nanrasithathu.blogspot.com

திங்கள், 16 மே, 2011

அழுகை

அழுகை.. மனிதனின் உணர்வு பூர்வமான ஒரு வெளிப்பாடு. சந்தோஷமோ.. துக்கமோ.. உச்சக்கட்டம் அழுகை.. சந்தோஷத்தில் கூட ஆனந்த கண்ணீர் வரும்.. அதுவும் கண்ணீர்தான்.செத்த வீட்டில் அழுகிறவர்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்களுடய உறவின் நெருக்கத்தை, இழப்பின் சோகத்தை, எதிர்கால கவலைகளை அவர்கள் அழும் நிலையை முன்னிருத்தி தங்களுக்கும், இறந்த நபரிடம் உள்ள ஆழமான உறவை அவர்களின் அழுகை வெளிப்படுத்தும்.

இதற்கு பல போட்டிகள் வேறு நடக்கும்.இறந்தவரின் மனைவியோ, கணவரோ.. உடலின் மீது விழுந்து அழுவது, ஒரு வகை. அப்படி அழுதவரை மிஞ்ச அந்த நபரின் தங்கையோ, தம்பியோ.. போட்டிக்கு இறந்தவரின் மீது விழுந்து அழுவதும் உண்டு, சமயத்தில் இறந்தவர் ஆணாயிருந்து அவர் எங்கேயாவது செட்டப் செய்திருந்தால், அந்த பெண்மணி சந்தடி சாக்கில் இது போல் செய்து தனக்கும், இறந்தவருக்கு உள்ள உரிமையை நிலைநிறுத்த முயற்சிப்பவர்களும் உண்டு.

பார்த்தவுடன் மடேர்..ம்டேரென்று மார்பிலடித்து எங்கே அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயத்தை ஏற்படுத்தும்படி அழுபவர்கள் உண்டு. இவர்களின் அழுகை முக்கியமாய் உள்ளே நுழைந்து ஒரு பத்து நிமிடங்களுக்கும், உடலை எடுக்க போகும் முன்பும் தான் வெளிப்படுத்துகிறார்கள். இது ஒரு விதமான டிராயிங் அட்டென்ஷன் விஷயம்.சிலருக்கு வெளியே இருக்கும் வரை ஒன்றுமில்லாமல், உள்ளே நுழைந்தவுடன் அங்கிருக்கும் நிலைமையை பார்த்து துணுக்கென்று கண்களில் கண்ணீர் விடும் கேரக்டர்கள். இவர்கள் ஒரு நிமிடத்துக்கு மேல் அங்கிருக்க மாட்டார்கள் எஸ்கேப்பாகிவிடுவார்கள்.

நெருங்கிய் உறவுகள்,மகள், மகன், மனைவி, போன்றவர்கள் ரொம்பவும் ஆற்றாமையில் ‘ எழுந்திருங்க.. எழுந்திருங்க.. நான் உங்க் .. வந்திருக்கேன்.. எழுந்து பாருங்க..’ என்று அஞ்சலி பாப்பா ரேஞ்சுக்கு, அழுபவர்களூம் இருக்கிறார்கள். இவர்களை பார்த்து, இன்னும் சில நெருங்கியவர்கள், வெட்கத்தை விட்டு அம்மாதிரி கத்தி அழ தெரியாமல், பக்கத்தில் நின்றபடி சத்தமில்லாமல் முணுமுணுப்பவர்களும் உண்டு.

சில வயதான பாட்டிகள் எல்லோரும் பார்க்க வேண்டுமென்பதற்காகவே ஊரே ரெண்டு படும்படி அழுவார்கள். அதிலும் முக்கியமாய் நெருக்கமானவர்கள் வெளியே இருந்தால் உள்ளே அழைத்து வந்து ‘வாடா.. நான் அழப்போறேன் என்று சொல்லிவிட்டு அழுவார்கள்.சிலர் ஒரு பாட்டம் அழுதுவிட்டு, வெளியே போய் நெடுநாள் கழித்து பார்த்த உறவினர்களிடம் பேசிவிட்டு, ஒரு வாய் காபியை உள்ளுக்குள் இறக்கி,சரியான் இண்டர்வெலில் திரும்பவும் உள்ளே போய், அழுபவர்களும் உண்டு.இம்மாதிரியான சமயங்களில் ஒரு சிலர் மட்டும் ரொம்பவும் தீவிரமாய் காப்பி கொடுப்பதிலும், அவனைபார்.. இவனை பார்.. வண்டி வந்திடுச்சா என்று குரல் மட்டும் எழுப்பி கொண்டு தன்னை முன்னிலை படுத்தி கொண்டிருப்பார்கள். அவர்கள் ஏவலில் காரியம் நடப்பதாய் எண்ணம். இல்லாவிட்டால் உள்ளே இருப்பவர் எப்படி இறந்தார் என்று உரத்த குரலில் நேரிலிருந்து பார்த்த தினத்தந்தி நிருபர் போல் விவரித்து கொண்டிருப்பார்.

ஒரு சிலர் பாடி வரும் வரை காத்திருக்க முடியாமல் எதிர்பக்கம், உள்ள டிபன் கடைகளில் டீ, காபி,தம் என்று ஒதுங்கியபடி நின்றிருப்பார்கள். வந்தவர்களில் பல பேர் சுடுகாடுவரை வருவதில்லை.துக்கத்தின் உச்சத்தில் இருப்பவர்கள்.. இந்த மாதிரி சமயங்களில் அழுவதே இல்லை.இறந்தவரின் உடலுக்கு கொள்ளி வைக்கபடும்போது அடிவயிற்றிலிருந்து துக்கம் பீறிட, இந்நாள் வரை அவருடனான சந்தோஷம், சண்டை, துக்கம், பொறாமை, எல்லாம் நிமிட நேரத்தில் மனதில் ஓட, உள்ளிருந்து ஒரு பெரிய அலறல் வெடிக்க.. அழுகை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக