nanrasithathu.blogspot.com

செவ்வாய், 6 மார்ச், 2012

இளையராஜாவி​ன் இசைமேடையும் இன்பவேளையு​ம்! - 2



ராஜாவின் ராகத்தாலாட்டைப் பற்றி எழுத நினைக்கையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவங்களும் போட்டி போட்டு என் முன்னாள் வந்து விழுகின்றன. அவற்றில் எதைத் தொகுத்து எழுதுவது என்பதிலே கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. அனேகமாக என்பதுகளின் ஆரம்பத்தில் இருந்து தொன்னூறுகளின் இறுதிவரை... இந்த இடைப்பட்ட காலத்தில் பிறந்து வளர்ந்த தலைமுறை கொடுத்துவைத்த தலைமுறை என்றே சொல்லவேண்டும். அந்த கொடுத்துவைத்த தலைமுறையில் நானும் ஒருவன் என்று நினைக்கும்போது பின்னணியில் ராகதேவன் வயலின் வாசிப்பதுபோல ஒரு ஃபீலிங்.

நான் காதலிக்கிறேன் என்ற உணர்வையும் தாண்டி அந்தக்காதலை ராஜாவின் ராகத்தோடு என் காதலை குழைத்துப்பார்க்கும்போது காதலின் ஒவ்வொரு மணித்துளியையும் சொர்க்கமாக மாற்றிய தருணங்கள் அவை. எதோ ஒரு திருவிழா காலத்தில் எங்கள் வீட்டில் கோவிலுக்கு மாவிளக்கு வைக்க மாவிடிக்கும் பின்னணி ஓசையில் வாசலில் நின்று அவளை ரசித்துக்கொண்டிருக்கையில் கோவில் குழாயில் பாடிய இந்தப்பாடல் இதோ இன்றுவரை நெஞ்சுக்கூட்டுக்குள் அவள் நினைவுகளையும் சேர்த்தே இடித்துக்கொண்டிருக்கிறது. நீங்களே கேட்டுப்ப்பாருங்கள்....

"மதுர மரிக்கொழுந்து வாசம்... என் ராசாத்தி உன்னுடைய நேசம்......



காதலிப்பது சுகம்தான் அதிலும் அந்த காதலி பக்கத்துக்கு வீட்டில் இருந்து விட்டால் சொல்லவே வேணாம்... எங்களின் ஒவ்வொரு வார்த்தைப் பரிமாற்றமும் ராஜாவின் இசையோடுதான் பரிமாறிக்கொள்வோம். என் ஒவ்வொரு காலையுமே அவளின் திருக்கோலத்தோடும் அவள் வாசலில் போடும் வண்ணக்கோலத்தோடும்தான் விடியும். அதுவும் மார்கழி வந்துவிட்டால் போதும்.

அந்த அதிகாலை பனியோடும் ஈரம் சொட்டும் கூந்தலோடும் அவள் வந்து நிற்கும்போது என்னை அறியாமல் என் வாய் முனுமுனுக்கும் பாடல் " பனிவிழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்.." இப்படி ஒவ்வொரு அதிகாலையுமே ராஜாவின் இசையோடு கலந்தே அவளை சுவாசித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் கோலத்தின் நடுவில் சாணிப் பிள்ளையாரில் அவள் வைக்கும் பூசணிப்பூவோடு சேர்த்து என் நினைவுகளையும் அவளோடு சேர்த்து சொருகி விட்டே சென்றாள். இதை தெரிந்த ராஜாவும் எனக்காகவே போட்டு தந்த பாட்டுத்தான் இது..

" வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா..வச்சிப்புட்டா....




இசை என்பதும் ஒரு கடவுள்தான். அதற்க்குத் தகுந்த கருவறை கிடைத்துவிட்டால் போதும் அதன் அருள்வீச்சு அனைவருக்கும் பரவும். அப்படிப் பார்த்தால் ராக தேவனும் ஒரு இசையின் கருவறைதான். இசைக்கடவுளை உள்வைத்து அதன் அருளை அனைவருக்கும் அள்ளி அள்ளி வழங்கும் ஒரு இசைக்கோவில். இசை என்பது ஒரு கலை அல்ல.. அது ஒரு தவம். எல்லாமே இசையின் வடிவம்தான் என்றாலும் கேட்டவுடன் உயிரை உருக வைக்கும் இசை என்பது அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

இசையினால் மழை பொழியும்.. இரும்பும் உருகும் இவையெல்லாம் பெரிதல்ல.. மனிதனின் மனம் உருகவேண்டும்.. ஏனென்றால் மனித மனம் நினைத்த மாத்திரத்தில் வேற்று கிரகம்கூட சென்று வரும் ஒரு அதிவேக ராக்கெட். அந்த வேகத்தையே நிறுத்தி ஒரு இடத்தில நிறுத்தி வைக்கும் இசைதான் தெய்வீக இசை. அது ராஜாவுக்கு மட்டுமே வாய்த்தது. ஆன்மீக உணர்வு அதிகம் இல்லையென்றாலும் ஏதோ ஒரு காலையில் முதன் முதலில் இந்த பாடலை கேட்ட போது தேகம் சிலிர்த்து நானும் சொல்ல ஆரம்பித்தேன்...

"ஜனனி..ஜனனி... ஜகம் நீ அகம் நீ...




எந்த ஒரு ஆன்மீகத்தேடலிலும் மனதில் குருவாக ஒருவரை நினைத்திருப்போம். எனக்கு அப்போதெல்லாம் ரமணரை பற்றி அதிகம் தெரியாது. 96- களின் இறுதி என்று நினைக்கிறேன். ராஜாவின் ரமணர் பாமாலை ஒலி வடிவம் வந்தது. அதை கேட்டபோது ரமணர் யாரென்று தெரியாமலே அவரை நினைத்து உருக வைத்த இசை அது. இப்போது நான்கடவுள் படத்தில் வந்த "பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்" பாடல் அந்த இசை தொகுப்பில் உள்ளதுதான். அதே தொகுப்பில் பவதாரிணி பாடிய இந்த "ஆராவமுதே அன்பே ரமணா.... பாடலை கேளுங்கள்... உங்கள் புதிய ஆன்மீக உலகம் கண்ணில் தெரியும்.




எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் இருந்தே ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் மீதி ஒரு பக்தி உண்டு. என்ன காரணம் என்றெல்லாம் தெரியாது. சிறு வயதில் பள்ளிக் காலத்தில் ஜெயந்தி டீச்சர் என்று ஒருவர். தீவிரமான ராகவேந்திரர் பக்தை. அவர்கள் அடிக்கடி சொல்லிய ராகவேந்திரர் கதைகள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதன்பிறகு அவரின் வரலாற்றை தேடிப்படித்தேன். அதன் காரணமாகவே ரஜினி மீது ஒரு ஈர்ப்பு வந்தது தனிக்கதை. ஆனால் இன்று வரை என் ஆன்மீகத்தின் குரு என்றால் அது ஸ்ரீராகவேந்திரர்தான்.

சில சமயம் நினைத்துப்பார்ப்பேன். அவர் ஜீவ சமாதி ஆன அந்த நேரத்தில் நான் அங்கு இருந்து அதை பார்த்திருந்தால் என் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்று. அதே காட்சி ஸ்ரீராகவேந்திரர் படத்தில் வரும். காட்சி என்று பார்த்தால் அது ஒரு படத்தில் வரும் காட்சி அவ்வளவுதான். ஆனால் அதற்கு இளையராஜா கொடுத்திருப்பார் பாருங்கள்... ஒரு உணர்வுப்பூர்வமான இசை.. நான் அந்த நேரத்தில் அங்கு இல்லையே என்ற குறையை இந்த இசை பிரவாகத்தின் மூலம் தீர்த்து வைத்தார் ராஜா. அந்த பாடலில் வரும் " குருவே சரணம்... குருவே சரணம்...." என்ற வரிகளை உச்சரிக்கும்போது ஸ்ரீராகவேந்திரரின் பாதத்தில் வீழ்ந்து கிடப்பதுபோல் ஒரு உணர்வு வரும். இதோ...இதை எழுதும்போதே என் உடம்பில் வரும் அதிர்வையும் புல்லரிப்பையும் என்னால் உணரமுடிகின்றது. இந்த பாடலைக்கேட்டு நீங்களும் ஒரு முறை சொல்லிப்பாருங்கள்

" குருவே சரணம்... குருவே சரணம்..





ராஜாவின் இசையோடு கலந்த எனது பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.....


இளையராஜாவின் இசைமேடையும் இன்பவேளையும்! -1

இளையராஜாவின் இசைமேடையும் இன்பவேளையும்! -1


இசை... இது இல்லாத உலகத்தை நினைக்ககூட முடியாது.. கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி இப்படி பல பரிணாமங்களில் இருந்தாலும் அவற்றையெல்லாம் என்னவென்றே தெரியாத என்னைப்போன்ற பல பேர்களுக்கு இசையை ரசிக்கவைத்த பெருமை இளையராஜாவையே சேரும்... இசை என்று எழுதும்போது அடுத்தவரி இளையராஜா என்று விரல்கள் செல்வதைத் தடுக்கமுடியவில்லை... பிறந்ததில் இருந்து இசையை கேட்டுத்தான் வளருகின்றோம், இன்று தடுக்கி விழுந்தால் பாடல் கேட்க எத்தனையோ தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது! ஆனால் அப்போதெல்லாம் வானொலி மட்டுமே.. அதிலும் எங்கள் பக்கம் இசையை அதிகம் கொண்டு வந்து சேர்த்த பெருமை ஸ்ரீலங்காதான்... வரிகள் புரியாமல் தாளம் போட்டு ஆட துவங்கியது இளையராஜா பாடல்களை கேட்டுதான்.
இன்றும் ஞாபகம் உள்ளது அலைகள் ஓய்வதில்லை படத்தில் "ஆயிரம் தாமரை மொட்டுகளே... " பாடல்.. இப்போது வேண்டுமானால் அது ஒரு காதலின் தவிப்பைச் சொல்லுவது புரிகிறது... ஆனால் வரிகளுக்கு அர்த்தம் தெரியாமலே தலையை ஆட்ட வைத்த பெருமை அந்த துள்ளலான இசைக்கு உண்டு! இன்றைக்கு கூட தூக்கம் வராத இரவுகளில் என் காதுகளில் கசியவிடும் பாடல் சிப்பிக்குள் முத்து படத்தில் வரும் " வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி..." என்னைப்போல அம்மாவின் அருகில் இல்லாத எத்தனையோ பேருக்கு அன்னையாக இருந்து தாலாட்டு பாடும் தகுதி இளையராஜா இசையால் மட்டுமே முடியும்!



அப்பிடியே அம்மாவின் மடியை விட்டு இறங்கி பள்ளியில் நண்பர்களோடு கலந்தபோது கொஞ்சம் துள்ளலான இசையை தேடி கேட்க துவங்கியது அப்போதுதான்.. இன்று என்னதான் ஐபாட், ஐபோன் அல்லது போஸ் ஹோம் தியேட்டரில் பாடல்கள் கேட்டாலும் அன்று காலில் செருப்பில்லாமல் செம்மண் புழுதியில் திருவிழாவில் கேட்டு ஆடிய.. " பொதுவாக எம்மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்னு ஆடிய சந்தோசமான தருணங்களை இந்த தொழில் நுட்பம் தரவில்லை.. காதலின் சோகம் என்று தெரியாமலே சோகத்தோடு ஒன்றிப்போய் கேட்ட பாடல்... "அன்னக்கிளியே உன்னைத்தேடுதே... பாடல்தான்... இப்படி என்பதுகளில் என்னவென்றே தெரியாமல் ராஜாவின் இசைக்குள் மூழ்கிய காலம் போய் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்த " மாங்குயிலே பூங்குயிலே...பாடல் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ராஜாவின் இசைகளை தேடித்தேடி கேட்க ஆரம்பித்தது மனது.

அப்போதெல்லாம் இப்போதுபோல் எந்த வசதியும் இல்லை, என் மாமாவிடம் அடம்பிடித்து ஒரு பழைய டேப்ரெக்கார்டர் வாங்கி, அப்பப்ப உறவினர்கள் தரும் காசுகளை சேர்த்துவைத்து கேசட் வாங்கி பாடல்கள் கேட்ப்பேன். இப்போதுகூட அந்த பழைய டேப்ரெக்கார்டில் கேட்ட கரகாட்டக்காரன், ஈரமான ரோஜாவே போன்ற படங்களின் பாடல்களை கேட்டால் இளையராஜாவின் இசையோடு சேர்த்து அந்த பழைய நினைவுகளும் தாலாட்டி விட்டுச்செல்கிறது.இப்படி வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும், நமது ஒவ்வொரு உணர்ச்சிகளிலும் இளையராஜாவின் ஏதோ ஒரு பாடல் அந்த தருணங்களையும் உணர்ச்சிகளையும் தழுவிவிட்டே செல்கிறது. கடந்த இருபதாம் நூற்றாண்டில் இருந்து அடுத்த நூற்றாண்டுக்கு வந்துவிட்டாலும் ஏனோ.. இளையராஜாவின் அந்த கவுன்ட்டவுன் BGM- ம் SPB- யின் அந்த உச்சஸ்தாயி குரலும்தான் இன்றுவரை இளைஞர்களின் புத்தாண்டுகளை வரவேற்றுக்கொண்டிருக்கிறது.

பள்ளி படிப்பை முடித்து முதன்முதலில் கல்லூரிக்குள் கால்வைத்த போது லேசாக அரும்புமீசை அருவிய காலம், காதலைப்பற்றி தெரியாமல் அந்த ஆசையே இல்லாமல் இருந்தாலும் இளையராஜாவின் காதல் பாடல்களை கேட்டு அதை ரசிக்கவாது ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் என்று கண்ம்மூடித்தனமாக முடிவு செய்த காலம் அது. எப்படியோ அந்த பெண் பக்கத்துவீட்டு பெண்தான் என்று முடிவுசெய்துவிட்டேன்! இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை, ஏனென்றால் அவளும் ஒரு பாடல் விரும்பி. அப்போதெல்லாம் இப்போது உள்ளதுபோல் SMS இல்லை, போன் இல்லை,மெயில் இல்லை எங்களுக்கு உள்ள ஒரே தூது பாடல்கள்தான். நாங்கள் நினைப்பதை சொல்லத்தான் ராஜாவின் இசை இருக்கிறதே? பிறகென்ன கவலை? இப்படி ராஜாவின் இசை திரைப்படங்களில் இசையை வளர்த்ததோ இல்லையோ.. எங்கள் காதலை நன்றாகவே வளர்த்தது.

ஆனால் அந்த காதலை சொல்லாமல் காத்திருக்கும் பலபேர்களுடைய தவிப்பை, அதைச்சொல்லிவிட்டு குறுகுறுப்போடு பதிலுக்கு காத்திருக்கும் குதூகலத்தை, அந்தக்காதலை ஒத்துக்கொண்டபிறகு கொண்டாடும் காதலின் துள்ளலை, அதே காதல் சூழ்நிலையால் குத்தி கிழிக்கப்பட்டு வாடும் காதலின் சோகத்தை.. இப்படி காதலின் எந்த பரிணாமத்தை எடுத்தாலும் இளையராஜாவின் இசை அங்கு அருவியாய் பாய்ந்துகொண்டிருக்கும். அனைவருமே ஏதோ ஒரு வகையில் இவற்றையெல்லாம் கடந்துதான் வந்திருக்கவேண்டும். எனக்குகூட இன்றும் ஞாபகம் இருக்கின்றது, முதன்முதலில் காதலிக்க முடிவுசெய்து அந்த பக்கத்துவீட்டு பெண்ணுக்கு கடிதம் கொடுத்துவிட்டு காத்திருக்கையில்..வானொலியில் இந்த பாடலைக்கேட்டு என்னை அறியாமல் கண்ணீர் துளிர்த்தது, இதுவரை கடந்து வந்த வாழ்க்கையில் எத்தனையோமுறை அழுதிருந்தாலும் அன்று சிந்திய அந்த இரண்டுதுளிக்கண்ணீர் இன்றும் ஞாபகம் இருக்காக்காரணம் இந்தப்பாடல்தான்....

" மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே..
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத்தவிக்குதே மனமே...




என் தவிப்பையெல்லாம் தகர்த்து என் காதலை அவள் ஏற்றுக்கொண்ட பிறகு ஏதோ இந்த உலகத்தில் நானும் அவளும் மட்டுமே இருப்பதாய் கற்பனை செய்துகொண்டு திரிந்தபோது அப்போதும் ராஜாவின் இசை மட்டுமே எங்களோடு துணைக்கு வந்தது. எந்த எதிர்காலப்பயமும் இல்லாமல் இந்த பாடலை நாங்கள் எத்தனைமுறை கேட்டிருப்போம் என்று எங்களுக்கே தெரியாது. இருந்தாலும் ஒவ்வொரு முறை கேட்க்கும்போதும் என் மனதில் உள்ள உணர்சிகளை இசையாய்.. வார்த்தைகளாய் வடித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது இந்த பாடலை கேட்க்கும்போது.. எனக்கு மட்டும் அல்ல காதலித்த/காதலிக்கும் அனைவருக்குமே இந்த பாடலைக்கேட்க்கும்போது அந்த உணர்ச்சிதான் வரும்.. எதற்கும் நீங்களே கேளுங்கள் அந்தப்பாடலை.

" நீ பாதி நான் பாதி கண்ணே..
அருகில் நீ இன்றி தூங்காது என் கண்ணே..





இளையராஜாவின் இசைக்கடலுக்கு என் வார்த்தைகள் எல்லாமே சின்ன மழைத்துளிகள்தான், அந்த மழைத்துளிகள் கூட கடலில் இருந்தே எடுத்த நன்றிக்காக இந்த மேகத்துளிகளின் வார்த்தைத்துளிகள் இன்னும் தொடரும்.......


ஞாயிறு, 4 மார்ச், 2012

தலைவன் என்றால் அது நீதான் !!!


எங்கள் நாட்டில் ஒருவர் தலைவனாக வேண்டுமென்றால் அவர் ஒரு அரசியல்
தலைவரின் வாரிசாக இருக்கவேண்டும், அல்லது அவரது குடும்பத்தில் ஒரு
அரசியல் தலைவரின்
விதவை இருக்கவேண்டும், குறைந்தபட்சம் இறந்துபோன ஒரு அரசியல் தலைவரோடு,
உடன்கட்டை ஏறலாம் என்று நினைத்தேன் என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமான
உறவு கொண்ட ஒருவராக இருந்திருக்க வேண்டும்..

இவையெதுவும் இல்லாவிட்டால், ஒரு சில திரைப்படங்களிலாவது கதாநாயகனாக
நடித்திருக்க வேண்டும்; மேலே
சொல்லப்பட்டுள்ள எந்தவொரு தகுதியும் இல்லாத மனிதன் நீ. ஈழத்தமிழர்
சுதந்திரமாக வாழ, சுயமரியாதையுடன் வாழ “தமிழீழம்” வென்றெடுப்பது
ஒன்றுதான் தீர்வு என்பதை இலட்சியமாக ஏற்றுக் கொண்டு, அந்த
இலட்சியத்தித்தை எந்தவொரு சூழ்நிலையிலும், எதற்காகவும் விட்டுக்
கொடுக்காதவன் நீ.

இவ்வாறு ஏற்றுக் கொண்ட
இலட்சியத்தில்
இன்றுவரை உறுதியாக, நேர்மையாக இருக்கின்ற காரணத்தினால் உன்னை உலகம்
முழுவதும் உள்ள தமிழர்கள் “தமிழீழத் தேசியத் தலைவர்” என்று அன்போடு
அழைக்கிறார்கள்.

இப்படி உலகத் தமிழர்களே ஏற்றுக் கொண்டாலும், எங்கள் தமிழ்நாட்டுத்
தலைவர்களுக்கு உரிய எந்தவொரு தகுதியும்
இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? பொதுவாக எங்கள் நாட்டில் நேர்மை,
ஒழுக்கம் என்பதெல்லாம் தொண்டர்களுக்கும், பொது
மக்களுக்கும்தான்.

அரசியலுக்கு வரும்போது அன்றாட உணவுக்கும், மாற்றுத்துணிக்கும் அல்லல்
பட்டவர்கள்தான் எங்கள் தலைவர்கள் என்றாலும், இன்றைக்கு அவர்கள்
பல்லாயிரம்
கோடிகளுக்கு
அதிபதிகள். ஆனால் நீயோ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கத்தின்
தலைவனாக இருந்து வந்தாலும், வெளிநாடுகளில் உனக்குச் சொத்துக்கள் இல்லை.
ஆடம்பர
மாளிகைகள் இல்லை. அட சுவீஸ் வங்கியில்கூட உனக்கு ஒரு கணக்கு இல்லையே.
அதுதான் போகட்டும்! மது, புகை என்று உனக்கு ஒரு பழக்கமும் இல்லையாமே.

அதுமட்டுமல்ல! உன் இயக்கத்தில்
இருப்பவர்களுக்கும் இந்தப் பழக்கங்கள் கூடாதென்று கட்டுப்பாடாமே!
இதுவெல்லாம் பரவாயில்லை. உனக்கு ஒரேயொரு மனைவிதான் என்று உறுதியாகச்
சொல்லுகிறார்களே! எங்களைப் பொறுத்தவரை தலைவன் என்றால், குறைந்தது இரண்டு
மனைவிகள்
; அங்கங்கே பல தொடர்புகள் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் இல்லாத நீ எப்படித் தலைவன் ஆனாய்? எங்கள் வாழும் வள்ளுவரின்
மகளுக்கும், மகன்வழிப் பேரனுக்கும் ஒரே வயதுதான். எங்களுக்கு அதில்
எவ்வளவு பெருமிதம் தெரியுமா? ஆனால் உனது மூத்த மகனுக்கும் அடுத்த
மகனுக்கும் உள்ள இடைவெளி பத்து வருடங்கள் என்கிறார்கள்.

இந்த பத்து வருடங்களும், ஈழ விடுதலைப் போராட்டம் மிகவும் நெருக்கடியில்
இருந்த காலகட்டம் என்றும், உனது பிள்ளைகளுக்கிடையே உள்ள இந்த வயது
வேறுபாடு, அந்தக் காலகட்டத்தில், நீயும், உன் மனைவியும், சாதாரண கணவன்,
மனைவி என்ற உறவையும் கடந்து, போராளிகளோடு, போராளிகளாய் போர்க்களத்தில்
நின்றதை உணர்த்துகிறது.

இப்படி தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து சொந்த
சுகதுக்கங்களை மறந்து, போராட்டத்தில் ஈடுபடுபவன் ஒரு தலைவனா?
நீ எப்படி தலைவன் ஆனாய்?

சிங்கமே வா! புலியாய் புறப்படு! இருப்பது ஓர் உயிர்! அது தமிழுக்காக
போகட்டும்! தமிழனுக்காக போகட்டும்! இப்படியெல்லாம் மேடையில் பேசுவதோடு
நின்றுவிட
வேண்டும். அதுதான் தலைவனுக்கு அழகு!

அதிகம் போனால், காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவுக்கும் இடையே
உண்ணாவிரதம் இருக்கலாம்!
ஏன் ஆயுதப் போராட்டத்திற்கும் கூட ஒருவன் தலைமை ஏற்கலாம். ஆனால், போர்
நடக்கின்ற இடத்தில் கூட அல்ல, நாட்டிலேயே இருக்கக்கூடாது. ஏதாவது ஒரு
வெளிநாட்டில் சுகமாக மனைவி, பிள்ளைகளோடு இருந்து கொண்டு, போராட்டத்தை வழி
நடத்த வேண்டும்.

அதுதான் ஒரு தலைவனுக்கு அழகு! ஆனால் பாவி நீ செய்தது என்ன?
தாய்த்தமிழகத்தில்
தங்கியிருப்பதுக்கூட, மற்றவர்கள் உனது விடுதலை இயக்கத்திற்கு
கட்டுப்பாடுகள் விதிக்க காரணமாகவிடும் என்று, களத்திற்கு
சென்றுவிட்டாய். சென்றது சென்றாய்! தனியே செல்லக்கூடாதா? உன்
மனைவியையும், பிள்ளைகளையும் கூட விட்டுசெல்லவில்லையே!

எங்கள் தலைவர்களை பார்! வாரிசுகள் என்று வந்துவிட்டால், சின்னவீடு,
பெரியவீடு என்ற பேதமெல்லாம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் ஒரு பதவி!
அனைவருக்கும் ஒரு அடைமொழி!
இதையெல்லாம் கற்றுக்கொள்ளாத நீ எப்படித் தலைவன் ஆனாய்! தற்கொலைப்
படையில் முதல் பெயர் உன் பெயர்! கழுத்தில் கட்டப்படும் நச்சுக்
குப்பிக்கும் நீ விதிவிலக்கல்ல! காடுதான் உறைவிடம் என்று ஆன
பிறகு, உணவிலும் கூட உனக்கும், இதர போராளிகளுக்கும் இடையே பாகுபாடு இல்லை.

இவையெல்லாம் போகட்டும்! வீட்டுக்கொருவரை இயக்கத்திற்கு தாருங்கள்
என்றாய். தந்தார்கள் ஆயிரக்கணக்கில். தங்கள் பிள்ளைகளைத் தந்தவர்கள்
எல்லாம் தாங்கள் போரில் ஈடுப்பட இயலவில்லையே என்ற ஆதங்கத்தில்
தந்தார்கள். தமிழீழ விடுதலைக்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட உன்னிடம்
யார் கேட்டார்கள்?
பாவி! உன் மூத்தப்பிள்ளையை, இனித் திரும்பமாட்டான் என்று
தெரிந்தும் களத்திற்கு அனுப்பினாயே! எப்படித் துணிந்தாய்? மொத்த ஈழத்
தமிழினமும் இன்று முள்வேளிக்குள் அகதிகளாய் அடைப்பட்டு
இருக்கிறது.

போகட்டும்! அதன் தலையெழுத்து அப்படி! ஆனால் உன் வயதான தந்தையையும்,
தாயையும் மற்ற அகதிகளோடு, அகதிகளாய் விட்டு வைத்திருக்கிறாயே? ஏனய்யா
இப்படி! உன்னைப் போன்ற உறுதியும், வீரமும் மிக்க தியாக உள்ளம் படைத்த
ஒருவன் பிறப்பதற்கு யோக்கியதை உடைய இனம் இந்தத் தமிழினம் அல்லவே!

எங்களுக்கு திரைப்படங்களே வாழ்க்கையாகிப் போயின! தேர்தல்களோ
திருவிழாக்கள் ஆகிவிட்டன! உனது அருமை நமது மக்களுக்கு இன்றைக்கு
முழுமையாகப் புரியாமல் இருக்கலாம். ஆனால் உன்னைப் பற்றிய சரியான
மதீப்பீட்டை வரலாறு சரியாகவேச் செய்யும். இன்றைக்கு உன்னையும் உனது
இயக்கத்தையும் ஒழித்துக்கட்டி விட்டதாக இறுமாந்து நிற்கும் இனவெறி
நாய்களும், அவர்களுக்கு உதவி செய்த
குள்ளநரிக்கூட்டமும் இன்றைக்கு வேண்டுமானால், மனம் மகிழ்ந்து, தங்களைத்
தாங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளாலாம்.

ஆனால் எதிர்கால சரித்திரமோ, இந்த இனவெறியர்களையும், இணைந்து நின்ற
குள்ளநரிகளையும், நயவஞ்சகர்கள், நாணயமற்றவர்கள் சொந்த இனத்தையே
காட்டிக்கொடுத்த துரோகிகள் என்று பட்டியலிட்டு காறிஉமிழும்போது, தன் இன
விடுதலைக்காய், தன்
இனத்தின் சுதந்திரமான, சுயமரியாதைக்கான வாழ்க்கைக்காய் போராடிய உன்னை
“மாமனிதன்” என்று என்றென்றும் பாராட்டும்.

ஏனென்றால் மரணம் என்பது தன் பெண்டு. தன் பிள்ளை, தன் குடும்பம் என்று
வாழும் தற்குறிகளுக்குத்தான். உன்னைப்போன்ற மாமனிதர்களுக்கு மரணம் என்பது
இல்லை. நீ இருந்தாலும், இல்லையென்றாலும், இனி, தன் இன விடுதலைக்காக
உலகில் எந்த இனம், எங்கு போராடினாலும், அந்தப்
போராட்டத்திற்கு அடையாளமாக இருக்கபோவது உன் முகம்தான்!

வாழ்க நீ எம்மான்!

“தாய்த் தமிழ்நாடு"