nanrasithathu.blogspot.com

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

ஒரு கோப்பையிலே..........

ஒரு கோப்பையிலே..........


"என்ன மாம்ஸ், பிரமோஷனா, பார்ட்டி எப்ப?"

"கலக்கிட்டீங்க சார், இதுக்கே ஒரு ஸ்பெஷல் பார்ட்டி கொடுக்கணும் நீங்க"

"என்னது வெறும் ஸ்வீட்டா, நத்திங் டூயிங், ஒன்லி பார்ட்டி"

என்றெல்லாம் எடுத்ததற்கெல்லாம், வலது கையை உயர்த்தி முழங்கையை இடது கையால் தொடுபவர்களா, நீங்கள்? அப்படிஎன்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்.









ஒரு மாதம் முன்பு என் அலுவலக சகா ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபொழுது, அவர் சொன்னார், "சார், பாண்டிச்சேரி போனா, அங்க பக்கத்தில இருந்தவங்க ரெண்டு பேரு ஒரு புல் பாட்டிலை அரை மணி நேரத்திலே காலி பண்ணினாங்க சார், ஆனா அவங்க குடிச்ச மாதிரியே இல்ல, ரொம்ப சாதாரணமா ஏதோ கூல் டிரிங் குடிக்கிற மாதிரி இருந்தாங்க. குடிக்கும்போது பார்த்ததால எனக்கு தெரியும் இல்லன்னா, என்னாலேயே கூட கண்டுபிடிச்சிருக்க முடியாது. நான் நினைக்கிறேன், அதுனாலதான் பாண்டிச்சேரி சரக்குக்கே ஒரு மவுசு இருக்குன்னு. நம்மூர் சரக்கு ஒரு கட்டிங் விட்டாகூட அன்னைக்கு முழுக்க வாடை வந்துகிட்டே இருக்கு".





இதைப் படிச்சவுடனே இப்பவே ஒரு பாண்டிச்சேரி பஸ்ஸை பிடிக்க கிளம்பிடாதீங்க. மேல படியுங்க.







அந்த அலுவலக சகா சரியாக இரண்டே நாளில் மாரடைப்பால் காலமானார். காரணம், அவருடைய இடைவிடாத குடியின் காரணமாக குடல் அழுகி அதனால் மரணம் ஏற்பட்டது.







குடிப்பது என்பது ஒரு காலத்தில் இழிவாகக் கருதப் பட்டது. மறைந்த புலவர் கீரன் (சிறந்த சொற்பொழிவாளர்) வேடிக்கையாகக் கூறுவார்,"ஒரு குடிகாரன் காக்கை போல், கர்ணன் போல், இருப்பவன். எப்படிஎன்றால், காக்கை ஒரு உணவை உண்பதற்கு முன்னால் இந்தப் புறமும் அந்தப் புறமும் பார்த்துவிட்டுத் தான் உண்ணத் தொடங்கும். அது போல், ஒரு குடிகாரனும் சாராயக் கடைக்குப் போகும் முன், தன்னை எவராவது கவனிக்கிறார்களோ என்ற அச்சத்துடனேயே எல்லாப் புறமும் பார்த்துவிட்டு, தலையை ஒரு துணியால் மூடிக் கொண்டு கடைக்குள் நுழைவான். குடித்துவிட்டு யாரைக் கண்டாலும் அதைத் தருவேன், இதைத் தருவேன் என்று கர்ணன் போல் கொடையாளி ஆகி விடுவான்".







இந்த உவமையை நான் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் கேட்டேன். ஆனால், இப்போது இந்த காக்கை உவமை பொருந்தாது. ஏனென்றால், இப்போதெல்லாம் டாஸ்மாக் கடைக்குள் தைரியமாக நுழைகிறார்கள். நான்கு பேர் கூடும் இடத்தில் தான் டாஸ்மாக் கடைக்குப் போவதாகவே வெளிப்படையாகக் கூறுகிறார்கள். அரசாங்கமும், இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கவனத்தில் கொண்டு மக்கள் வீணாகிப் போவதை தடுக்காமல் அந்த வருமானத்தில் இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனத்தைச் செலுத்துகிறது.







மது, மாது, சூது இந்த மூன்றுக்கும் அடிமையான எவரையும் போதனையின் மூலம் திருத்த முடியாது. தானாகத் திருந்தினால் தான் உண்டு. ஆனால், அறிவுரையின் மூலம் அடிமையாகாமல் தடுக்க முடியும். "இதில் என்ன இருக்கு, சும்மா ஒரு கப் குடி" என்று என்னிடம் எத்தனையோ நண்பர்கள் நபர்கள் (அவர்கள் நண்பர்களாக இருக்க முடியாது, எனவேதான் இந்த அடித்தல்) கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் நான் கூறிய பதில் இதுதான், "ஆமா, இதில் என்ன இருக்கு, அதுனால இது வேண்டாம்"







என்னைப் பொறுத்தவரை, மதுவின் மூலம் நம்முடைய செல்வம், மானம், உயிர் போன்றவற்றிற்கு தீங்குதானே தவிர, நன்மை உண்டாவதாகத் தெரியவில்லை.





எனவே, குடியைத் தவிர்ப்போம், நல்ல குடிமகனாக வாழ்வோம்!
 
 
நன்றி-http://ulagamahauthamar.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக