nanrasithathu.blogspot.com

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

பல்புகள் பலவிதம்

பிரியாணி பொட்டலத்தை பிரிச்சு தெருவோரமா போட்டா, காக்கா எல்லாம் கூட்டம் கூடி, கோரஸ் பாடுமே பாத்திருக்கீங்களா..? கிட்டத்தட்ட அதே மாதிரி இருந்தது எங்க காலேஜ் கேம்பஸ். எங்கே பாத்தாலும் கருப்பு கலர் கவுனை போட்டுகிட்டு பசங்களும் பொண்ணுங்களும் என்னவோ சிரிச்சு பேசிகிட்டு இருந்தாங்க. காலேஜ்ல அன்னிக்கு பட்டமளிப்பு விழா.

எல்லாரும் எல்லாரையும் கிண்டல் பண்ணிகிட்டு, எதுக்கு சிரிக்கறோம்னு எந்த ஒரு காரணமும் இல்லாம, எவன் எதைச் சொன்னாலும் சத்தம் போட்டு சிரிச்சுகிட்டிருந்தோம்.

"டைம் என்னடா மச்சி..?"னு ஒருத்தன் கேட்டதுக்கு ஏன் அவ்ளோ நேரம் சிரிச்சோம்னு எங்களுக்கே தெரியலை. வழக்கமா நம்மள கண்டுக்காத பொண்ணுங்க எல்லாம் கூட அன்னிக்கு "ஹாய்..!" சொன்ன சந்தோஷத்துல, பல பசங்க முகம் பீர் போல பொங்கி பூரி போல உப்பியிருந்தது.

வந்தார் வில்லன்; எங்க இங்கிலிஷ் புரொஃபசர். அவருக்கு எங்க சீனியர்ஸ் 'ஷேக்ஸ்பியர்'னு பேர் வெச்சிருந்தாங்க.. நாங்களும் அதை வழிமொழிஞ்சோம்.

'ஷேக்' இருக்காரே.. ரொம்ப சென்சிடிவான ஆளு. உலகத்துல எந்த காலேஜ் ஸ்டூடண்ட்டுக்கும் இங்கிலீஷ்ல பிடிக்காத ஒரே வார்த்தை தான் அவருக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை : டிசிப்ளின்.

இந்த பட்டமளிப்பு விழாவுக்கு அவர் தான் இன்சார்ஜ். ஏற்கனவே கொஞ்சம் சிடுசிடுன்னு தான் இருப்பார்.. இப்ப இந்த பொறுப்பும் சேர்ந்ததுல, பச்சை மிளகா கடிச்ச கடுவன் பூனை மாதிரி ஆயிட்டாரு.. இன்னிக்கு எவன்டா சிக்குவான்னு சிலுப்பிகிட்டுருந்தார்.

என் கெட்ட நேரம், அவர் எங்க பக்கம் வரும்போது நான் தான் சத்தம் போட்டு சிரிச்சிட்டிருந்தேன். என்னோட கருப்பு கவுன் தரைல கிடந்தது.

"ஹலோ.. வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்..?"

தமிழ்ல கேட்டாலே நான் ததிங்கிணதோம்.. இதுல, இங்க்லிஷ்ல வேற கேட்டுட்டாரா.. என் வெளி நாக்கு உள் நாக்கோட போய் ஒட்டிகிட்டு சுத்தமா பேச்சே வரலை.

அதுக்கப்பறம் அவர் பேசினது என் காதுல, " @#$% &*(*.. ? @#$%^%#$%^&*#$$..!" இப்படி தான் விழுந்தது.

வழக்கமா டென்ஷனா இருந்தா, கண்ல தான் பூச்சி பறக்குதுன்னு சொல்லுவாங்க.. எனக்கு காதுல பூச்சி பறந்தது. ஏதோ என் டி ஷர்ட்-அ காட்டி கேட்டதால, "ஸாரி சார்.. அதர் குலோத்ஸ் ஆர் வெட்.. ஸோ திஸ் டி-ஷர்ட்.."ன்னு பினாத்தினேன். அட, இப்ப தான் பாக்கறேன்.. சுத்தி இருக்கற எல்லாரும் என்னவோ இண்டர்வியூவுக்கு போற மாதிரி நல்லா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கானுங்க..

'ஷேக்' கடுப்பாகி தமிழ்ல பேச ஆரம்பிச்சிட்டாரு. "கான்வகேஷனுக்கு வரும்போது எல்லாரும் ஃபார்மல் டிரஸ்ல தான் வரணும்னு மொதல்லயே சொல்லியிருந்தோம் இல்லை.. இந்த மாதிரி ஏன் இன்டீசன்ட்டா வர.. மத்தவங்க எல்லாம் ஒழுங்கா வரும்போது.. ஒய் ஆர் யூ கமிங் லைக் திஸ்.. ஸ்டுப்பிட்..!"

"........."

" என்ன முழிக்கற.. வந்திருக்க சீஃப் கெஸ்ட்டும், சான்சிலரும் என்ன நினைப்பாங்க..? போ.. ஓடு.. இதை கழட்டி எறிஞ்சுட்டு நல்லதா ஷர்ட் போட்டுகிட்டு வா.. இல்லாட்டி இன்னிக்கு நீ சர்டிஃபிகேட் வாங்க முடியாது..! "

என் சந்தோஷம் எல்லாம் வத்திப் போய், உடனே பைக்கை எடுத்துகிட்டு வீட்டுக்கு போய் வேற டிரஸ் போட்டுகிட்டு வந்தேன்.

அப்பறம் மஞ்சா, சிவப்புன்னு கலர் கலரா கவுன் போட்ட குரூப் மேடை மேல உக்காந்துகிட்டு, கருப்பு கவுன் போட்டவங்களுக்கு அறிவுரைகளை வாரி இறைச்சாங்க. நாங்க பட்டதாரி ஆயிட்டோம்.

அடுத்தது போட்டோ செஷன். அதுக்கு பயங்கர கூட்டம். மறுபடியும் பிரியாணி பொட்டல காக்கா கூட்டம் ரிபீட் ஆக, ஷேக் இப்படியும் அப்படியும் அலைஞ்சிட்டிருந்தார்.

நான் ஒரு மரத்தடியில நின்னுட்டு இருந்தேன். பக்கத்துல ஒரு பையனை சுத்தி 7,8 பொண்ணுங்க பேசிட்டிருந்தாங்க.. காதுல புகையோட எட்டி பாத்தேன். எந்த டிபார்ட்மெண்ட் ஸ்டூடண்ட்னு தெரியலை.. கருப்பா இருந்தான். சிவப்பு கலர்ல ரவுண்ட் நெக் பனியன். அதுல வெள்ளை கலர்ல ஒரு டிசைன். எட்டு பாக்கெட் இருக்க கார்கோ பேண்ட், ஏதோ லோக்கல் பிராண்ட் ஷூ.

அவன் ஏதோ சொல்ல, பொண்ணுங்க லைட்டா சிரிச்சாங்க.. ஷேக் நேர அவன் கிட்ட வந்தார். அவன் போட்டிருந்த டிரஸ்ஸை பாத்தார்.

எனக்கு கிடைச்ச திட்டு எல்லாம் சும்மா.. அவனை இங்க்லீஷ் அடுப்புல போட்டு வாட்டி எடுத்துட்டார். அவன் ஒண்ணும் புரியாம வெலவெலத்து போய், அவரையே கொஞ்ச நேரம் மலங்க மலங்க பாத்துகிட்டு நின்னான்..

அவன் பதில் எதுவும் சொல்லாம இருந்தது 'ஷேக்'குக்கு இன்னும் கடுப்பாயிடுச்சு.. தமிழுக்கு தாவினார்.." என்ன முழிக்கற... பத்து வார்த்தை இங்க்லீஷ்ல சேர்ந்தாப் போல பேசினாலே புரியலை.. நீ எப்படி வேலைக்கு போற இடத்துல பேசப் போற.. உனக்கெல்லாம் எதுக்கு டிகிரி.. கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் கிடையாது.. டிசிப்ளின் கிடையாது.. பொறுக்கி மாதிரி ஒரு டிரஸ்.. "

அவன் "சார்.. இப்ப உங்களுக்கு என்ன வேணும்..?"

"என்ன வேணுமா.. இடியட்.. இப்படி பிச்சைக்காரன் மாதிரி டிரஸ் போட்டு வந்திருக்கியே.. மொதல்ல வெளிய போ.. இந்த டிரஸ் போட்டுகிட்டு நீ இன்னிக்கு எப்படி டிகிரி வாங்கறேன்னு நான் பாத்துடறேன்.. இன்னிக்கு மட்டுமில்லை.. நீ என்னிக்குமே டிகிரி சர்டிஃபிகேட்டே வாங்க முடியாம பண்றேன் பாரு.."

"எனக்கு எப்படி சார் டிகிரி சர்டிஃபிகேட் குடுப்பாங்க.. நான் பத்தாங்கிளாஸ் ஃபெயில்.. இந்த ஃபங்ஷனை போட்டோ எடுக்க வந்திருக்க போட்டோகிராபர்..!"னான்.

இப்ப எங்க வீட்ல டிகிரி வாங்கி முடிச்ச பிறகு நாங்க எடுத்துகிட்ட குரூப் போட்டோ இருக்கு. அதுல எல்லாரும் கேமராவை பாத்து நல்லா சிரிச்சிட்டிருக்கோம். 'ஷேக்' மட்டும் கேமராவ பாக்காம முகத்தை திருப்பி வெச்சிருக்காரே.. ஏன்ன்ன்ன்..?
நன்றி- பல்பானந்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக