nanrasithathu.blogspot.com

சனி, 18 செப்டம்பர், 2010

உரிமை பேசும் எவரும் விடுதலைப் புலியே

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' - புலம் பெயர் தமிழீழ மக்களின் இன்றைய கனவு



இதுதான்! உலகில் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற இருக்கிறார்கள் இந்த அரசாங்கத்தில். அதற்கான தேர்தல்கள் பல நாடுகளில் நடந்து முடிந்துவிட்டன. இந்த அரசாங்கத்தை எப்படி உருவாக்கலாம் என்ற சட்ட திட்டங்களை உருவாக்கும் மனிதர்களில் ஒருவராக இருக்கிறார் பொன் பாலராஜன்!

1980-களில், மத்தியக் கிழக்கு நாடுகளில் பெட்ரோலிய நிறுவனங்களின் ஆய்வுத் துறை நிபுணராக இருந்த இவர், 1990-ல் கனடாவுக்குக் குடி பெயர்ந்தவர். அங்கு உயர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் கணினித் துறை விரிவுரையாளராகப் பணியாற்றியவர். தற்போது தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கிறார். தமிழ் இலக்கியம், கவிதை ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடுள்ள இவரை, ஆனந்த விகடனுக்காக 'காலம்' இதழின் ஆசிரியர் செல்வம் பேட்டி கண்டார்.

"தற்போது என்ன விதமான வேலையில் நாடு கடந்த தமிழீழ அரசு கவனம் செலுத்தி வருகிறது?"

"ஓர் அரசாங்கத்தை நிறுவும் பணிக்கு அடிநாதமாக இருக்கப்போகும் அரசியல் சட்டத்தினை உருவாக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னதாக, அரசியல் சட்டமானது தயாராகிவிடும்.

இலங்கையில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள்பற்றிய விசாரணைகளுக்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு, அதற்குரிய பரப்புரைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, இடைக்கால நிர்வாக அவைத் தலைவர் உருத்திர குமாரன் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பில் உள்ளார்!"



"விடுதலைப் புலிகளின் அமைப்பு மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளதா? அப்படி உருவானால், அதற்கு நாடு கடந்த தமிழீழ அரசுடன் எவ்விதமான தொடர்பும் இருக்குமா?"

" விடுதலைப் புலிகள் என்றால் யார் என்பதற்கு முதலில் ஒரு விளக்கம் தேவைப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுக்கு உரிய வரைவிலக்கணமும் தற்போதைய வரைவிலக்கணமும் முற்றிலும் வேறுபடுபவை. தற்போது விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திய ஒரு போராளிக் குழுவினர் அல்லர். 30 ஆண்டு காலப் போராட்டத்தில், விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் வாழ்வியலிலும், உணர்விலும், சொல்லப்போனால் அனைத்துமாகிக் கலந்துவிட்ட ஒரு நிலையினைக் காணக்கூடியதாக உள்ளது. தமிழர்களின் இறைமை, உரிமை என்பவை பற்றிச் சிந்திக்கும், செயற்படும் அல்லது பேசும் எவரையுமே தற்போதைய உலகம் ஒரு விடுதலைப் புலியாகவே காண்கிறது. அதாவது, தமிழ் மக்களின் விடுதலை உணர்வின் ஒருமித்த சிந்தனைதான் விடுதலைப் புலிகள். ஆயுதப் போராட்டம் முடிவடைந்தது உண்மைதான். ஆனால், விடுதலைக்கான தேவை இருக்கும் வரை போராட்டம் தொடரும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மக்களாட்சி நெறிப்படி அமைக்கப்பட்ட ஓர் அரசாங்கம் ஆகும். இதில் எந்தவிதமான ஆயுதப் போராட்டத்துக்கும் இடம் கிடையாது. ஆயுதப் போராட்டத்தினால் எமது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எமது கிராமங்கள் ஆயிரக்கணக்கில் அழிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும்விட்டன. ஆகவே, வன்முறையற்ற அரசியல் போராட்டம் அனைத்து நிலைகளிலும் தொடரவே செய்யும்."

"நீங்கள் இந்திய அரசாங்கத்துடன், தமிழக அரசுடன் பேச நேர்ந்தால், எதற்கு முன்னுரிமை தருவீர்கள்?"

"எங்களது கோரிக்கைகள் இவைதான்..

ஈழத் தமிழர், இந்தியர் ஆகிய இருதரப்பினருக்கும் நீண்ட கால நன்மைகள் கிடைக்கக்கூடிய ஆரோக்கியமான உறவை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். கடந்த காலக் கசப்பான அனுபவங்கள், எங்கள் எதிர்கால நல்லுறவைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வது நல்லது.

இலங்கையில் சீனாவின் செல்வாக்கும் ஆதிக்க மும், இந்தியாவின் பிராந்திய நலனை மிக மோச மாகப் பாதிப்பது மாத்திரம் அல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகும்.

யாழ்ப்பாணப் பகுதியில் சீனாவின் செல்வாக் கும் ஆதிக்கமும், மற்றைய இந்திய மாநிலங்களை விட தமிழகத்துக்குத்தான் அதிகப் பாதிப்பு ஏற்படுத்தும்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் நம் இனத்தின் தடுக்க முடியாத சாபக்கேடாகத் தொடர்கிறது.

தமிழகத்தில் தமிழ் உணர்வாளர்கள் கைதாவ தும், சிறையில் இருப்பதும் இவை அனைத்தையும் தாண்டிய கொடுமையாகும்.

இந்தியாவின் தெற்குப் பிரதேசத்தின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரக்கூடியவர்கள் ஈழத் தமிழர்களே ஒழிய, சீனாவுக்குத் தனது கடற்பரப்பைத் தாரை வார்த்துக் கொடுக்கும் சிங்களவர்கள் அல்ல என்பதை இந்திய அரசாங்கம் உணர வேண்டும்.

தமிழகத்தின் தொப்புள்கொடி உறவாகக் கருதப்படும் ஈழத் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார சுதந்திரத்தில் இந்தியா இதய சுத்தியுடன் செயல்பட வேண்டும்.

ஈழத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வு, தடுப்பு முகாம்களில் அடைபட்டு அவதியுறும் மக்களின் விடுதலையும் மறுவாழ்வும் குறித்து இந்திய அரசும் தமிழக அரசும் கவலைப்பட வேண்டும்.

... இப்படி நாங்கள் பேசுவதற்கு நிறைய இருக்கின்றன!"

"தமிழக மக்களிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?"

"தமிழகம் என்று சொல்லும்போது, ஒரு காதில் இன்பத் தேனும், மறு காதில் பெருமூச்சும் விழு கிறது. ஈழத் தமிழரின் விடுதலைக்கு மட்டுமின்றி, அனைத்துலகத் தமிழரின் மேம்பாட்டுக்கும் தமிழகமே உந்து விசையாக விளங்க வேண்டும். ஈழத் தமிழ் மக்கள் மீது தமிழகம்கொண்ட அக்கறையும் கரிசனமும் நாம் நன்கு அறிந்தவை. நாங்கள் மக்களாட்சி நெறிப்படி, வன்முறை இன்றி, அரசியல் செயற்பாட்டின் ஊடாக இந்திய அரசுக்கும் ஈழத் தமிழருக்கும் இடையே ஒரு நல்லிணக்கப் பாலத்தை அமைக்க தமிழகம் உதவ வேண்டும். நாம் விரும் பியோ விரும்பாமலோ இந்திய அரசின் உதவியும் ஒத்தாசையும் இன்றி ஈழத்தில் நிரந்தர அமைதிபற்றி உரையாட முடியாது


!நன்றி- விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக