nanrasithathu.blogspot.com

திங்கள், 16 ஏப்ரல், 2012

ஒரு பாமரத் தமிழனின் காதல் கடிதம்!

ஒரு பாமரத் தமிழனின் காதல் கடிதம்!

என் தேவதைக்கு,
இது உனக்கு நான் எழுதும் எத்தனையாவது கடிதம் என்று உனக்கு வேணா ஞாபகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கலைஞர் இலங்கை பிரச்சனைக்கு எழுதிய கடிதங்களுக்கு கணக்கு வைத்திருப்பது போல் நானும் கணக்கு வைத்திருக்கிறேன். இது எனது பத்தாவது கடிதம். ஆனாலும் அவர் எழுதிய கடிதங்களை பிரதமர் தூக்கி எறிந்தது போல் என் கடிதங்களையும் நீ எறிந்துகொண்டே இருக்கிறாய். அது தெரிந்தும் தொடர்ந்து கடிதம் எழுதிய கலைஞரை போல் நானும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பேன். என்ன ஒரு வித்தியாசம்? அவர் கடமைக்கு எழுதினார்.. நான் என் காதலுக்கு எழுதுகிறேன். என் இதயத்தின் ஒவ்வொரு செல்களையும் ஒவ்வொரு நாளும் 2G ஊழல் போல் அரித்துக்கொண்டே இருக்கிறாய். இதை உன்னிடம் சொன்னால் ராசா மறுத்ததுபோல வேகமாக மறுக்கிறாய். ஊழலை மக்களுக்கு புரியவைத்த அந்த சுப்ரமணியசாமி போல உனக்கும் என் காதலை உனக்கு புரியவைக்க அந்த பழனி சுப்ரமணிசாமிதான் அருள்புரியவேண்டும்.
கலைஞர் டிவிக்கு 200 கோடி பணம் வந்தது கனிமொழிக்கு மட்டும் தெரியாமல் போனதுபோல.. உன்னிடம் எனக்கு வந்த காதலும் எப்படி உனக்கு மட்டும் தெரியாமல் போனது? திமுக மந்திரிகள் செய்த சத்தமில்லாத நிலஅபகரிப்பு போல என் மனதையும் நீ சத்தமில்லாமல் அபகரிப்பு செய்துவிட்டு அவர்களைப்போலவே நீயும் ஒன்றுமே தெரியாது என்கிறாயே? இந்திய தண்டனை சட்டத்தில் இதற்கு என்ன பிரிவு? ஒவ்வொரு நாளும் உன் தரிசனம் பார்க்க பாராட்டு விழாவுக்கு ஏங்கிய கலைஞரைப்போல் என் மனம் தவியாய் தவிக்கிறது. ஆனாலும்.. கட்சி தலைமைக்கு அடித்துக்கொள்ளும் ஸ்டாலின் அழகிரி போல் உன் இதய செல்களில் இடம் பிடிக்க எத்தனை போட்டி தெரியுமா? ஆனாலும் நேரில் உன்னை பார்த்துவிட்டால், ஆங்கிலம் தெரியாமல் பார்லிமெண்டில் அழகிரி முழிப்பதுபோல எல்லாம் மறந்து நானும் முழிக்கிறேன். நீயும் மக்கள் ராமதாசை ஒதுக்கியதுபோல் என்னையும் பார்வைலே ஒதுக்கிவிட்டு கடந்துவிடுகிறாய்.
உன்னைப்பார்க்கும் போதெல்லாம் அம்மாவை பார்க்கும் மந்திரிகளைப்போல் கைகட்டி வாய்பொத்தி வளைந்துதான் நிற்கிறேன். ஆனாலும் நீ கேப்டனை பார்த்த அம்மாவைப்போல் முகத்தை திருப்பிக்கொண்டு போவது நியாயம் ஆகுமா? நீ வாசல் தாண்டி எப்போது வருவாய் எப்போது போவாய் என்று தெரியாமல் ஐந்து வருடங்களாக தமிழ்நாட்டு மக்கள் கரண்டுக்கு ஏங்கித்தவிப்பதுபோல் தவித்துக்கொண்டிருக்கிறேன். என்னதான் வெளியே வை.கோ மாதிரி வீரமாக பேசினாலும் உள்ளுக்குள் என் நிலையை எண்ணி அவரைப்போல் கலங்கி கொண்டுதான் இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நீ காங்கிரசை விரட்டி அடிக்கும் தமிழக மக்களைப்போல் என்னை விரட்டிக்கொண்டுதான் இருக்குறாய். ஆனாலும் அவர்களைப்போல நானும் மான ரோசம் கடந்து உன் உறவுக்கு ஏங்குகிறேன். என் இதயத்தில் இருந்து உன்னை இடம்மாற்றி வைக்க நீ ஒன்றும் சட்டசபையும் இல்லை என் இதயம் ஒன்றும் கோட்டூர்புரம் நூலகமும் இல்லை. நூல்களை எடுத்து விட்டு மருந்துகளை வைக்க.
ஒவ்வொரு தேர்தலிலும் தெரிந்தே ஏமாறும் வாக்காளனை போலதான் உன் பின்னால் நானும் சுற்றுகின்றேன். தடையில்லா மின்சாரம் என்றாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்துவரும் தமிழனைப்போல உன் கடைக்கண் பார்வையும் என்றாவது கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் வாழ்கிறேன். இருந்தாலும் என்னைப்பார்த்தாலே சட்டசபையில் நாக்கை துருத்திய கேப்டனைப்போல் உன் அண்ணனும் அடிக்கடி நாக்கை துருத்துகிறான். பரவாயில்லை.. நான் உன்னைக்காதலிக்காமல் தடுத்து நிறுத்தும் அளவிற்கு அவனுக்கு திராணி இல்லையென்றே நினைக்கிறேன். உன்னைக்காணாத ஒவ்வொரு நொடியிலும் என் இதயத்துடிப்பு அம்மா ஆட்சியின் பால் விலை போல ஏறிக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் அதற்கு போட்டியாக நீ என்னை காதலிப்பாய் என்ற நம்பிக்கையும் பஸ் கட்டணம் போல இரண்டு மடங்காக கூடுகின்றது. என்றாவது ஒருநாள் இந்திய ரூபாய் மதிப்புபோல நீயும் இறங்கி வருவாய் என்று எனக்கு தெரியும். அந்த நம்பிக்கையில்தான் நல்ல செய்திக்காக காத்திருக்கும் முல்வேலித் தமிழன்போல நானும் மூச்சை பிடித்துக்கொண்டு காத்திருக்கிறேன்.
இப்படிக்கு,
ஒரு பாமரத் தமிழன்

2 கருத்துகள்: