nanrasithathu.blogspot.com

புதன், 3 ஆகஸ்ட், 2011

யெளவனமான நிலையில் ஏழு ...

இதுவரை ஏழுவை அப்படி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு வித யெளவனமான நிலையில் கிணற்றின் மீது அமர்ந்தபடி நிலவைப் பார்த்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். கிணற்றில் பின்னல் வலை போடப்பட்டிருந்தாலும் அந்த கேப்பில் இவன் உள்ளே விழுந்துவிடுவானோ என்ற கவலையோடு அவனை சுற்றி மூன்று ஜூனியர் மாணவர்கள் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

”காதலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

அரைபீர் ஆனந்தமயானந்த ஏழுமலை சுவாமிகள் தன் சீடரில் ஒருவனைப் பார்த்து கேட்டுவிட்டு. அருகில் இருந்த பியர் பாட்டிலை கோப்பைக்குள் கவிழ்த்தார் . அவர் ஊற்றிய பியருக்கு ஏற்ற அளவில் தண்ணீரை கலந்து நன்றாக மிக்ஸ் செய்து கோப்பையை சுவாமிகளிடம் தந்தான் ஒரு சீடன். கல்ப்பாக அடிப்பது ஆகம விதிப்படி ஆகாது என்பதால் சிப் சிப்பாக அடிக்கத் தொடங்கினார் சுவாமிஜி. முதல் சிப்பை சிப்பியபின் கோப்பையை கீழே வைத்துவிட்டு சீடர்களைப் பார்த்தார்.

”உன்னைத்தான் கேட்கிறேன்.காதலைப் பற்றி என்ன நினைக்கிறாய்”

ஒரு சிப்பிலே குரு ஏகாந்த நிலை அடைந்துவிட்டதை புரிந்துக் கொண்ட சீடன் ஒருவன் பதில் சொன்னான் “அதெல்லாம் எதற்கு குருவே? பெற்றெடுத்த அப்பா அம்மாவுக்கு தெரியாதா யாருடன் வாழ வேண்டும் என்று”.

ஆசிரமத்தில் சேர அடிப்படைத் தகுதியே இல்லாமல் பதில் சொன்னான் மூடன். இல்லை இல்லை சீடன். சுவாமிகளுக்கு கோவம் வந்துவிடுமோ என்று அஞ்சியபடி சீடனை முறைத்தார்கள் மற்ற இருவரும். ஆனால் ஒரு அகோர சிரிப்பு சிரித்து தன்னை மற்றவர்கள் புரிந்துக் கொள்ள முடியாது என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்தார் அரை….. சுவாமிகள்.

சிஷ்யா.. பிசையப்படும் மைதா மாவு பரோட்டா ஆகுமா, பூரி ஆகுமா என்று மாவுக்கு தெரியாது. ஆனால் பிசையும் மாஸ்டருக்கு தெரியும் இல்லையா?

தலை சொறிந்தபடி ஆம் என்றான் ஒரு சீடன். இன்னொரு சீடன் ஞானம் பெற்றவன். அவனுக்கு சுவாமிகள் சொல்வது புரிந்து, ”ஆம். சுவாமி. பரோட்டா மாஸ்டர் தானே பெற்றவர்கள். அவர்களுக்கு தெரியாதா?” என்றான்.

”நீ அரைபியர் போலவே அரைஞானஸ்நானம் பெற்றிருக்கிறாய். நான் முடித்து விடுகிறேன். அந்த பரோட்டாவை யார் சாப்பிட போகிறார்கள் என்பது மாஸ்டருக்கு கூட தெரியாது இல்லையா?” சுவாமிகள் கேட்ட கேள்வியை விட கேட்டபின் விட்ட லுக் சீடர்களுக்கு அடிவயிற்றில் பிரளயத்தையே உண்டு பண்ணியது.

”காதலும் அவ்வாறுதான். இந்த பூமியில் பிறந்த யாருக்கும் அவர்கள் துணை யாரென்று தெரிவதில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். எனக்கான காலமும் வந்துவிட்டது. எனக்குள் காதலும் வந்துவிட்டது” என்றார் சுவாமிகள்.

காதல் எல்லாம் போலி குருவே. சில காலம் சென்ற பின் போரடித்துவிடும்.

”இல்லை சிஷ்யா. ஒரு காகிதம் இரண்டு நொடி எரிந்தாலே சாம்பல் ஆகிவிடும். ஒரு கட்டை 10 நிமிடம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஒரு மரம் ஒரு மணி நேரம் எரிந்தால் சாம்பல் ஆகிவிடும். ஆனால் ஒரு குண்டு பல்பு எவ்வளவு நேரம் எரிந்தாலும் சாம்பல் ஆகாது. காதல் பல்பு போன்றது”

இவர் பல்பு வாங்க போறது என்னவோ நிஜம்தான் என்று முனகிய இன்னொரு சீடன் அடுத்த கேள்வியைக் கேட்டான். “குருவே த்ரிஷா போனா திவ்யா. அல்லது ரஞ்சிதா போனா ரகசியா என்பதுதானே காதல்?

மீண்டும் தன் அ”கோர” சிரிப்பை உதிர்த்த சுவாமிகள் ஒரு கேள்வியை முன் வைத்தார். “ஒரு பூனையின் முன் இரு தட்டுகள். ஒன்றில் மீன் துண்டு. இன்னொன்றில் பால். பூனையின் கண் எதன் மேலிருக்கும்?”

யோசித்த சீடர்கள் ஆளுக்கொரு விடையை சொன்னார்கள்.

இரண்டுமே தவறு சிஷ்யர்களே. பூனையின் கண் மூக்கு மேலதான் இருக்கும். அது மாறவே மாறாது. அது போலதான் காதல். மீனும், பாலும் சைட்டடிக்கும் பெண்கள் போல. ஆனால் காதல் மூக்கைப் போல. புரிகிறதா?

இதற்கு மேலும் புரியவில்லை என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ள விரும்பாத சிஷ்யர்கள் குருவோடு ஒத்துப் போனார்கள். இந்தக் கொடுமையெல்லாம் கேள்விப்பட்ட ஆறு, பாலாஜியை அழைத்துக் கொண்டு மடத்திற்கு, ச்சே கிணத்தடிக்கு சென்றான். சீடர்களை ஓடுங்கடா என்று விரட்டிவிட்டு என்னடா பிரச்சினை என்றான் . தன் காதலை விளக்கிய ஏழு அவளில்லாமல் தான் வாழ்வது என்பது பாராட்டு விழா இல்லாமல் வாழும் கலைஞரைப் போன்றது. அது சாத்தியமில்லை என்றபடி மிச்ச பியரை குடித்தான். ஏற்கனவே பியரில் அரைபாட்டில் இல்லாததைக் கண்ட ஆறு, இனிமேல் இவனை இங்கே விட்டால் கிணத்துக்குள் விழுந்து விடுவான் என்பதால் பாலாஜியின் துணையோடு அவனை அறைக்கு தூக்கி சென்றான்.

பதறியபடி வந்த நண்பர்களிடம் ”இன்னைக்கும் அரை பீர முழுசா குடிச்சிட்டாண்டா. ராவா அடிச்சானா என்னன்னு தெரியல” என்று புலம்பினான் ஆறு. நிலைத் தடுமாறி படுக்கையில் விழுந்த ஏழு சொன்னான் “ஹாஃப் முடிஞ்சுதா? இந்த மொடா குடிகாரனை கட்டிக்கிட்டு என்ன செய்ய போறாளோ அவ”. ஆறுவைத் தவிர அனைவரும் சிரிக்க தொடங்கினார்கள், மொடா குடிகாரன் என்ற சொல்லாடலைக் கேட்டு.

மறுநாள் அரைபீர் மயக்கம் தெளிந்து எழுந்த ஏழு, தேடிப்பிடித்து அதிகம் அழுக்கில்லாத ஒரு ஜீன்ஸூம், டீஷர்ட்டும் அணிந்துக் கொண்டு ஆறு எழுதி தந்த காதல் கடிதத்தோடு புறப்பட்டான். முதலாம் ஆண்டு கணிணி துறையில் படிக்கும் ஏழுவின் காதலி சரியாக எதிரில் வந்துக் கொண்டிருந்தாள். நேராக எதிரில் சென்ற ஏழு கடிதத்தை தந்து படிக்க சொன்னான். எழுத்துக் கூட்டி கூட்டி ஒரே ஒரு பக்கத்தை 14 நிமிடம் படித்த பின் வாய் திறந்தாள் ஏழுவின் தேவதை

:

:

:

:

“அண்ணா யாரையாவது லவ் பண்றீங்களா?”

ஏழு தன் சீடர்களோடு டாஸ்மாக்கை நோக்கி நடந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக