nanrasithathu.blogspot.com

திங்கள், 20 செப்டம்பர், 2010

இலவச நாயகனே.... இம்சை அரசனா மாறிடாதீங்க !

நிலம் பிடுங்கும் அரசுக்கு கோவணாண்டி நெத்தியடி !


முத்தமிழ் அறிஞர், முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு கோவாணாண்டி வணக்கம் சொல்லிக்கிறேன்.
'கடுதாசி எழுதியே காலகாலமா கட்சி நடத்துறவன் நானு. எனக்கே, அடிக்கடி கடுதாசி எழுதி கடுக்காய் கொடுக்கறானே இந்த கோவணாண்டி'னு யோசிக்கறீங்களா?
என்ன இருந்தாலும், 'உடன்பிறப்பே, உளுத்தம்பருப்பே'னு நீங்க வக்கிற பன்ச்சுக்கு முன்ன, என் கடுதாசியெல்லாம், கால் தூசுக்கு சமானம்முங்க. ஏதோ 'பஞ்சத்து ஆண்டி, பரம்பர ஆண்டி'னு சொல்வாங்களே அந்தக் கதைதான் எங்கதை. நானெல்லாம் ஏதோ வயித்துப்பாட்டுக்காக எழுதித் தொலைக்கிறேன். நீங்க இலக்கியத்தைக் கரைச்சி ஊத்தி எழுதி, படிக்கறவங்கள கிறங்கடிக்கற ஆளாச்சே!
அதுகிடக்கட்டும்... நானு தொடங்கிய பிரச்னைக்கு வாரேன்!


அய்யா... எல்லாருக்கும் 'இலவச நாயகன்'னு இருக்கற நீங்க, கோவணாண்டிகளுக்கு மட்டும் ஏன்யா... இம்சை அரசனா இருக்கீங்க. 'நான்தான் இலவச மோட்டார் கொடுக்குறேனே இன்னமும் என்ன?'னு கேக்குறது காதுல விழுகுது. ஆனா, இலவச மோட்டாரால எங்களைவிட மோட்டார் கம்பெனி முதலாளிகளுக்குதான் அதிக லாபம்னு உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். கோவணாண்டிகளவிட, கோடீஸ்வரருங்களுக்குத்தான் எப்பவுமே உங்க மனசுல இடம்கிறதுல மாற்றுக் கருத்து இல்ல. என்ன நாஞ்சொல்றது சரிதானே? இப்பக்கூட பாருங்க... பசுமை விமான நிலையத் திட்டத்துலயும் (க்ரீன் ஃபீல்டு) அதைத்தானே நிரூபிச்சுக்கிட்டிருக்கீங்க.
'விமான நிலையம் உள்ளிட்ட மக்களுக்குத் தேவையானத் திட்டங்களைச் செயல்படுத்த, நிலத்துக்காக விவசாயிகளிடம் கையேந்துற நிலையிலதான் இருக்கறேன்'னு ஒரேயடியா வருத்தப்பட்டிருக்கீங்க.
வழக்கமா உதைச்சுதான் புடுங்குவோம்... இப்ப கெஞ்ச வேண்டியதாகிப் போச்சுதேனுதானே இப்படி அங்கலாய்க்கறீங்க? ஆமா, இதுல வருத்தப்படுறதுக்கு என்னங்க இருக்கு? இருக்கிறவங்ககிட்ட இல்லாதவங்க கையேந்தறது நியாயம்தானுங்களே!
நீங்க சொல்ற பசுமை விமான நிலையம், பல ஏக்கர்ல சிறப்புப் பொருளாதார மண்டலம், நாட்டு வளர்ச்சி, ரோட்டு வளர்ச்சி இதையெல்லாம் நாங்க மறுக்கல. ஆனா, அதெல்லாம் யாருக்குப் பலனக் கொடுக்கப் போகுது? வழக்கம்போல ஒங்களோட கூடிக் குலாவப் போற கோடீஸ்வரருங்களுக்குதானே.
அதுக்கு குறுக்க நிக்க நாங்க விரும்பல. தொழில் வளர்ச்சிக்கு நிலத்தைக் கொடுக்க மாட்டோம்னும் நாங்க சொல்லல. ஆனா, தேவையான நிலத்தை மட்டும் எடுங்க... அதுக்கு உண்டான சந்தை விலையை ஏமாத்தாம கொடுங்கனுதானே கேக்குறோம்.
ஆனா, ஏதோ ஒங்க வீட்டு நிலத்தை நாங்க வம்படியா பிடிச்சுக்கிட்டு அழிச்சாட்டியம் பண்றாப்புல இல்ல பேசறீங்க..! இதெல்லாம், சினிமா செட்டு கணக்கா திடுதிப்புனு சேர்ந்த சொத்து இல்ல. ஊரையடிச்சு உலையில போட்டு ரொம்ப பேரு வளைச்சுப் போட்டுருக்காங்களே... அப்படி சேர்த்தது இல்ல. எங்கப்பன், ஆத்தாவெல்லாம் வம்பாடுபட்டு உடம்பை உழைச்சு சேர்த்து வெச்சது.
அது சரி... அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்ககிட்ட நிலத்தை அபகரிக்க பார்க்கற நீங்க, ஏதாவது ஒரு கோடீஸ்வரருகிட்ட சந்தை விலையைவிட கம்மியா ஒரு துளி இடத்தையாவது வாங்கிடுங்க பாப்போம்.
சென்னையில ரோட்டை பெருசாக்கறதுக்காக ஓட்டல், சபா அது, இதுனு பலருக்கும் சந்தைவிலையைவிட அதிகமா கொடுத்து நிலத்தைக் கெஞ்சிக் கூத்தாடி வாங்கின கதையையெல்லாம் எங்கூரு இங்கிலிபீஸு வாத்தியாரு ஏற்கெனவே இங்கிலீஸு பேப்பர்ல படிச்சு எங்களுக்கு சொல்லியிருக்காருங்கோ!
ஆனா, 'ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி'ங்கற கதையா... எப்பவும் எங்க தலையில கைவெக்குறதுனா... எங்கிருந்துதான் ஒங்களுக்கெல்லாம் குஷி பிய்ச்சுக்கிட்டு வருமோ?
இப்ப நீங்க கூடத்தான் அண்ணாசாலையில ஒரு பெரிய இடத்த (அறிவாலயம்) வளைச்சு (காசு கொடுத்துதான்) போட்டு வெச்சு இருக்கீங்க. கோவணாண்டிக எல்லாம் சேர்ந்து, அரசு நிர்ணயிச்சு வெச்சு இருக்கற விலைக்கு அதைக் கேட்டா... கொடுத்துடுவீங்களா? அட, சந்தை விலைக்கே கேட்டாலும்தான் கொடுப்பீங்களா?
அந்த அறிவாலயத்துக்கு முன்ன, முறைப்படி மாநகராட்சிகிட்ட ஒப்படைக்க வேண்டிய இடத்தையே வளைச்சுப் போட்டு வெச்சுக்கிட்டு, பம்மாத்து காட்டிக்கிட்டிருக்கீங்கனு ஜெயலலிதாம்மா அப்பப்ப குத்திக்கிட்டே இருக்கறாங்க. கேட்டா, 'அண்ணா பார்க்கு'னு ஒரு போர்டைக் காட்டி புரூடா விட்டுக்கிட்டிருக்கீங்கனு நக்கல் அடிக்கறாங்க.
அதுமாதிரியெல்லாமா நாங்க சொல்லிக்கிட்டு திரியறோம்? உள்ள இடத்துக்கு, உரிய விலையைக் கொடுங்கணுதான் கேக்கிறோம். கொடுத்துட்டு போக வேண்டியதுதானே... அதை விட்டுட்டு திருவள்ளூர் போலீஸை விட்டு, எங்காளுகள அடிச்சு நொறுக்கறீங்க. அதுக்கு சப்போர்ட்டா, அம்மா, கறுப்பு எம்.ஜி.ஆரு, டாக்டருனு நாலு பேரு வந்து நின்னா... அவங்கள எதிர்த்து அறிக்கை விடுறது, கடுதாசி எழுதறதுனு கதையையே திசை திருப்பப் பார்க்கறீங்க?
அவங்கள்லாம் அரசியல்வாதிங்க. அரசியல் பண்ணணும்கிறதுக்காக இப்படியெல்லாம் கோஷம் போடுவாங்க... கொடி பிடிப்பாங்கதான். அவங்க மேல இருக்கற கோபத்துல, எங்க பொழப்புல கையை வெச்சுப்புடாதீங்க... சொல்லிப்புட்டேன்:
'பசுமை விமான நிலையத்துக்குதானே கேட்கிறேன். விமானம் பறந்தாதானே.. பெரிய பெரிய முதலாளிங்க பணப்பெட்டியோட வருவாங்க. தொழில் துவங்குவாங்க.. வேலைவாய்ப்பு பெருகும்'னு காரணம் சொல்லலாம். ஆனா, நெய்வேலியில இப்படி நெய் வடிய பேசிப்பேசி இடத்தையெல்லாம் வளைச்சுக்கிட்டு, அங்க இருந்த பூர்வக்குடிகளை நாடோடிகளா ஆக்கின கதை, எங்களுக்கு எத்தனைக் காலம் போனாலும் மறக்காதுங்கய்யா.
'அதைச் செய்தது நான் இல்லை கண்மணியே... காங்கிரஸ் எனும் கல் மனதுக்காரர்களின் கைவண் ணம்'னு டயலாக்கை எடுத்து விடுவீங்க!
ஆனா, காங்கிரஸு, கழகம், காவி இதெல்லாம் ஒரே குளத்துல ஊறுன மட்டைங்கறதத்தான் நாங்க கண்ணார பார்த்துக்கிட்டே இருக்கோமே!
'தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சினு கடிவாளம் கட்டுன குதிரையாட்டம் ஓரே திசையில ஓடி, முட்டு சந்துல முட்டிகிட்டு அமெரிக்கா நிக்குது'னு எங்க ஊரு இங்கிலிபீஸு வாத்தியாரு தினம் தினம் கோணவாய்க்கா கரையில நின்னு கூவிக்கூவி படிக்கறத நாங்களும் கேட்டுக்கிட்டுதானே இருக்கோம்.
உள்ளூர்ல, உழவனுங்க இடத்தையெல்லாம் வளைச்சி, சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைச்சு அந்நிய நாட்டு ஏவாரிகளுக்கு கொடுத்து அழகு பார்க்கறீங்க. ஆனா, உள்ளூருக்காரன் உசுரு வாழ, உருப்படியான விலையைக் கொடுனு கேட்டா கரிச்சிக் கொட்டறீங்க?
'தொழில் வளர்ச்சிக்கு நிலம் கேட்டா.. இத்தனை நொட்ட பேசுறதா?'னு நீங்க கரகரக்கிறது கேக்குதுங்கையா. தெரியாமத்தான் கேட்கிறேன், விவசாயமும் தொழில்தானுங்களே! ஒருவேளை உங்க ஆட்சியில அது 'பிச்சைக்காரங்களோட வேலை'னு மாத்திப்புட்டீங்களா?
'தொழில் வளர்ச்சி' முகமூடியை மாட்டிக்கிட்டு... நாலு ஏக்கருல குளியல் குளம், 5 ஏக்கருல கக்கூஸு, 50 ஏக்கருல விளையாட்டு திடல்னு விளைநிலத்த விரையமாக்காம, எவ்வளவு தேவையோ அதை மட்டும் எடுங்க. அதை விட்டுட்டு தேவையைவிட தொண்ணூறு மடங்கு, தொள்ளாயிரம் மடங்குனு எதுக்காக கூடுதலா எடுக்கறீங்க?
இதோ... ஆக்ராவுல இருந்து, டெல்லி வரைக்கும் ரோடு போடுறதுக்காக ஒங்கள மாதிரியேதான் போலீஸைவிட்டு மிரட்டி நிலத்தைப் புடுங்கப் பார்த்தாங்க மாயாவதி அக்கா. ஆனா, எங்காளுக அசைஞ்சு கொடுக்கலனதும் துப்பாக்கியைத் தூக்கினாங்க. நாலு பேரைக் குருவி சுடற மாதிரி சுட்டும் போட்டாங்க. இப்ப, விவசாயிக கால்ல விழுந்து கெஞ்சிகிட்டு இருக்காங்க.
'கையகப்படுத்தற நிலத்துக்கு உரிய விலையைத் தர்றதோட, 33 வருஷம் வரைக்கும் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்னு கணக்குப் பண்ணி பணம் கொடுத்துட்டே இருப்போம். விவசாயி விரும்பாத நிலத்தை தொடமாட்டோம்'னு இறங்கி வந்திருக்காங்க அந்தக்கா!
அதையெல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு, யோசிச்சுப் பார்த்து நல்லமாதிரியா ஒரு முடிவெடுங்க. 'ஒண்ணு மண்ணா பொறந்தோம்... ஒண்ணு மண்ணா வாழ்வோம்'னு நாங்களும் விட்டுக் கொடுக்கத் தயாரா இருக்கோம். அதைவிட்டு அதட்டியே காரியத்தை சாதிக்கப் பார்த்தா... கொஞ்ச நாளைக்கு முன்ன கம்யூனிஸ்டுங்கள மிரட்டறதுக்காக எடுத்துவிட்டீங்களே ஒரு 'மாவோயிஸ்ட் பூதம்'... அது உங்க புண்ணியத்துல நிசமாவே நம்ம ஊருல நடமாட ஆரம்பிச்சாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல!
உங்களுக்கென்ன.. உங்க வாரிசுங்க.. மூணாவது தலைமுறைங்கனு ஆளாளுக்கு நயன்தாரா.. தமன்னாக்கள ஆடவிட்டு காசு பண்ணுற வித்தைய கத்துக்கிட்டாங்க. இனி, ஒரு இருநூறு தலைமுறைக்குக்கூட ஒங்களுக்கு பஞ்சமிருக்காது.
எங்களுக்கு இருக்குறதே இத்துணூண்டு நிலம்தான்... அதையும் பிடுங்கிக்கிட்டா... வீதிக்கு வராம வேறென்ன செய்யமுடியும்?!
இப்படிக்கு
கோவணாண்ட
நன்றி-விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக