nanrasithathu.blogspot.com

புதன், 18 ஜனவரி, 2012

நிலாச் செடி

எனக்கும் உனக்குமான
ஒரு குழந்தை உலகம்
அங்கே நீயும்
இங்கே நானும்
அந்த உலகத்தில்
ஒன்றாய் விளையாடுகின்றோம்...

சிறு பிள்ளை விளையாட்டாய்
என்னவெல்லாம் தெரிகிறது என்கிறாய்
எல்லாவற்றிலும்
நீயே தெரிகிறாய் என்கிறேன்...

கொஞ்சலும் கெஞ்சலுமாய்
பிறர் உணராத உணர்வுகளை
அர்த்தமில்லாத வார்த்தைகளால்
பேசிக் கொள்கிறோம்...

வீட்டுக்குள்ளே
என் வானம்
அழகாய் இருக்கிறது
உன் வானத்தில்
நான் இருக்கிறேனா என்கிறாய்
அந்த இருளிலும் அண்ணாந்து பார்க்கின்றேன்
அந்த இருட்டு வானில்
உன் சிரிப்பை போல
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மின்னும் நட்சத்திரங்கள்
அழகாய் உன்னைப்போலவே...

இதை நான் சொல்லக்கேட்டு
இன்னும் அழகாய்
உனது புன்னகை...

எங்கே எனது நிலா
என்றாய்
அதைத்தானே
நானும் தேடிக்கொண்டிருக்கிறேன்...

கிடைத்தால்
உனக்கு பாதி
எனக்கு பாதி
என்கிறாய்
மறுக்க முடியாமல் சரியென்கிறேன்
அந்த நிலவுக்கு உரியவன்போல்....

உன் பாதி நிலவில்
ஒரு பாதியை
நட்டு வைக்கிறாய்
கனவின் கற்பனையில்
செடியாகி படருமா
மரமாகி வளருமா
ஆச்சர்யத்துடன் ஆராய்கின்றோம்...

செடியோ மரமோ
வளர்ந்து பின்னே அதில்
நிலா பூக்குமா
இல்லை
நிலா காய்க்குமா
பூத்தால்
தேன் இனிக்குமா
காய்த்தால்
பழம் சுவைக்குமா
மூளையை கழட்டி வைத்துவிட்டு
இதயங்களால்
ஆராய்ச்சி செய்கின்றோம்
இடைச்செருகளாய்
சாப்பாட்டு ராமன்
என்று பட்டம் வழங்குகிறாய்...

வளர்ந்து நிற்கும் அந்த
நிலாச் செடியில் ஏறி
வானம் போகலாம்
வழியில் பூத்து கனிந்த
நட்சத்திரங்களையும் நிலாக்களையும்
பறித்துப் போய்
அந்த வானில் ஒட்டி வைக்கலாம்
இருட்டிய அந்த வானம்
ஒளிரட்டும்
உனது புன்னகையைப்போல...
....Nathan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக