nanrasithathu.blogspot.com

வியாழன், 21 ஏப்ரல், 2011

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!


தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!
முன் அறிவிப்பு: இப் பதிவு பிடிக்காதவர்கள் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். ஒரு ஈழத் தமிழனாக இருந்து, மனம் விட்டு மன்னிப்புக் கேட்டாலும் இந்தச் செயல்களை ஆற்றுப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் நான் எங்கள் இழி நிலைகளைப் பதிவாக்க முனைகின்றேன். ஈழத் தமிழன் எனும் அடையாளத்துடன் இப் பதிவினை எழுதுவதால், தமிழக உள்ளங்களிடமிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பலாம், ஆனாலும் பதிவில் நான் என் கருத்துக்கள் எதனையும் முன் வைக்காது, எங்கள் மக்களின் அனுபவ ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கவுள்ளேன்!

உறவுகளே, இப் பதிவில் வரும் விடயங்கள் உங்களைக் காயப்படுத்தலாம், இவை தமிழக உறவுகள் மத்தியில் பல முரண்பாடுகளை உருவாக்கலாம். ஆனாலும் இப் பதிவில் வரும் விடயங்கள் உங்கள் மன எண்ணங்களைச் சிதைப்பதற்கானவை அல்ல. உங்களுடன் எங்களின் இழிவான குணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே! ஈழத் தமிழர்களுக்கு இப்படியும் ஒரு குணம் இருக்கிறது என்பதனை அல்லது ஈழத் தமிழர்களின் மறுபக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே இப் பதிவு.
ஈழத் தமிழர்கள் எனும் இனம் புவியியலாளர்களின் கூற்றுப் படி, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குமரிக் கண்டத்தில் ஏற்பட்ட பாரிய சுனாமித் தாக்கத்தின் காரணமாக இலங்கையில் குடியேறியவர்கள் அல்லது இலங்கைக்கு இடம் பெயர்ந்தவர்கள் என்பதனை யாரும் மறுத்துரைக்கவோ இல்லை மறக்கவோ முடியாது. எங்களின் எச்சங்கள், எங்களின் மரபணுக்கள் யாவும் தென் இந்தியாவிலிருந்தே தோற்றம் பெற்றிருந்தன.(இதனை விளக்கமாக ஈழத்தில் சாதியம்- பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம் எனும் பதிவில் கூறியிருக்கிறேன்)
இலங்கையில் வாழுகின்ற தமிழர் எனும் இனத்தினுள்
*ஈழத்தில் ஆரம்ப காலம் தொட்டு பூர்வீகமாக வாழும் தமிழர்கள்- இந்தியாவிலிருந்து முதன் முதலாக குடியேறியவர்கள்(தற்போது இலங்கையில் வாழும் தமிழர்கள்- வட கிழக்கு பூர்வீகத் தமிழர்கள்)
*மலையகத் தமிழர்கள்: ஆயிரத்து எண்ணூறுகளின் பிற் பகுதியில் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் அழைத்து வரப் பட்டவர்களை மலையக மக்கள் என்று கூறுவார்கள். இவர்களே கொழும்புத் தமிழர் எனவும் அழைக்கப்படுகின்றார்கள்.
*தமிழைத் தாய் மொழியாகப் பேசுகின்ற இஸ்லாமியர்களும் உள்ளடங்குவார்கள்.
எங்களின் கடந்த காலங்களை, எங்களுக்கே உரிய தனித்துவமான எச்சங்களை, வேர்களினை, மூதாதையர்களை(முன்னோர்களை) மறந்து விட்டு, இலங்கைத் தமிழர்களில் பெரும் பாலானவர்கள் தாம் ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் போலப் பாசாங்கு செய்வது வருந்தத்தக்க விடயமே. ’’தமிழக உறவுகளே, உங்களோடு சொந்தம் கொண்டாடும் போதும், பழகும் போதும், இந்த விடயங்களை மறைத்துப் பழக என் மனது இடம் கொடுக்க மறுக்கிறது.
இன்று கருணாநிதி எங்களைக் காப்பாற்றத் தவறி விட்டார், சோனிய எங்களுக்கு சொர்க்கத்தை திறந்து விட மறுத்து விட்டார் என சோகராகம் பாடும் நாங்கள் கடந்த காலங்களில் தமிழக உறவுகள் மீதான எங்களின் பார்வைகளினை மறத்தல் அல்லது மறந்து வாழ்தல் எவ் வகையில் நியாயமாகும்?
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தியேழுகளைத்(1987) தொடர்ந்து தான் இலங்கையின் விடயத்தில் இந்தியா துரோகம் இழைக்கத் தொடங்கியது, இந்தியா எங்களைக் காப்பாற்றவில்லையே, மத்திய அரசு எங்களை மதி கெட்டவர்களாக்கி விட்டது என்று பல்லவி பாடும் நாங்கள் இந்தக் காலங்களிற்கு முன்பதாக இழைத்த குற்றங்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்,
*ஆயிரத்து எண்ணூறுகளின் பின்னர்; இந்தியாவிலிருந்து இலங்கையின் மலை நாட்டிற்கு தேயிலைப் பயிர் செய்கைக்காக கொண்டு வரப்பட்ட மக்களை எவ்வாறு எங்களது ஆதிக்கவாதம் செருக்கு குணம் கொண்ட தமிழர்கள் இன்று வரை அழைக்கிறார்கள் தெரியுமா?
‘தோட்டக்காட்டார் அல்லது தோட்டக்காட்டான்.
இவ் இடத்தில் ஒரு கணம் நிற்க. இதே இந்தியாவிலிருந்து கையில் அகப்பட்ட பொருள்களோடு வியாபார நோக்கத்திற்காகத் தானே ஈழத்திற்கு எங்கள் மூதாதையர்கள் வந்து குடியேறி, இலங்கைத் தமிழர் எனும் அடையாளத்தை எம்மிடத்தே தந்து விட்டுச் சென்றார்கள். ஓ, நாமெல்லோரும் வரலாறுகளை மறந்து எமக்குப் பின்னே வந்த மலையக உறவுகளை எள்ளி நகை செய்கிறோம், கிண்டலடிக்கிறோம். ஏன் எங்கள் ஊர்களுக்கு அவர்கள் வந்தால் சரி நிகர் சமனாக உரையாட மறுக்கிறோம், எங்கள் ஊர்களிற்கு வரும் மலைய சகோதர்களில் ஒரு சிலரை குறத்தி, குறவன் எனப் பேசிக் கலைக்கிறோம். இது எங்களின் ஆதிக்க வாதமா? இல்லை ஏனையவரை அடிமை செய்யும் குணத்தின் அடையாளங்களா?
*இந்திய மத்திய அரசு தமிழர்கள் விடயத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தியேழுகளில் தவறிழைத்தது என்பது நிஜம். அது உண்மை, ஆனால் இந்தியா இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கூறும் நாங்கள்
காலாதி காலமாக சொல்லும் பழமொழி என்ன தெரியுமா?
‘’வாடைக் காற்றினை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக் கூடாது’
(இலங்கைக்கு வட திசையில் எந்த நாட்டவர் இருக்கிறார் என்பதன் அடிப்படையில் இதனைப் பார்த்தால் நிறையப் பொருள் விளங்கும்)
இந்தப் மொழிக் கிண்டலோடு தானே எம்மூர்களிற்கு வரும் சகோதர்களோடு, எங்களின் சுயத்தை மறந்தவர்களாகப் பழகியிருக்கிறோம்.
எம் வம்சத்தினை, எங்களின் வேர்க் கொடிகளை, தொப்புள் கொடியினரை இழிழு படுத்தும் நாங்கள் எப்படி தமிழகமே எங்களைக் காப்பாற்று எனக் கூக்குரலிட முடியும்?
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தியேழாம் ஆண்டினைத் தொடர்ந்து எமக்கிருந்த இந்திய ஆதரவு சந்தர்ப்ப சூழ் நிலைகளால், அதுவும், இந்திய இராணுவம் இலங்கையில் செய்த சதி, இந்திய மத்திய அரசினது நடவடிக்கைகள், இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா முதலியோரது நடவடிக்கைகளால் சீர் குலைந்தது என்பதை இவ் இடத்தில் நிலை நிறுத்தி ஒரு வினாவினை முன் வைக்கிறேன்.
அந்தக் காலம் முதல் இந்திய அரசிடம் பகிரங்கமாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மன்னிப்புக் கோரும் வரை(2002ம் ஆண்டு வரை) ‘இந்தியாவின் துணையின்றி தனித்தே வெல்லுவோம்’ எனப் பல்லவி பாடிய நாங்கள் வன்னிப் பகுதி மீதான இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர் இந்தியா இன்றி ஈழத்தில் ஒரு துரும்பினையும் அசைக்க முடியாது எனக் கூறி கெஞ்சி, மன்றாடியது எவ் வகையில் நியாயமாகும்?
கலைஞர் தங்களைக் காப்பாற்றவில்லையே, கருணாநிதி தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டார் எனக் கூறும் நாமெல்லோரும்; இருபத்திரண்டு தமிழ் மந்திரிகளைப் பாராளுமன்றம் அனுப்பியவர்கள் தானே?
அந்த இருபத்திரண்டு பேரில் யாராவது ஒருவராவது மலையகத் தமிழர்களுக்காக மனம் திறது சுய நலமற்றுப் பேசினார்கள் என்று நிரூபிக்க முடியுமா? ஆனால் ஈழத் தமிழர்களுக்காக இன்று வரை தன்னால் இயன்ற வரை குரல் கொடுக்கும் மனோ கணேசனை யாவரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
ஈழ யுத்தம் தொடங்க முன்பதாக மலையக மக்களின் சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட்டங்கள், 1977ம் ஆண்டு போராட்டம் முதலிய பல சம்பவங்கள் இடம் பெறுகையில் ஒரே நாட்டினுள் இருந்தும் கை கட்டி வாய் பொத்தி நின்று வேடிக்கை பார்த்து விட்டு,
வன்னியில் எங்கள் தலைக்கு மேல் அவலம் வந்த வேளையில் மட்டும் எந்த முகத்தைக் கொண்டு ‘கலைஞர் ஐயா காப்பாற்றுங்கோ’ எனக் கேட்க மனம் வந்தது?
சமாதான காலத்தில் ஈழத்திற்கு தமிழகத்திலிருந்து வியாபார நோக்கோடு வந்திருந்த (2002ம் ஆண்டின் பின்னர்) ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை முதலிய பல தமிழக ஊர்களைச் சேர்ந்த புடவை வியாபாரிகளை ‘இவர்கள் இந்திய உளவுத் துறையான ‘ராவின்(Raw) உளவாளிகள்’ எனக் கூறி பட்டப் பகலில் வீதியில் வைத்து அடித்து விரட்டிய நாங்கள் எந்த முகத்தினை வைத்துக் கொண்டு ‘தமிழகமே எங்களை மன்னித்து, மோட்சம் அளி’ எனக் கதற முடியும்?
மேற் கூறப்பட்டுள்ள என் மனக் கருத்துக்களோடும், வினாக்களோடும் இந்த விவாத மேடை உங்களுக்காய் விரிகிறது.
இப் பதிவு தொடர்பான உங்களது கருத்துக்களை, விவாதங்களை, எதிர்க் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக