nanrasithathu.blogspot.com

சனி, 23 ஏப்ரல், 2011

தமிழ் ஈழ சிங்களம்

தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் இலங்கைத் தீவுப் பிரிக்க முடியாத ஒரு பங்கினைக் கொண்டுள்ளது. பாரம்பரியமாக தமிழகம் என்றப் பதத்தில் இலங்கைத் தீவு அடங்கப் பெறாவிட்டாலும், இலங்கைத் தீவுக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு பன்னெடுங்காலமாக இருந்து வருவது. தமிழகம் - இலங்கை ஆகிய இந்தப் பகுதியில் ஒரே திராவிட இனமாக பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்த காலங்களில் பெரும் சிக்கல்களோ பிரச்சனைகளோ எழவில்லை.
தமிழகம்:
வேங்கட மலைக்குத் தெற்கேயும், குமரி முனைக்கு வடக்கேயும் வாழ்ந்த ஒன்று போல மொழி பேசும் இனக்குழுக்கள் அனைத்தையும் உள்வாங்கி அது ஒரு தேசியமாக எழுச்சிப் பெற்றது. அம்மக்கள் தம்மை தமிழர்கள் என அழைத்துக் கொண்டார்கள். தமக்கான மொழி, அடையாளம், கலாச்சாரத்தைக் கட்டி எழுப்பினார்கள். அம்மக்களில் இருந்து முப்பெரும் தேசம் உருவானது. அவை சேர, சோழ, பாண்டிய என்னும் மூவேந்தர்கள் உருவாகினர். அக்காலக் கட்டத்தில் அவர்கள் தமிழகத்துக்கு வெளியேயும் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றார்கள். அதனால் தமிழகம் பாதுக்காப்பாக இருக்கும் என நம்பினார்கள். அப்போதையக் காலங்களில் தமிழகத்தின் கரையோரப் பகுதிகளில் இருந்து நெடுங்காலமாக தனித்து இருந்த இலங்கைத் தீவுக்கு குடியேறத் தொடங்கினார்கள். பெரும்பாலான குடியேற்றங்கள் மீன் பிடி சார்ந்தத்தாகவும், புதிய நிலப்பரப்பில் பனை, தென்னை மரங்கள் வளர்ப்புக்காகவுமாக இருந்தது.
இலங்கைக் குடியேற்றம்:
ஆனால் அங்கு தமிழர்கள் குடியேறத் தொடங்கிய காலத்தில் இலங்கைத் தீவில் வேட்டுவர் மக்கள் அரசு ஏதுமின்றி ( PRIMITIVE) வாழ்ந்து வந்தார்கள். பெரும்பாலும் இலங்கைத் தீவினை பாண்டியத் தேசத்தின் நிழலில் இருந்து வந்துள்ளது. இலங்கையின் வடக்குக் கரைப் பகுதிகள் தவிரே ஏனையப் பகுதிகள் மிகுந்தக் காடுகளாகவும், வேடுவர் உட்பட காட்டு மிராண்டிகள் வாழ்ந்தும் வந்திருக்கக் கூடும். ஆகவே பாண்டிய நாட்டின் தாமிரபரணி நதியின் எதிரே இருந்த இன்றைய புத்தளம் பகுதியில் குடியேறியப் பாண்டி நாட்டு பரதவர்கள் தாமிரபரணி என்னும் சிறுக் குடியேற்றத்தை அமைத்து குடியேறினார்கள். இலங்கையின் வடமேற்குப் பகுதியே தமிழர்கள் குடியேறிய முதல் பகுதியாக இருந்திருக்கக் கூடும்.

தாமிரபரணி அரசு:

தாமிரபரணி குடியேற்றம் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாக மாறி தாமிரபரணி என்னும் சிற்றரசாக மாறி இருக்க வேண்டும். அந்த சிற்றரசு பாண்டியப் பேரரசின் கீழ் இருந்து வந்திருக்க வேண்டும். இந்தக் குடியேற்றம் விரிவடைந்து செல்லும் போது ஏற்கனவே வாழ்ந்து வந்த வேட்டுவர்களுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சனைகள் வந்திருக்க வேண்டும். இந்த குடியேற்றத்தை அண்மைக் காலங்களில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய வெள்ளை குடியேற்றங்களுக்கு ஒப்பானவையாக இருந்திருக்க வேண்டும். தாமிரபரணி குடியேற்றத்தின் சிற்றரசுகளும், மக்களும் தமிழகத்தில் இருந்து சென்றிருக்க வேண்டும். தாமிரபரணிக்கும் பாண்டிய நாட்டுக்குமான தொடர்பினை மகாவம்சமே உறுதி செய்கின்றது.
ஆரம்பக் கால சிங்கள் மன்னர்களின் பெயர்கள் அனைத்துமே பாண்டு என்ற பெயரினைத் தாங்கி வருதலையும், விஜயன் பாண்டியன் நாட்டு இளவரசியை மணந்தத்தாக கூறும் கதைகளே இவற்றை உறுதி செய்கின்றன. அதே போல நாடார் இன மக்கள் இன்றளவும் ஈழவர் என கேரளத்தில் அழைக்கப்படுவதும். ஈழவரின் குலப் புராணத்தில் நாடார் மன்னனான நரசிம்மன் அல்லி என்னும் பாண்டிய இராணியோடு இலங்கைக்கு குடியேறியதாகவும், அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமிழகம் திரும்பியதாகவும், பின்னர் அல்லியின் தம்பி முறையிலானவன் இலங்கை சென்று நாடாண்டதாகவும் கூறப்படும் கதையும் மகாவம்சத்தின் விஜயன் கதையும் ஒன்றே போல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தாமிரபரணியை கிரேக்க அறிஞர்கள் பண்டையக் காலத்தில் தாப்ரோபனே என அழைத்ததும் குறிப்பிடத்தக்கது.

பௌத்த வருகை :

ஆகவே தமிழகத்தில் இருந்து குடியேறிய மக்கள் தமக்கான ஒரு சிறிய அரசை இலங்கைத் தீவில் அமைத்துள்ளனர். அந்த அரசு பாண்டிய நாட்டுக்கு கீழ் திறை செலுத்தும் அரசாக இருந்து வந்துள்ளது. ஈழவர் என அழைக்கப்படும் நாடார் இன மக்கள் அங்கு சென்று குடியேறியதால் தாமிரபரணி என்னும் நாடு ஈழ நாடு என்றும் அழைக்கப்பட்டு இருத்தல் வேண்டும். இக்குடியேற்றம் ஆஸ்திரேலியா தீவில் வெள்ளையர் ஏற்படுத்திய ஒருக் குடியேற்றத்துக்கு ஒப்பாக இருந்திருக்க வேண்டும். காலப் போக்கில் குடியேறிய மக்களும், இலங்கைத் தீவில் காட்டுமிராண்டிகளாக அந்தமானிய பழங்குடிப் போல வாழ்ந்த மக்களும் கலந்திருக்க வேண்டும்.
இப்படியான சூழலில் தான் கிமு 3ம் நூற்றாண்டில் வடநாட்டில் இருந்து பௌத்தமும், சமணமும் தென்னாட்டுக்குப் பரவுகின்றது. தென்னாட்டின் மூலமாக இலங்கைத் தீவுக்கும் பௌத்தம் பரவுகின்றது. சமண மதம் சுதேசிகளின் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு மதமாகும். அவர்கள் பள்ளிகள் அமைத்து சமணத்தையும் தமிழையும் தமிழகத்தில் வளர்த்தார்கள். ஆனால் மாறாக பௌத்தம் தமிழை விடவும் அவர்களின் பிராகிருத மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்த மதமாகும். அதனால் தான் இன்றளவும் சமண தமிழ் இலக்கியங்கள் மிகுதியாக உள்ளன. ஆனால் பௌத்த தமிழ் இலக்கியங்காள் மிகவும் குறைவு மாறாக அவர்கள் பல நூல்களை புகாரில் இருந்து வடமொழியில் தான் இயற்றியுள்ளார்கள். அதே போல பௌத்தம் சேர நாட்டிலும், தென்பாண்டிப் பகுதியிலும் மிகுதியாக பரவி இருத்தல் வேண்டும். மாறாக சமணம் சோழ நாட்டில் மிகுதியாக பரவி இருத்தல் வேண்டும்.

கலிங்கர் வருகை :

பௌத்தத்தின் வருகையால் இலங்கையின் தாமிரபரணி நாட்டு மக்கள் பூரண பௌத்த சமயிகளாக மாறினார்கள். பௌத்தத்தின் தாக்கத்தால் சேர நாடு வடமொழிமயமாகத் தொடங்கியது போல, இலங்கைத் தீவில் வாழ்ந்த மக்களும் வடமொழிமயமாகத் தொடங்கினார்கள். எப்போதும் தமிழகத்தின் நிழலில் வாழ்ந்து வந்த இலங்கை மக்கள் தமது புதிய மத வருகையால் தமக்கான ஒரு தனித்துவத்தைப் பேணத் தொடங்கினார்கள். இதே தனித்துவத்தை சேர நாட்டவரும் பேணத் தொடங்கினார்கள். தமிழகம் முழுதும் பௌத்த சமணமாக இருந்தக் காலத்தில் இலங்கை மன்னன் கயவாகு கண்ணகிக்கு கோவில் கட்டும் விழாவில் தமிழக மன்னர்களின் வேண்டுகோளுக்கு அமைய வந்த செய்திகள் அக்காலத்தில் இலங்கைக்கும், தமிழகத்துக்கும் பகைமை என்று ஒன்றுமில்லாமல் இருந்தத்தை உறுதி செய்கின்றது. பௌத்த மதத்தின் வருகை கலிங்க நாட்டு ஊடாக வந்தத்தால் கலிங்க நாட்டுக்கும் இலங்கைக்குமான வாணிப தொடர்புகள் பெருகின, கலிங்க நாட்டில் இருந்து இலங்கை முழுதும் மக்கள் குடியேறத் தொடங்கினார்கள். இதனால் இலங்கைத் தீவின் மொழி பண்பாடு மேலும் மாற்றமடையத் தொடங்கியது.

இலங்கைத் தேசியம் :

இக்கால கட்டங்களில் தான் சோழப் பேரரசு பாண்டிய நாட்டின் மீது படையெடுப்புகள் செய்தும் உள்ளன. தலையாங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற மன்னர்கள் சோழர்களோடு போரிட்டு வென்றாலும். சோழர்களின் பலம் பாண்டிய நாட்டை தம் வசமாக்கிக் கொண்டதே அதிகம். அப்படி பாண்டிய நாடு தம் வசமாகும் போது எல்லாம் பாண்டிய நாட்டின் நிழலில் இருந்த இலங்கைத் தீவையும் தமதாக்கிக் கொண்டனர். இதற்கு காரணமாக அமைவது சோழர்கள் பாண்டிய நாட்டினை போரிட்டு வெல்லும் போது எல்லாம் பாண்டிய மன்னர்கள் பாண்டிய அரசின் முடியை இலங்கைத் தீவில் கொண்டு மறைத்துவிடுவார்கள். முடி இல்லாமல் ஒரு நாட்டை தமதாக்கிக் கொள்ள முடியாது, ஆகையால் சோழர்கள் இலங்கைத் தீவுக்குள் புகுந்து அம்முடியை மீட்க போரிடுவார்கள். இலங்கைத் தீவை பாண்டிய நாடு சோழ நாட்டுக்குள் வரும் போது எல்லாம் தமது அதிகாரிகளை அனுப்பி நிர்வாகம் செய்ய சோழர்கள் முனைவார்கள். அப்படியான சோழ ஆக்கிரமிப்பை இலங்கைத் தீவு வாசிகள் விரும்புவதில்லை. இதனையே பிற்காலத்தில் தமிழ் ஆக்கிரமிப்பாக வரலாற்றில் மாற்றி எழுதிவிட்டனர்.

சிங்கள தேசியம் :

சிங்கள் தேசியம் என்ற ஒன்று பௌத்த மதத்தின் வருகைக்குப் பின்னரே உருவானது. எப்படி தமிழ் பேசும் சேர நாட்டவர் இன்று மலையாளத் தேசியமானார்களோ, அதே போல இலங்கைக்கு குடியேறிய தமிழர்களும், அவர்களின் இராச்சியமும் பிற்காலத்தில் தம்மை சிங்களவர் என அழைத்துக் கொண்டனர். பௌத்த வருகையும், கலிங்க நாட்டுத் தொடர்பும் வடநாட்டுக் கலாச்சாரம் மேன்மை என்னும் எண்ணத்தை அவர்களிடம் விதைத்தக் காரணத்தால் தம்மை வடநாட்டுக் குடிகள் என அறிவித்துக் கொண்டார்கள். இன்று ஆங்கில மோகம் இருப்பதைப் போலவும், தமிழர்களில் பலர் ஆங்கில உடை, மொழி மேன்மை எனக் கருதுவது போலவே சிங்களத் தீவின் மக்கள் அவ்வாறு கருதினார்கள். இந்தக் காலக்கட்டத்தில் தமிழகத்தின் இன்னொரு வரலாற்றுக் காரணமும் உண்டு. தமிழகம் முழுதும் களப்பிரர் ஆட்சியில் வந்து விட்டதால் தமிழகத்தில் இருந்து இலங்கை தனித்து இயங்க ஆரம்பித்தது. அடிமைப் பட்ட தமிழகத்தின் தொடர்புகளை விட்டுவிட்டு பௌத்த மதமும், வடநாட்டுக் கலாச்சாரத் தொடர்புகளாலும், தம்மை வடநாட்டவர் என அறிவித்துக் கொண்டனர். இப்படியான வடநாட்டு மேன்மைத் தனம் சிங்கள நாட்டில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முழுத் தீவும் சிங்கள பௌத்தமாகுதல் :

இலங்கை மற்றும் தமிழகம் இரண்டுமே பௌத்த மதம் ஓங்கிய களப்பிரர் காலத்தில் இலங்கைத் தீவும் முழுதுமே சிங்கள பௌத்த நாடாக மாறியது. குறிப்பாக எகிப்தியர்கள் தமது மொழி மதங்களை மறந்து இஸ்லாமிய அரேபியர்களாக மாறியதைப் போன்று தான் முழுத் தீவும் சிங்கள பௌத்தமாகி இருத்தல் வேண்டும். இக்காலக் கட்டத்தில் இலங்கைக்கும் தமிழகத்துக்கும் தொடர்புகள் குறைந்துப் போயிருத்தல் வேண்டும்.

வைதிக தமிழ் மறுமலர்ச்சி :

களப்பிரர்களை வென்று காஞ்சிபுரம் பகுதியில் பல்லவர்கள் தமது ஆதிக்கத்தைச் செலுத்திய கிபி 6ம் நூற்றாண்டில் தமிழகத்தில் பௌத்தம் அழிந்து வைணவம் எழுச்சிப் பெறத் தொடங்கியது. வைண எழுச்சியானது மக்களிடையே தமிழ் எழுச்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வந்தது. இருப்பினும் வடமொழி மேன்மைத் தனம் இங்கு ஒழிந்துவிடவில்லை. பல்லவர்கள் பலர் பிராமணர்களோடு தொடர்புக் கொண்டதால் அக்காலக் கட்டத்தில் வடமொழியே தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகவும் இருந்தது. ஆனால் பல்லவர்க் காலம் பொருளாதார, கலைகளில் தமிழ்நாட்டுக்கு ஒரு பொற்காலமாக அமைந்தது. அக்காலக் கட்டத்தில் வைணவ மதமும் மக்களிடையே பரவுதலுக்காக தமிழ் மொழியைப் பயன்படுத்தியது. இதனால் தமிழும் வளரத் தொடங்கியது. பல்லவர்களின் ஆதிக்கம் தென் கிழக்காசிய முழுதும் பரவிய போதும் இலங்கைத் தீவு முழுதும் பல்லவரின் கீழ் வரவில்லை. ஆனாலும் இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணப் பகுதியினை பல்லவர்கள் தமது வாணிகத் தொடர்புக்காக ஒரு தளமாகப் பயன்படுத்தினார்கள். அதே போல அரச தந்திர ரீதியாக சிங்களத் தீவில் குழப்பங்களை விளைவித்தார்கள். இதனால் சிங்கள தீவு பல்லவ நாட்டுக்கு எதிராக செயல் முடியாமல் இருக்கும் என்று எண்ணினார்கள்.

பல்லவர் - சிங்களம் :

பல்லவர்கள் வைணவ மதத்தினர் என்பதால் வைணவ மதத்தினை தென்னாடு முழுதும் அல்லாமல் மலாயம், சாவகம், கம்போடிய நாடுகளுக்கும் பரப்பினார்கள். அதே போல இலங்கையின் வடக்கு யாழ்ப்பகுதியை தமது வசமாக்கிக் கொண்டு அங்கும் தொண்டை நாட்டில் இருந்து மக்களைக் குடியேற்றினார்கள்.
ஏன் பல்லவர்கள் இலங்கை முழுதும் பரவ இல்லை என்பதற்கு காரணமாய் பார்த்தால் இலங்கை முழுதும் வைணவம் பரவாத நிலையே. இலங்கையிலே பழமையான ஒரே வைணவத் தலம் வல்லிபுரம் விஷ்ணு ஆலயம் ஒன்றே. அது மட்டுமின்றி வல்லிபுரமே வடக்கின் பழைமையான ஒரு நகராகவும் இருந்துள்ளது. அது மட்டுமின்றி யாழ்ப்பாண சரித்திரம் பேசும் பல கர்னபரம்பரைக் கதைகள் வீரராகவன் என்னும் யாழ்ப்பாடி யாழ்ப்பாண நகரை சிங்கள மன்னனிடம் இருந்து பெற்றதாகவும், அங்கு தொண்டை நாட்டில் இருந்து மக்களைக் குடியேற்றியதாகவும் கூறுகின்றது. இதனை முழுதும் பொய் என நம்மால் மறுக்க முடியாது.
மாறாக பல்லவர்கள் தமது வாணிபத்துக்காக இலங்கையின் யாழ்ப்பகுதியினை மட்டும் தம்வசமாக்கி அங்கு தமது குடியேற்றம் ஒன்றினை நிறுவி இருத்தல் வேண்டும். அது மட்டுமின்றி யாழ்ப்பாணத்தின் ஆரம்ப கால நில உரிமைகள் பெரும்பாலும் பிராமணர் வசமே இருந்துள்ளது. பல்லவர்கள் மூலமாகவே பிராமணர்கள் அங்கு குடியேறி இருத்தல் வேண்டும். அதே போல யாழ்ப்பாணப் பகுதியில் இருந்துக் கொண்டு சிங்கள மன்னர்களின் எழுச்சியைத் தடுத்து வந்திருக்கின்றார்கள். இன்னுமொரு ஆதாரம் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தொண்டைமானாறு என்னும் பகுதி. இது பல்லவர்களின் தொண்டை மண்டலத்தின் காரணப் பெயராக அமைந்திருக்கு. அது மட்டுமின்றி தொண்டை மண்டலத்தின் வடக்கே இருந்த தெலுங்கர்களும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் குடியேறி இருக்கின்றனர் என்பதை யாழ்ப்பாண வரலாறுக் கூறும் சில நூல்கள் தெரிவிக்கின்றன. வடமர், வடுகர் என்பது தெலுங்கரைச் சுட்டும் சொல்லாகும்.

மீண்டும் இலங்கையில் தமிழர் :

களப்பிரர் காலத்தில் முழுதும் சிங்கள மயமாகிப் போன இலங்கையில் பல்லவரின் எழுச்சியால் மீண்டும் தமிழர் குடியேற்றம் நடைப் பெறுகின்றது. அது மட்டுமின்றி யாழ்ப்பாண வடக்கு கரைகள் வாணிபத் தொடர்புகள் நடத்தும் பகுதியாக மாறியது. அதனால் சோனகர், யவனர், சாவகர், போன்ற வேற்று நாட்டு மக்களும் குடியேறினார்கள். இதேப் போக்க் நாகைப் பட்டினத்திலும் நடந்துள்ளது. அதே போல யாழ்ப்பாணத்தில் சிங்கள மயமாகி இருந்த மக்களும் தமிழ் மொழியையே மீண்டும் பேசலாயினர். கிட்டத்தட்ட யாழ்ப்பாணம் என்பது பல்லவரின் ஒரு குட்டிக் காலனியாக மாறியது.

சோழர்களின் வருகை :

பல்லவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் சோழர்கள் தென்னாடு முழுதையும் ஆளத் தொடங்கினார்கள். இதனால் அக்கம் பக்கத்து நாடுகளை ஆதிக்கத்தில் வைத்திருக்க - அக்கம் பக்கம் நாடுகளில் கலவரங்களை உண்டு பண்ணினார்கள். ஏற்கனவே பல்லவர்களின் ஆதிக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் சோழர்களின் ஆளுகைக்குள் வந்தது. அத்தோடு நிற்காமல் பாண்டியர்களுக்கு சிங்கள அரசுகள் உதவி செய்து வந்தமையால் சோழர்கள் சிங்கள நாட்டின் மீது படையெடுத்து யாழ்ப்பாணத்தின் இருந்து தமது பகுதிகளை விரிவாக்கி வட இலங்கை முழுதும் விரிவாக்கிக் கொண்டனர். சுமார் சில நூறு வருடங்கள் தொடர்ந்து சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தமையால் வடக்கு இலங்கை முழுதும் சோழர் நாட்டில் இருந்து குடியேற்றங்கள் நடந்தன. ஆனால் வடக்கு இலங்கையில் யாழ்ப்பாணம் தவிர்த்து பிற பகுதிகள் கடுமையான காடுகளாகவும், கொடிய விலங்குகள் இருந்தமையாலும், நீர் பற்றாக்குறை இருந்தத்தாலும் தமிழர்கள் பெரும்பாலான குடியேற்ற மேற்கொள்ள முடியவில்லை. பெரும்பாலான சோழர் காலத்து குடியேற்றங்கள் கடற்கரைப் பகுதிகளிலேயே இருந்தன. மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற கடல்பகுதிகளில் இருந்தன.
சிங்களவர் தமிழராதல், தமிழர் சிங்களவராதல் :
சோழர்களின் ஆட்சியில் வடக்கு இலங்கை மும்முடிக் கொண்ட சோழமண்டலம் என்றப் பெயரில் ஆட்சி செய்யப்பட்டது. அப்போது பல சிங்கள மக்கள் காலப்போக்கில் தமிழர்களாக மாற்றம் பெற்றனர். வடக்கு இலங்கையில் இருந்த பௌத்த மக்கள் முற்றிலுமாக சைவ மதத்துக்கு மாற்றாம் பெற்றனர். மாறாக ஜனநாத மங்கலம் எனப்படும் பகுதிகளில் குடியேறிய சோழ படைகள் அங்கேயே குடியேறினார்கள், பிற்காலத்தில் அப்பகுதி சிங்கள அரசின் கீழ் வந்தமையால் அவர்கள் சிங்களவராய் மாறினார்கள்.

பிற அரசுகள் :

சோழ அரசின் ஆட்சி முடிவுக்கு வந்த போது சாவகத்தில் இருந்து வந்த மன்னன் இலங்கையின் கிழக்கை பிடித்து ஆட்சி செலுத்தினான், ஆனால் சிங்கள அரசின் தாக்குதலால் மீண்டும் சேர நாட்டு கூலிப்படைகள் உதவியோடு வடக்கு இலங்கையை பிடித்து ஆட்சி செலுத்தினான். அங்கு ஏற்கனவே தமிழர்கள் அதிகளவில் இருந்தமையால் சிங்கள அரசுகளால் வடக்கு இலங்கையை மீண்டும் கைப்பற்ற முடியவில்லை.

கேரளர் வருகை :

இன்று ஈழத்தமிழர்கள் பலரும் மலையாளம் போன்றதொரு மொழி பேசுவதற்கும், அவர்களின் பழக்க வழக்கங்களில் கேரளாத் தனம் உள்ளமைக்கும் முக்கிய காரணம் சந்திரபானு என்னும் சாவக மன்னனுக்கு துணையாக வந்த கேரள கூலிப்படை வடக்கு இலங்கையில் குடியேறியமை தான். குறிப்பாக கேரள கூலிப்படைகள் தாம் வந்திருந்த ஊர்களின் பெயர்களை வடக்கு இலங்கையில் குடியேறிய ஊர்களுக்கு இட்டதும் அதற்கு சான்றாகும். கேரளர் அக்காலத்தில் முழுதாக மலையாள மொழியாக மாற்றமடையாத படியால் அவர்களின் மொழி ஆதி மலையாளமாய் இருந்தது. அவர்கள் வடக்கு இலங்கையில் குடியேறி ஏற்கனவே இருந்த தமிழ் பேசு மக்களோடு குடியேறி விட்டார்கள்.
கேரள ஊர்ப்பெயர்கள் - கோவளம், சங்கானை:
பிற்காலத் தமிழர்கள், தெலுங்கர்கள் பல்லவ நாட்டில் இருந்து வந்த போது தமது ஊர்ப்பெயர்களை வடக்கில் இட்டது போன்று, கேரளர்களும் தமது ஊர்ப்பெயர்களை வடக்கில் இட்டனர். அவற்றில் முக்கியமானதாக நான் கருதுவது கோவளம், சங்காணை என்னும் ஊர்ப்பெயர்கள்.
கோவளம் என்ற ஊர் இன்றளவும் தெற்கு கேரளத்தில் இருக்கின்றது. மற்றொன்று ஈழத்தமிழர்கள் மத்தியில் சங்காணை என்ற ஊர்ப்பெயர் ஆகும். சங்காணை என்றாலே அங்காடி என்ற அளவுக்கு ஈழத்தில் பிரபலமான ஊர். ஆனால் அவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ சங்கானைச் சேரி என்னும் ஊர் கேரளத்தில் இன்றளவும் உண்டு, அந்த ஊர் கிரேக்க காலத்தில் இருந்து வாணிப்பத்துக்கு பெயர் போன ஊர். அதுவும் பெரிய அங்காடிகள் கொண்ட ஊராகும்.

மீண்டும் பாண்டியர் :

பிற்கால சோழர்களின் ஆட்சிக்குப் பின் பாண்டியரின் எழுச்சி தமிழ்நாட்டில் வருகின்றது. அதனால் அவர்கள் இலங்கையின் வடக்கை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருகின்றார்கள். இலங்கையின் வடக்கை நிர்வாகம் செய்ய இராமேஷ்வரம் பகுதியில் இருந்த பிராமணர்களை யாழ்ப்பாணப் பகுதிக்கு சிற்றரசுகள் ஆக்கினார்கள். பாண்டியரின் ஆட்சி முடிவுக்கு வந்த பின் யாழ்ப்பாணப் பிராமணர்கள் தம்மை தனியரசாக அறிவித்து யாழ்ப்பாண ஆரியச் சக்கரவர்த்திகள் ( 1215 - 1619 ) என போர்த்துகேயரின் ஆட்சி இலங்கைக்கு வரும் வரை ஆண்டனர்.
இலங்கை வரலாற்றிலயே தமிழர்கள் தனியரசு நடத்தியது ஆரியச் சக்கரவர்த்திகள் தலைமையிலேயே ஆகும்.
மிகவும் நீண்டதொரு வரலாற்றை ஒரேப் பதிவில் இட்டுள்ளேன். குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் மக்களுக்கு இது இலங்கைக் குறித்து பெரும் விளக்கத்தைத் தந்திருக்கும்.

இப்பதிவின் சாரம்சமே -

1. இலங்கைத் தீவில் இருக்கும் பெரும்பாலானோர் தமிழ்நாட்டில் இருந்து குடியேறியவர்கள்.
2. மலையாளிகள் போன்று சிங்களவர்களும் தமிழர்களில் இருந்து பிரிந்து சென்ற தனி தேசியமாகும்
3. சிங்களவர்களில் ஒரு சில மன்னர்கள் தவிர்த்து ஏனைய அனைவரும் தென்னாட்டவரே ஆகும். வடநாட்டவர் இல்லை.
4. தமிழ்நாட்டின் களப்பிரர் காலத்தில் - இலங்கையின் முழுவதும் சிங்கள மயமாகி ( கிபி 3ம் நூற்றாண்டு முதல் கிபி 7 ம் நூற்றாண்டு வரை ) இருத்தல் வேண்டும்.
அதற்கான காரணங்கள் : சிங்கள ஊர்ப்பெயர்கள், சிங்கள- தமிழ் ஊர்ப்பெயர்கள் வடக்கில் கிழக்கில் காணப்படுவதே ஆகும்.
5. ஈழத்தமிழர்களில் வடக்கு யாழ்ப்பாணத்தமிழர்கள் ஒரே இனக் குழு மக்கள் இல்லை - அவர்கள் அனைவரும் பல்வேறு குடியேற்ற மக்களின் கலப்பினமே ஆகும். ( Immigrants of Jaffna colony ).
6. சிங்களவர்களின் ஆரிய வம்சாவளிக் கோட்பாடு தவறு. சிங்களவர்கள் ஆரியர் இல்லை என்பதை அவர்களின் உடை, பேச்சு, பண்பாடு மற்றும் நிறம், ஜெனிடிக்கு ஆகியவை நிருபித்துவிட்டன.
7. சிங்களவர் தமிழர் இரு தேசியமும் இனத்தால் ஒன்று தான். ஆனால் மொழியால் மட்டுமே இரு தேசியமாக இருக்கின்றார்கள். மொழிவாரி மாநிலம் பிரித்தமைப் போல இலங்கையும் மொழிவாரியான மாநிலமாக பிரித்தலே அவசியமானது.
எனதுப் பதிவில் தவறுகள் இருக்கலாம், இருந்தால் தயங்காது சுட்டிக் காட்டுங்கள். கடந்த 5 ஆண்டுகளாக நான் கற்று, பெற்று, ஆராய்ந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதியப் பதிவு இது இருப்பினும் தவறுகள் இருந்தால் தயங்காது கூறவும்.
இன்றையக் காலக்கட்டத்தில் தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரு இனமும் தமது தொடர்புகளையும், உண்மையான வரலாறுகளையும் அறிதல் மிக அவசியம். தவறான வரலாறுகளால் எத்தனைப் பிரச்சனைகள் எழுகின்றன, எத்தனை உயிர்ப்பலிகள். சரியான புரிதல்களும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மக்களிடம் வருவது அவசியாமன ஒன்று.

1 கருத்து:

  1. ஆரியசக்கிரவர்த்தி பரதவ இனத்தை சார்ந்தவர், அந்த குருகுல(பரதவர்) மக்களை புகழ தான் அவர் கண்ணகி வழக்குரை காதை படைத்தான். மீகாமன் என்ற மாணிக்க தலைவன் வரலாறை நீங்கள் படித்தது இல்லையா?

    பதிலளிநீக்கு