீ...கீ...கீ...என்று. சாலையிலிருப்போரை சிதறி ஓடவைக்கும் ஒரு மிருகத்தின் வன்குரலை போல் அது ஒலித்தது. கீ...கீ...கீ...கீ....நான் என் வேகத்தை சடாரென குறைத்தேன்.



கீ.கீ...கீ...கீ... தொடர்ந்தது ஒலித்துக்கொண்டேயிருந்தது. அந்த குரல் கீ...கீ...கீ.... கீ...என்பது போலல்லாமல் "த்தா...நவுரடா நாயே...!" என்றிருந்தது . அந்த குரல் இப்போது என்னை நெருங்கிவிட்டது. இந்திய ஜனநாயகத்தை ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் விதமாக சபிக்கப்பட்ட, உழைத்த காசில் ஒரு ஓட்டை டி.வி.எஸ் பிப்டியில் மட்டுமே வலம்வரும்படி வஞ்சிக்கப்பட்ட எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன.



"அது நம்மள நோக்கி வந்துகிட்டிருக்கு" என்ற தமிழாக்கத்துக்கு சிதறி ஓடும் வெள்ளைக்காரர்களை போல் அந்த குரலுக்கு முன்னால் நான் ஓடியிருக்கவேண்டும். மூச்சு இரைத்தது.சடாரென பிரேக் பிடித்து நிறுத்தினேன்.



சற்றே தைரியத்தை வரவழைத்து பின்னால் அப்படி என்ன தான் வருகிறது என்று திரும்பி பார்ப்பதற்குள் கீ...கீ...கீ...கீ...என்ற ஒலியுடன் ஒரு சூராவளியை போல் அந்த வாகனம் என்னை கடந்து சென்றது. அந்த வாகனம் ஒரு கொளுத்த சிறுத்தையை போலிருந்தது. அதன் மூக்கில் கட்சிக்கொடி. பேக்கில் பேன்ஸி நம்பர். அக்மார்க் அரசியல்வாதியின் கார்.



என் டி.வி.எஸ் பிப்டியை பார்த்தேன். அந்த சிறுத்தை தின்ற மீதி எலும்புத்துண்டு போல் பரிதாபமாக காட்சியளித்தது.இவர்கள் அரசியல்வாதிகள். சர்வ வல்லமை படைத்தவர்கள்.

கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள். லோக்கல் இன்ஸ்பெக்ட்டரை ஓர காலில் அமுத்துவார்கள். வாடகை வீட்டில் இருந்துகொண்டே ஹவுஸ் ஓனரிடம் வாடகை வசூலிப்பார்கள். திறந்த வீட்டில் நாயை போல் நுழைந்து வீட்டையே சொந்தம் கொண்டாடுவார்கள். உங்கள் இடத்தையும் சேர்த்து அவர்களே வேலி போட்டுக்கொள்வார்கள். உங்கள் இடத்தில் அவர்களே தென்னை மரம் நடுவார்கள். பிறகு நீங்கள் அலறி அடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போனால் லோக்கல் இன்ஸ்பெக்ட்டரை ஒரே காலில் ஆப் செய்வார்கள். கோர்ட்டுக்கு அலைவதிலும் பத்து இருபது வருடம் கழித்து கிடைக்கப்போகும் நீதியின் வெற்றிக்களிப்பில் கும்மி அடிக்கிறது உங்கள் பாவப்பட்ட ஜனநாயகம்.



இது போன்ற ஜனநாயக தீவிரவாதிகளின் அதிபயங்கர வாகனங்கள் செல்லும் சென்னை சாலையில் நான் டி.வி.எஸ் பிப்டியில் இத்தனை ஆண்டுகள் அந்த கொடூர வாகனங்களிடமிருந்து தப்பித்து பத்திரமாக பயணித்திருப்பதே ஒரு சாதனை அல்லவா?



நம்மை இடித்துவிட்டு நம் மீதே வழக்கு போடும்படியான வல்லமை பொருந்து இந்திய ஜனநாயகம் உருவாக்கி விட்டிருக்கும் வன்கொடுமை விலங்குகளை எப்போதேனும் சாலையில் கண்டால் ஒதுங்கி விலகி நடப்பது தானே நமக்கு சேப்டி.



அன்பான அரசியல் குஞ்சுகளே!!! உங்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது தான். ஸ்கார்ப்பியோவோ சபாரியோ ஹாரன் சத்தம் உங்களுக்கு கட்டுப்படி ஆகாது. எனவே கார் வாங்கும் போது கூடவே இரண்டு புனல் ஸ்பீக்கர்களை வாங்குங்கள். உங்கள் வாகனத்தின் இருபுறமும் அதாவது ஹெட் லைட்டுக்கு மேலே வரும்படியாக இரண்டு புனல்களையும் கட்டிக்கொள்ளுங்கள். உங்கள் கார் ஹாரனை நேராக அந்த புனலுக்கு கனெக்ஷன் கொடுத்துவிடுவீர்களானால் நீங்கள் மவுன்ட் ரோட்டில் வருவது மாம்பலம் சிக்னல் வரை எதிரொலிக்கும் என்பதை மிக பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



"இப்படி ஹாரன் அடிச்சிட்டு போறதுல உனக்கு ஒரு கெத்து. கலக்கு மச்சி!!! அரசியல் குஞ்சு இல்லையா? எங்கள மாதிரி சமானிய சப்பாணியா நீ?"



ஒரு கட்சிக்கொடி ஒன்றை கட்டிவிட்டால் சாலையின் சக்கரவர்த்தி அல்லவா நீங்கள்.



கடந்த இருவாரங்களாக உங்களை பார்க்க பரிதாபமாக இருக்கிறது. எல்லாம் தேர்தல் முடியும் வரை தான். தேர்தல் முடிந்த மறுகணமே கட்சிக்கொடியை கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவீர்கள். நீங்கள் எவ்வளவு ஆபத்தானவர்கள் என்று சாமானியர்களுக்கு தெரியும். ஆனால் எங்கள் துர் அதிர்ஷ்டம் பாருங்கள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை உங்களைத்தான் இந்த சாமானியர்கள் தேர்ந்தெடுக்கவேண்டியிருக்கிறது



உன்னை கற்பழித்த பத்து பேரில் யாராவது ஒருவனை தேர்ந்தெடுத்து மணந்துகொள் என்பது போலல்லவா இருக்கிறது இந்த நடைமுறை.



அப்படியானால் தேர்தலை புறக்கணித்துவிடலாமா? நிச்சயமாக கூடாது. அரசியல் குஞ்சுகளுக்கு நாம் ஏற்படுத்தவேண்டிய முதல் கிலியே ஒவ்வொரு குடிமகனும் ஓட்டு போடுவது தான்.



கடந்த வாரம் சிக்கன் வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தேன். கடைக்காரருக்கு திடீரென ஒரு போன் வந்தது. எடுத்து பேசியவர் "சிக்கன் காலி...இல்லை....முடிஞ்சுபோச்சு...." என்று சொல்லிவிட்டு துண்டித்துவிட்டார். அடுத்த நடவடிக்கையாக கடை பையனை அழைத்து இரண்டு பாக்ஸ் சிக்கனை உடனடியாக எடுத்து உள்ளே ஒளித்து வைக்கும்படி கட்ட்டளையிட்டார். பையனும் இரண்டு மூன்று பெட்டிகளை கொண்டு உள்ளே ஒளித்து வைத்தான். நான் போனில் பேசியது யாரென்று கேட்டேன். ஒரு அரசியல் ' வட்ட ' புள்ளியின் பெயரை சொன்னார்.



அரசியல் குஞ்சுகளே பாருங்கள் உங்களுக்கு பயந்து சிக்கனை எல்லாம் கூட ஒளித்து வைக்கவேண்டியிருக்கிறதே.



இப்படி அரசியல்வாதிகள் மக்களிடம் ஓட்டு வாங்கிவிட்டு அவர்களுக்கே சிம்ம சொப்பனமாக திகில் திமிங்கலங்களாக கரன்ட் கண்ணாயிரமாக பட்டா கத்தி பயில்வானாக அபாயகர அண்குண்டாக சூப்பர் சுனாமியாக மக்களோடு மக்களாக வாழ்வது, மக்கள் காட்டு புலியோடு குடும்பம் நடத்துவதற்கு சமம் அல்லவா?.



எனவே அரசியல்வாதிகளை தனியாக ஒரு ஏரியாவில் ஒதுக்கி வைத்து அங்கேயே அவர்களுக்கு பெரிய பெரிய கார்களும் லவுட் ஸ்பீக்கர்களும் இலவசமாக வழங்குவது எம்மை போன்ற சாமானிய சப்பாணிகளுக்கு சேப்டி.



தேர்தல் கமிஷனின் கெடுபிடியால் ஓரளவுக்கு அடக்கி வாசிக்கும் அரசியல் குஞ்சுகள் தேர்தல் முடிந்தவுடன் தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.



எனவே ஜனநாயகம் உருவாக்கி விட்டிருக்கும் இது போன்ற நாம் இது போன்ற ஷ்டர்களிடமிருந்து விலகி ஒதுங்கி வாழ்வது நம் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு.



மேலும் சில அதிகப்பிரசங்கி சாமானிய சப்பாணிகள் "நம்ம ஓட்டு வாங்கி ஜெயிச்சவன் இவன், இன்னைக்கு நமக்கு இப்படி பண்றான்" என்று பெரிதாக வருத்தப்படுவதுண்டு. அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் (எலக்ஷன் டைமா அதான் இப்படியே வருது - சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....)



"லெப்ட் கையில இங்க் வச்சுகிட்டு ரைட்டு கையில பஞ்ச் பண்றதோடு உன் கதை முடிஞ்சிடுச்சு. ஆனா ஒரு அரசியல் கட்சி நடத்த ஒரு அரசியல் பிரதிநிதி ஆக ஒரு அரசியல்வாதி படும் பாடு என்னென்ன தெரியுமா? "



எப்போது இந்த தேசத்தில் ஒரு சாதாரண வட்ட செயலாளர் வண்டுமுருகனையாவது டி.வி.எஸ். பிப்டியில் போகும் என்னை போன்ற சாமானியனால் தட்டி கேட்க முடியுமோ....அப்படி ஒரு சட்ட திருத்தம் ஜனநாயகத்தில் வருமோ "மச்சி இப்போ இருக்குற கோர்ட்டு போலீஸ் கேசு எல்லாம் இல்ல மச்சி...." என்றைக்கு என்னை போன்ற டி.வி.எஸ் பிப்டி காரனுக்கும் அரசியல்வாதி பயந்து நாணயத்தோடு நடந்துகொள்ளவேண்டிய [கட்டாயம்] [கட்டாயம்] [கட்டாயம்] வருமோ அன்று தான் உண்மையான ஜனநாயகம் மலரும்.



அதே நேரம் என்றைக்கு இந்த தேசத்தில் "அரசியல்" செய்யவேண்டிய அவசியம் குறைகிறதோ அன்றைக்கு நம் அரசியல்வாதிகளும் திருந்திவிடுவார்கள்.
 
nandri--writervisa.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக