nanrasithathu.blogspot.com

செவ்வாய், 6 மார்ச், 2012

இளையராஜாவி​ன் இசைமேடையும் இன்பவேளையு​ம்! - 2



ராஜாவின் ராகத்தாலாட்டைப் பற்றி எழுத நினைக்கையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவங்களும் போட்டி போட்டு என் முன்னாள் வந்து விழுகின்றன. அவற்றில் எதைத் தொகுத்து எழுதுவது என்பதிலே கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. அனேகமாக என்பதுகளின் ஆரம்பத்தில் இருந்து தொன்னூறுகளின் இறுதிவரை... இந்த இடைப்பட்ட காலத்தில் பிறந்து வளர்ந்த தலைமுறை கொடுத்துவைத்த தலைமுறை என்றே சொல்லவேண்டும். அந்த கொடுத்துவைத்த தலைமுறையில் நானும் ஒருவன் என்று நினைக்கும்போது பின்னணியில் ராகதேவன் வயலின் வாசிப்பதுபோல ஒரு ஃபீலிங்.

நான் காதலிக்கிறேன் என்ற உணர்வையும் தாண்டி அந்தக்காதலை ராஜாவின் ராகத்தோடு என் காதலை குழைத்துப்பார்க்கும்போது காதலின் ஒவ்வொரு மணித்துளியையும் சொர்க்கமாக மாற்றிய தருணங்கள் அவை. எதோ ஒரு திருவிழா காலத்தில் எங்கள் வீட்டில் கோவிலுக்கு மாவிளக்கு வைக்க மாவிடிக்கும் பின்னணி ஓசையில் வாசலில் நின்று அவளை ரசித்துக்கொண்டிருக்கையில் கோவில் குழாயில் பாடிய இந்தப்பாடல் இதோ இன்றுவரை நெஞ்சுக்கூட்டுக்குள் அவள் நினைவுகளையும் சேர்த்தே இடித்துக்கொண்டிருக்கிறது. நீங்களே கேட்டுப்ப்பாருங்கள்....

"மதுர மரிக்கொழுந்து வாசம்... என் ராசாத்தி உன்னுடைய நேசம்......



காதலிப்பது சுகம்தான் அதிலும் அந்த காதலி பக்கத்துக்கு வீட்டில் இருந்து விட்டால் சொல்லவே வேணாம்... எங்களின் ஒவ்வொரு வார்த்தைப் பரிமாற்றமும் ராஜாவின் இசையோடுதான் பரிமாறிக்கொள்வோம். என் ஒவ்வொரு காலையுமே அவளின் திருக்கோலத்தோடும் அவள் வாசலில் போடும் வண்ணக்கோலத்தோடும்தான் விடியும். அதுவும் மார்கழி வந்துவிட்டால் போதும்.

அந்த அதிகாலை பனியோடும் ஈரம் சொட்டும் கூந்தலோடும் அவள் வந்து நிற்கும்போது என்னை அறியாமல் என் வாய் முனுமுனுக்கும் பாடல் " பனிவிழும் மலர்வனம்.. உன் பார்வை ஒரு வரம்.." இப்படி ஒவ்வொரு அதிகாலையுமே ராஜாவின் இசையோடு கலந்தே அவளை சுவாசித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் கோலத்தின் நடுவில் சாணிப் பிள்ளையாரில் அவள் வைக்கும் பூசணிப்பூவோடு சேர்த்து என் நினைவுகளையும் அவளோடு சேர்த்து சொருகி விட்டே சென்றாள். இதை தெரிந்த ராஜாவும் எனக்காகவே போட்டு தந்த பாட்டுத்தான் இது..

" வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா..வச்சிப்புட்டா....




இசை என்பதும் ஒரு கடவுள்தான். அதற்க்குத் தகுந்த கருவறை கிடைத்துவிட்டால் போதும் அதன் அருள்வீச்சு அனைவருக்கும் பரவும். அப்படிப் பார்த்தால் ராக தேவனும் ஒரு இசையின் கருவறைதான். இசைக்கடவுளை உள்வைத்து அதன் அருளை அனைவருக்கும் அள்ளி அள்ளி வழங்கும் ஒரு இசைக்கோவில். இசை என்பது ஒரு கலை அல்ல.. அது ஒரு தவம். எல்லாமே இசையின் வடிவம்தான் என்றாலும் கேட்டவுடன் உயிரை உருக வைக்கும் இசை என்பது அனைவருக்கும் வாய்ப்பதில்லை.

இசையினால் மழை பொழியும்.. இரும்பும் உருகும் இவையெல்லாம் பெரிதல்ல.. மனிதனின் மனம் உருகவேண்டும்.. ஏனென்றால் மனித மனம் நினைத்த மாத்திரத்தில் வேற்று கிரகம்கூட சென்று வரும் ஒரு அதிவேக ராக்கெட். அந்த வேகத்தையே நிறுத்தி ஒரு இடத்தில நிறுத்தி வைக்கும் இசைதான் தெய்வீக இசை. அது ராஜாவுக்கு மட்டுமே வாய்த்தது. ஆன்மீக உணர்வு அதிகம் இல்லையென்றாலும் ஏதோ ஒரு காலையில் முதன் முதலில் இந்த பாடலை கேட்ட போது தேகம் சிலிர்த்து நானும் சொல்ல ஆரம்பித்தேன்...

"ஜனனி..ஜனனி... ஜகம் நீ அகம் நீ...




எந்த ஒரு ஆன்மீகத்தேடலிலும் மனதில் குருவாக ஒருவரை நினைத்திருப்போம். எனக்கு அப்போதெல்லாம் ரமணரை பற்றி அதிகம் தெரியாது. 96- களின் இறுதி என்று நினைக்கிறேன். ராஜாவின் ரமணர் பாமாலை ஒலி வடிவம் வந்தது. அதை கேட்டபோது ரமணர் யாரென்று தெரியாமலே அவரை நினைத்து உருக வைத்த இசை அது. இப்போது நான்கடவுள் படத்தில் வந்த "பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்" பாடல் அந்த இசை தொகுப்பில் உள்ளதுதான். அதே தொகுப்பில் பவதாரிணி பாடிய இந்த "ஆராவமுதே அன்பே ரமணா.... பாடலை கேளுங்கள்... உங்கள் புதிய ஆன்மீக உலகம் கண்ணில் தெரியும்.




எனக்கு விபரம் தெரிந்த காலத்தில் இருந்தே ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் மீதி ஒரு பக்தி உண்டு. என்ன காரணம் என்றெல்லாம் தெரியாது. சிறு வயதில் பள்ளிக் காலத்தில் ஜெயந்தி டீச்சர் என்று ஒருவர். தீவிரமான ராகவேந்திரர் பக்தை. அவர்கள் அடிக்கடி சொல்லிய ராகவேந்திரர் கதைகள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதன்பிறகு அவரின் வரலாற்றை தேடிப்படித்தேன். அதன் காரணமாகவே ரஜினி மீது ஒரு ஈர்ப்பு வந்தது தனிக்கதை. ஆனால் இன்று வரை என் ஆன்மீகத்தின் குரு என்றால் அது ஸ்ரீராகவேந்திரர்தான்.

சில சமயம் நினைத்துப்பார்ப்பேன். அவர் ஜீவ சமாதி ஆன அந்த நேரத்தில் நான் அங்கு இருந்து அதை பார்த்திருந்தால் என் உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்று. அதே காட்சி ஸ்ரீராகவேந்திரர் படத்தில் வரும். காட்சி என்று பார்த்தால் அது ஒரு படத்தில் வரும் காட்சி அவ்வளவுதான். ஆனால் அதற்கு இளையராஜா கொடுத்திருப்பார் பாருங்கள்... ஒரு உணர்வுப்பூர்வமான இசை.. நான் அந்த நேரத்தில் அங்கு இல்லையே என்ற குறையை இந்த இசை பிரவாகத்தின் மூலம் தீர்த்து வைத்தார் ராஜா. அந்த பாடலில் வரும் " குருவே சரணம்... குருவே சரணம்...." என்ற வரிகளை உச்சரிக்கும்போது ஸ்ரீராகவேந்திரரின் பாதத்தில் வீழ்ந்து கிடப்பதுபோல் ஒரு உணர்வு வரும். இதோ...இதை எழுதும்போதே என் உடம்பில் வரும் அதிர்வையும் புல்லரிப்பையும் என்னால் உணரமுடிகின்றது. இந்த பாடலைக்கேட்டு நீங்களும் ஒரு முறை சொல்லிப்பாருங்கள்

" குருவே சரணம்... குருவே சரணம்..





ராஜாவின் இசையோடு கலந்த எனது பயணமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.....


1 கருத்து: