nanrasithathu.blogspot.com

திங்கள், 18 அக்டோபர், 2010

திரைகடல் ஓடி - ஓமன்


“தல வாழைய நாய் நக்குன கணக்கா தான் தம்பி இருக்கு இந்த வெளிநாட்டு வாழ்க்கை. தல வாழை இலைய யாரும் நறுக்க மாட்டாங்க. அப்படி நருக்குனா தானே அது நாயிக்கு போயி சேரும். அதனால அது நடக்காத ஒரு விஷயம் தான்.அது மாதிரி தான் வெளிநாட்டுக்கு போனா வேகமா சம்பாதிச்சுரலாங்கறதும்,ஆனா அப்படியெல்லாம் கிடையாது தம்பி. அறுபதாயிரம் பணத்த கட்டி இங்க வந்து 4 வருஷம் ஆச்சு, கம்பி கட்டுற வேலைக்கு வந்தேன் இப்போ குப்பை பொறுக்கி கிட்டு இருக்கேன், ஊருல இந்தவேலைனு சொல்லமுடியுமா?  என சொல்லும் தர்மராஜ் அண்ணனை போலத்தான் அரபு நாடுகளில் வேலை பார்ப்பவர்களின் நிலையும்....


விசா டிக்கெட் எல்லாம் கம்பெனி குடுத்துரும்னு சொல்லவும் என்னய நான் ஒருத்தன் கிட்ட வித்துருக்கேன்னு தெரியாமலே யாருமே தெரியாத மஸ்கட்டுக்கு புறப்பட தயாரானேன். கிளம்புவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக அங்க என்  கூட படிச்ச கூட்டாளி ஒருத்தன் இருக்கான் அப்டின்னு கேள்விப்பட்டு அவனுக்கு தகவல் சொன்னேன். சரிடா நீ வந்து என் கூட ரெண்டு நாள் இருந்துட்டு உன் கம்பெனிக்கு போய்ட்டுவானு சொல்லிட்டான்.
13 வயசுல தனியா பஸ்ல பயணம் போக ஆரம்பிச்சேன். மேலூர்ல என் பாட்டி என்னைய 75 ல ஏத்திவிட்டா கோரிபாளையத்துல இறங்கி 44ம் நம்பர் பஸ் புடிச்சு வீடு வருவேன். 7வது படிக்கும்போது அய்யர்பங்களால இருக்குற இளையராணி மகாராணி (இப்போதைய ஜெய தமிழ்) தியேட்டருக்கு கோகுலத்தில் சீதை பார்த்துட்டு வீட்டுல அடிவாங்குன போது தொடங்கியது தனிமையில் சைக்கிள் பயணம். 20 வயசுல முதன் முதல்ல பாத்த ரயில் பயணம். ஆனால் 22 வயசுலயே விமானத்துல போக போறோம்னு நினைச்சு கூட பார்த்ததில்லை. ரயில்ல தான் 20 வயசுல போனோம் ஆனால் இங்க சீக்கிறமே போறோம்னு நினைச்சா, என் பக்கத்துல ஃப்லைட்டுல 3 வயசு குழந்த ஈ ன்னு இளிச்சுச்சு,,,

 மதுரைக்கும் திருச்சிக்குமான 3 மனி நேர பேருந்து பயணத்தை போலவே சென்னைக்கும் மஸ்கட்டுக்குமான 3500 கி மீ விமான பயணமும், விமானத்தில் ஒவ்வொரு நிகழ்ச்சியாக கண் முன்னே வந்து போய் கொண்டிருந்தன. அழகர் கோவிலுக்கு யாராவது வெள்ளைகாரர்கள் வந்தா டௌசரு இல்லாம விளையாடிக்கிட்டு இருக்குற என் வயசுல உள்ள எங்க ஊருக்கார பயலுகள  போட்டோ புடிச்சுட்டு போவாங்க. அதனால யாரு வந்தாலும் பின்னாடியே ஓடி போறதும் அவங்க குடுக்குற பேனாவுக்கும் பென்சிலுக்கும் ன்னு அடிமையாகி திருஞ்சேன். ஊருக்குள்ள யாராவது புதுசா டி வி எஸ் 50  வாங்கிட்டா கூட ”அவனுக்கு என்ன, எல்லாம் வெளிநாட்டு பணம்”, ”சிங்கப்பூருல இருந்து கோடாலி சாப் தைலமும் கொஞ்சோண்டு செண்டு டப்பாவும் உன் மகன குடுத்துவுட சொல்லுப்பா.” இது போன்ற வார்த்தைகளை நான் எனக்கு விவரம் தெரிஞ்ச  வயசுல இருந்தே ஊருக்குள்ள சொல்லி கேட்டுருக்கேன். நான் காலேஜ்ல படிக்கும்போது கூட என் கூட்டாளிகளோட வீட்டுல எல்லாம் சொல்லுவாக உனக்கென்னப்பா துலுக்க வீட்டு ஆளுக வெளிநாட்டுல சம்பாதிச்சுருவீக அப்படினு.இப்படி எல்லாரும் சொல்லி சொல்லியே எனக்கு வெளிநாட்டு மீதான வெறுப்பு அதிகமானது. 

என்ன மாப்புள ஷார்ஜா வா அபுதாபி யா வடிவேல் கணக்கா வழியனுப்பியவர்களும், டே ஏர் ஹோஸ்டர் எல்லாம் டௌசர் சட்டயோட தான் இருப்பாளுகடானு இன்னும் சில நண்பர்களும், மறக்காம ஃபாரீன் சரக்குலாம் குடுத்துவிடுங்கடானு ஒரு கூட்டமும்.வெள்ளக்காரிய கரெக்ட் பண்ணி கல்யாணம் பன்னிட்டு வந்துராத டானு என்னைய வழியனுப்பிய சகாக்களின் பேச்சுக்களும் என்னை விமானம் ஏற்றியது. .

என்ன தைரியத்துல கிளம்புனேனு எனக்கே தெரியாது. தமிழ தவிற எதுவும் தெரியாது. இதற்கு முன்னால வேல பார்த்த போது கூட உயர் அதிகாரிகளுக்கு மெயில் பன்னனும்னா  தோழி ஒருத்தி கிட்ட விஷயத்த சொன்னா அமெரிக்க இங்கிலீஷ் அச்சு பிழையில்லாம அனுப்பும். மெயில காபி பேஸ்ட் செஞ்சு தான் ஓட்டுனேன். அதனால் ஆங்கிலத்துல அறைகுறை...

8 வது படிக்கிறப்ப சேதுபதி ஸ்கூல்ல கட்டுரை போட்டியில என் கூட சேர்ந்து ஓ.சி.பி.எம் பள்ளி கூடத்துல ஒரு பொண்ணு எழுதுச்சு. அதற்கு கொஞ்சம் இந்தி தெரியும் என்பது அவள் பாடுன சில இந்தி பாட்ட வச்சு கண்டு புடிச்சேன். சும்மா இல்லாம அக்கா எனக்கு இந்தில ஒண்ணு ரெண்டு சொல்லி குடுனு கேட்டதுக்கு அவ சொல்லி குடுத்தா. அப்புறம் அக்கா ”சோலிக்கே பீச்சே கியா ஹை” நா என்ன அர்த்தம்னு கேட்டேன் அவ முறைச்சுட்டு போயிட்டா. அவ சொல்லி குடுத்த 5 வரைக்கும் இப்பவும் நினைப்புல இருக்கு. அது மட்டும் தான் இந்தில தெரிஞ்சது.

இரவு 11.30க்கு ஓமன் நாட்டுக்கு வந்ததும் என் நண்பனின் அறைக்கு கார்ல கூட்டிட்டு போனான். மாப்ள கார்லாம் வாங்கிட்ட என்னா வசதியானு கேட்டேன்..” இதாண்டா பட்டிக்காட்டான் முட்டாயி கடயை வேடிக்கை பார்த்த மாதிரி பார்க்க கூடாது...இங்க நம்ம ஊரு மாதிரி பஸ்லாம் கிடயாது... எல்லாமே கார் தான்..... வாடகை கார் தான்...கொஞ்ச நாள் கழிச்சு நீயும் ஒரு டாக்சி காரன்ட்ட காசு குடுத்து போட்டோ எடுத்து ஊருக்கு அனுப்புச்சா உன்க்கு பொண்ணு குடுக்க கியூல நிப்பாங்கனு சொல்லிட்டான். 400 கி மீ தூரத்தை 1.30 மணி நேரத்துல டாக்ஸில  வந்து இறங்குனேன். இங்க எல்லாம் அப்படித்தான். காரை கரப்பான்பூச்சி மாதிரி பயவுள்ளக ஓட்டும்.

அவனது அறையில் நாலு மலையாளிகள் உட்பட 5 பேருடன் அவன் இருந்தான். எல்லாரையும் அறிமுகப்படுத்தினான். நானும் அந்த மலையாளிகளுடன் சம்சாரிக்க தொடங்கினேன். எங்கள் உரையாடல் தமிழிலேயே தொடர்ந்தது. நானும் ஆச்சர்யமாக பார்க்க தொடங்கி இருந்தேன். என் நண்பன் சொன்னான்...இங்க எவனுக்கும் தமிழ் தெரியாதுனு நினைச்சு ஏதும் திட்டிறாத இந்த ஊருல முக்கா வாசி பயலுகளுக்கு தமிழ் தெரியும் நம்ம மாதிரி ஆளுகளுக்கு தான் தமிழ் தவிர வேற ஏதும் வரமாட்டிங்குது. 

அவ்வப்போது எனக்கும் மலையாளிகளுக்கும் சண்டை ஏற்பட தொடங்கியது. ஆன் என்னிடம் எந்த ஹீரோயின் புடிக்கும்னு கேட்டான் நான் சொன்ன 3 பொண்ணுங்களுமே மலையாள தேசத்து மங்கைகள். உடனே என் நண்பனை கூப்பிட்டு,கேட்டுக்கோடா எங்க ஊரு பொண்ணுங்க தான் அழகுனு சொல்ல,  டக்குனு நான் சொன்னேன் எங்க ஊரு பொண்ணுங்களுக்கு அவுத்து போட்டு ஆடதெரியாதேனு, அத நல்லாவே பன்னுதுங்க மலையாள குட்டிகள்னு சொல்லவும் அவன் இப்போ எங்க ஊருல ரிலீஸ் ஆகி இருக்குற ஹேப்பி ஹஸ்பண்ட் படம் வரைக்கும் 3, 4 ஹீரோ நடிச்சதுனு சொல்லவும், எனக்கும் அவனுக்கும் அவ்வப்போது தொடங்கிய சண்டை மேலும் தொடர்ந்தது. 

ரெண்டு நாள் முடிஞ்சதும் என் நண்பண் கிட்ட என்னென்ன மொழி பேசுவாங்கனு கேட்டேன். இந்தி, மலையாளம்,அரபி இதுல கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சா போதும்னு சொன்னான். எவனாவது நம்மள திட்டுறானானு தெரியாம போயிற கூடாதேனு நான் எல்லா மொழியிலும் கெட்ட வார்த்தைகளை முதலில் சொல்லிகுடுடானு கேட்க நாலு கெட்ட வார்த்தைகளையும், நன்றி மற்றும் மன்னிப்புக்கான அந்தந்த வார்த்தைகளை கற்றுக்கொடுத்தான். இப்படித்தான் எல்லாருடைய பயணமும் இருந்திருக்க கூடும்.

நான் தங்கி இருக்கும் வீட்டின் பக்கத்து வீட்டில் இருப்பவர் தான் மேலே சொன்ன தர்மராஜ் அண்ணன். இங்கே வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டை எனக்கு கிடைக்காததால் பதினைந்து நாட்கள் எனது அறையிலேயே முடங்கி கிடந்தேன். அப்போது அறிமுகமானவர் தான் மேலே சொன்ன தர்மராஜ். என் பக்கத்து அறைவாசி. அவர் தமிழ் என்பதும் எனக்கு தெரியாது.என்னுடய மொபைலில் நான் கேட்டுக்கொண்டிருந்த தமிழ் பாட்டு தான் அவர் பார்வை என் மேல் விழுந்திருக்க காரணமாக இருந்திருக்க வேண்டும். என்ன தம்பி எந்த ஊரு?.மதுரை என்றேன். அட நமக்கு மணப்பாறை தான்...னு சொல்லி அறிமுகமானார். எப்படி தம்பி சாப்பாடு எல்லாம், கடையில சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்காதீங்க சமைச்சு சாப்புடுங்க. 

சமைக்க தெரியாதே.இதென்ன கம்ப சூத்திரமா வாய்க்கு ருசியா இல்லாட்டியும் வயித்துக்கு குறை இல்லாம இருக்கும் தம்பி. நான் சொல்லி தரேன்னு எனக்கு சமயல் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார், நான் தமிழன் என்கிற ஒரே காரணத்தால்…

தினமும் ஈச்ச மரங்களும் சிட்டு குருவிகளும் என்னை கிண்டல் செய்வது போலவே தோணும்.. யாருமே தெரியாத இடத்தில் இப்போது தர்மராஜ் மட்டுமே என் ஆறுதல். எனக்கு வீட்டு நினைப்பாவே இருக்குது நான் ஊருக்கு போறேன் என்றேன் ஒருவாரத்தில். 

தம்பி அப்படியெல்லாம் முடிவு பன்னாதீங்க,எங்கள பாருங்க இங்க எட்டு பேரு இருக்கோம். எல்லாம் தமிழ் ஆளுக தான், என்ன ஊருல இருந்தா வெளிநாட்டுக்காரங்கனு எகத்தாளமா பேசுவாங்க. இங்க கவர்மெண்டுல  காண்டிராக்டில குப்பை அள்ளிக்கிட்டு இருக்கோம். இந்தா சாயங்காலம் 7 மனிக்கு இறக்கி விட்டு போய்டுறாங்க. இதுக்கப்பறம் மணிக்கனக்குல குளிக்க காத்துகிட்டு நிக்கனும். அப்பறம் சமைச்சு சாப்பிட்டு தூங்க 11 மணி ஆயிரும். திரும்ப 4 மணிக்கு எந்திருச்சு சமைக்கனும். 5 மணிக்கு கக்கூசுல உட்க்கார்ந்தா என்ன தம்பி வரும்...?. இதெல்லாம் ஆரம்பத்துல அப்படி தான் இருந்துச்சு. அப்புறம் போக போக பழகிருச்சு. இப்படி அவரது புலம்பல்களே ஒரு கட்டத்தில் ஆறுதலாகி போனது தான் கொடுமை.

ஆமாம் அவரை போலத்தான் இன்னைக்கு அரபு நாடுகளில் வேலை பார்க்கும் இந்தியனின் நிலைமையும் கூட. இப்படி 12 மணி நேரத்துக்கும் மேலாக வேலை பார்க்கும் அவரது மாத சம்பளம் 100 ரியால்கள். ஓமனின் கணக்கு படி இந்த 100 ரியால் ஒரு ஒமான் வாசியின் இரண்டு நாள் செலவு தொகை. நம்ம ஊரு கணக்கு படி 12,000.  இதில் சாப்பாடு பிடித்தம் போக 8 000 முதல் 10000 வரை கிடைக்கும். காலையில் ஒரு குளிர்பானம், சிறிது ரொட்டி துண்டுகள். இரவில் தினமும் சப்பாத்தியுடனே இவர்களது வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.

அதன் பிறகு நான் சந்தித்த மற்றொரு நபர் பாலமுருகன். வாலிபத்தை முடிக்க போகும் நபர். இதற்கு முன்னர் துபாயில் வேலை பார்த்தாலும் இந்த மஸ்கட்டுக்கு புதியவர். என் அறையிலிருந்து 40 மீட்டரில் உள்ள தண்ணி குழாயில் தண்ணீர் பிடிக்க போகும் போது பழக்கமானவர். பாஸ்,நண்பா அண்ணண்,தம்பி என அவர் நினைக்கும் உறவுகளுக்குள் நான் மாறிப்போவேன்.
  
நானும் வந்த புதுசுல ஊருக்கு போகனும்னு திரிவேன். அப்படி நம்ம ஊருக்கு போயிட்டா ஊருல சும்மா திரியிற நாயிக கூட நம்ம மேல கல்லெறிஞ்சுட்டு போகும் பாஸ். வெளிநாட்டுலேயே இதெல்லாம் பொழைக்க தெரில, இதெங்க உருப்பட போகுதுனு கிண்டல் பேசுவாங்க. இந்தா அடுத்த மாசம் தம்பிக்கு பீஸ் கட்டனும். ஊர்ல ஜவுளிக்கடையில வேலை பார்த்தேன். வெளிநாட்டுல வேலை, வேகமா சம்பாதிச்சுடலாம்னு வந்தேன். அதிகம் பணம் சம்பாதிக்கனும்னு ஆசை எல்லாம் இல்ல, அப்பா விட்டு போன கடன வேகமா அடைக்கனும்னு தான் வந்தேன், கிட்ட தட்ட முடிய போகுது. எப்படியோ என் தம்பிய படிக்க வச்சசாச்சு. இனி என் பாரம் கொஞ்சம் குறையும்னு சொல்லும் பால முருகன் ஒரு கட்டுமான பணி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
தினமும் 200 மீட்டருக்கு மேல் குழி தோண்டுவது தான் அவரது பிரதான வேலை. கை காச்சு போயிருச்சு தலைவா. ஊருல பாடி பில்டரா இருந்தேன் இப்போ சத்த முழுசா எடுத்து டி பி வந்தவனாட்டம்  ஆகிப் போச்சு நெஞ்சு கூடு என சொல்லும் இவரது பார்ட் டைம் வேலை இங்க உள்ள பெப்ஸி டப்பாக்களை பொறுக்கி சேர்த்து வைத்து அதன் மூலம் தன் தேவைகளை நிவர்த்தி செய்துட்டு சம்பளத்தை மணிஆர்டர் செய்வது தான்.

இங்க இப்படி வேலை பாக்குறத ஊருல இருந்த 5 ஏக்கருல பார்த்துருந்தா சொத்தாவது மிஞ்சி இருக்கும் தம்பி. நிலத்த வித்துட்டு இங்க வந்தேன் என சொல்லும் சேகர் அண்ணன் பெரம்பலூர் காரர். இப்போ லீவுக்கு ஊருக்கு போனா கூட 20000 ரூபா வேணும். அக்கா புள்ள தங்கச்சி புள்ளனு எல்லாத்துக்கும் ஏதாச்சும் வாங்கிட்டு போகனும்.இல்லைனா அதுக்கும் சண்ட போட ஆரம்பிச்சுருவாங்க. வெளிநாட்டுல இருந்து கைய வீசிட்டு வந்துட்டான்னு. அடுத்த மாசம் ஊருக்கு போறேன் எதுவும் குடுத்து விடனும்னா சொல்லுங்க குடுக்குறேன் இனி மேல் வெளிநாட்ட நினைக்க கூட மாட்டேன் தம்பி.

ஒரு ஓட்டலில் எனது உடை அமைப்பை பார்த்து அறிமுகமானவர் தான் நண்பர் சுரேஷ். சார் மதுரையானு கேட்டார். ஆமா எப்படி கண்டு பிடிச்சீங்க?.
 நம்ம ஊருகாரங்க மெட்ராசுக்கு போனா மஞ்ச பை, வெளிநாட்டுக்கு போனா பூட்கட் பேண்ட் என அறிமுகமாகி ஒரு நாள் வீட்டுக்கு வருமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவரோட வீட்டுக்கு போனேன், ஜெயகாந்தன் சுந்தர ராமசாமியின் என தமிழ் இலக்கிய புத்தகங்கள் இருந்தன.

வேர ஒண்ணுமில்ல நமக்கு சினிமா இயக்குநர் ஆகனும்னு கனவு பாஸ்,  இன்ஜினியரிங் முடிச்சுட்டு அங்க போறதுக்கு ரொம்பவே எதிர்ப்பு. வீட்டுலயும் கொஞ்சம் கடன்.இங்க வர்றதுக்கு முன்னால சான்ஸ் கேட்டு சுத்துனேன்.சான்ஸ் கிடைக்கிற நேரத்துல இங்க வர வேண்டிய சூழல். வந்துட்டேன்.வீட்டுலையும் ரெண்டு வருஷத்துக்கு பிறகு சேர்ந்துக்கோன்னு சொல்லிட்டாங்க.  இப்போ ரெண்டு வருஷம் முடிய போகுது. ஊருக்குபோக போறேன் அடுத்த மாசம் திரும்பவும் ஆரம்பிக்கனும். 

நாம என்ன ஹீரோவா சார்.இந்த வயசுக்குள்ள நடிக்கனும்னு, ஹாலிவுட்ல எல்லாம் 40 வயசுல தன சார் டைரக்ட் பன்றாங்க.ஆனால் ஒன்னு சார் தமிழ் சினிமாவுல உப்புமா கம்பனில கூட வேலை பார்த்துரலாம் இனிமேல் இந்தவெளிநாட்டநினைச்சு கூட பார்க்க கூடாதுங்க.ஆனால் இந்த    மலையாளிகள் எங்க போனாலும் இருக்காங்க. இவனுங்கள எல்லாம் வேலை கிடையாதுனு அனுப்பிச்சா தங்குறதுக்கு அவனுங்க ஊருல இடம் பத்தாது சார்னு சொல்ல நானும் விடைபெற்றேன்.

தினத்தந்தி குருவியார் வாரமலர் ஆகியவற்றில் படித்த நியாபகம். கேட்க கூடாதது நடிகைகளின் சம்பளமும் நடிகர்களின் வயதுமாம். தயவு செய்து சேர்த்துக்கொள்ளுங்கள். கேட்கக்கூடாதது வெளிநாட்டில் இருப்பவனது வேலையும் தான்.

- புஹாரி ராஜா--- kaattchi.blogspot.com

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

ஒரு கோப்பையிலே..........

ஒரு கோப்பையிலே..........


"என்ன மாம்ஸ், பிரமோஷனா, பார்ட்டி எப்ப?"

"கலக்கிட்டீங்க சார், இதுக்கே ஒரு ஸ்பெஷல் பார்ட்டி கொடுக்கணும் நீங்க"

"என்னது வெறும் ஸ்வீட்டா, நத்திங் டூயிங், ஒன்லி பார்ட்டி"

என்றெல்லாம் எடுத்ததற்கெல்லாம், வலது கையை உயர்த்தி முழங்கையை இடது கையால் தொடுபவர்களா, நீங்கள்? அப்படிஎன்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.









ஒரு மாதம் முன்பு என் அலுவலக சகா ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, அவர் சொன்னார், "சார், பாண்டிச்சேரி போனா, அங்க பக்கத்தில இருந்தவங்க ரெண்டு பேரு ஒரு புல் பாட்டிலை அரை மணி நேரத்திலே காலி பண்ணினாங்க சார், ஆனா அவங்க குடிச்ச மாதிரியே இல்ல, ரொம்ப சாதாரணமா ஏதோ கூல் டிரிங் குடிக்கிற மாதிரி இருந்தாங்க. குடிக்கும்போது பார்த்ததால எனக்கு தெரியும் இல்லன்னா, என்னாலேயே கூட கண்டுபிடிச்சிருக்க முடியாது. நான் நினைக்கிறேன், அதுனாலதான் பாண்டிச்சேரி சரக்குக்கே ஒரு மவுசு இருக்குன்னு. நம்மூர் சரக்கு ஒரு கட்டிங் விட்டாகூட அன்னைக்கு முழுக்க வாடை வந்துகிட்டே இருக்கு".





இதைப் படிச்சவுடனே இப்பவே ஒரு பாண்டிச்சேரி பஸ்ஸை பிடிக்க கிளம்பிடாதீங்க. மேல படியுங்க.







அந்த அலுவலக சகா சரியாக இரண்டே நாளில் மாரடைப்பால் காலமானார். காரணம், அவருடைய இடைவிடாத குடியின் காரணமாக குடல் அழுகி அதனால் மரணம் ஏற்பட்டது.







குடிப்பது என்பது ஒரு காலத்தில் இழிவாகக் கருதப் பட்டது. மறைந்த புலவர் கீரன் (சிறந்த சொற்பொழிவாளர்) வேடிக்கையாகக் கூறுவார்,"ஒரு குடிகாரன் காக்கை போல், கர்ணன் போல், இருப்பவன். எப்படிஎன்றால், காக்கை ஒரு உணவை உண்பதற்கு முன்னால் இந்தப் புறமும் அந்தப் புறமும் பார்த்துவிட்டுத் தான் உண்ணத் தொடங்கும். அது போல், ஒரு குடிகாரனும் சாராயக் கடைக்குப் போகும் முன், தன்னை எவராவது கவனிக்கிறார்களோ என்ற அச்சத்துடனேயே எல்லாப் புறமும் பார்த்துவிட்டு, தலையை ஒரு துணியால் மூடிக் கொண்டு கடைக்குள் நுழைவான். குடித்துவிட்டு யாரைக் கண்டாலும் அதைத் தருவேன், இதைத் தருவேன் என்று கர்ணன் போல் கொடையாளி ஆகி விடுவான்".







இந்த உவமையை நான் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் கேட்டேன். ஆனால், இப்போது இந்த காக்கை உவமை பொருந்தாது. ஏனென்றால், இப்போதெல்லாம் டாஸ்மாக் கடைக்குள் தைரியமாக நுழைகிறார்கள். நான்கு பேர் கூடும் இடத்தில் தான் டாஸ்மாக் கடைக்குப் போவதாகவே வெளிப்படையாகக் கூறுகிறார்கள். அரசாங்கமும், இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கவனத்தில் கொண்டு மக்கள் வீணாகிப் போவதை தடுக்காமல் அந்த வருமானத்தில் இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனத்தைச் செலுத்துகிறது.







மது, மாது, சூது இந்த மூன்றுக்கும் அடிமையான எவரையும் போதனையின் மூலம் திருத்த முடியாது. தானாகத் திருந்தினால் தான் உண்டு. ஆனால், அறிவுரையின் மூலம் அடிமையாகாமல் தடுக்க முடியும். "இதில் என்ன இருக்கு, சும்மா ஒரு கப் குடி" என்று என்னிடம் எத்தனையோ நண்பர்கள் நபர்கள் (அவர்கள் நண்பர்களாக இருக்க முடியாது, எனவேதான் இந்த அடித்தல்) கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் நான் கூறிய பதில் இதுதான், "ஆமா, இதில் என்ன இருக்கு, அதுனால இது வேண்டாம்"







என்னைப் பொறுத்தவரை, மதுவின் மூலம் நம்முடைய செல்வம், மானம், உயிர் போன்றவற்றிற்கு தீங்குதானே தவிர, நன்மை உண்டாவதாகத் தெரியவில்லை.





எனவே, குடியைத் தவிர்ப்போம், நல்ல குடிமகனாக வாழ்வோம்!
 
 
நன்றி-http://ulagamahauthamar.blogspot.com