nanrasithathu.blogspot.com

திங்கள், 16 மே, 2011

சேர்ந்து வாழ்வது( லிவிங் டுகெதர்)

சமீப காலமாய் பதிவுலகில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் லிவிங் டு கெதர் என்பதுதான். அதை ஏன் நாம் அப்படி சொல்ல வேண்டும். சேர்ந்து வாழ்வது என்று சொல்லிப் பாருங்கள் ஆங்கிலத்தில் தெரியும் விகார அர்த்தம் குறைந்திருக்கும். ஆம் விகாரம் தான். லிவிங் டு கெதர் என்றாலே செக்ஸ் என்று மட்டுமே நினைத்துக் கொண்டு திரும்ப, திருமப, குடும்பம், கலாச்சாரம், குழந்தை, பெண்களுக்கு வேசி பட்டம் என்று தலைக்கு தலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கிறது திருமணம் என்கிற சொசைட்டியின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு விருப்பமில்லை. அப்படியிருக்கும் போது அவர்கள் இருவரும் மனமொத்து சேர்ந்து வாழ பிரியப்படுகிறாகள். பதினைந்து வருடங்களாய் சேர்ந்து வாழும் தம்பதிகள் இருவரை எனக்கு தெரியும். அதில் ஒரு ஜோடி தங்களுக்குள் எந்தவிதமான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இருக்கக் கூடாது என்று குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை. இன்னொரு ஜோடிக்கு ஒரு பையன் இருக்கிறான். இப்போது காலேஜ் படித்துக் கொண்டிருக்கிறான். என்னைப் பொறுத்த வரை அவர்கள் ஆதர்ச தம்பதிகள். பருவ வயதில் இம்முடிவெடுத்து இப்போது நடுத்தர வயதிலிருக்கும் அவர்களிடத்து செக்ஸ் மட்டுமே தான் வாழ்க்கையாக இருக்குமா..?

அவர்களது வாழ்க்கையை பற்றிய தெளிந்த பார்வை அவர்களுக்கு இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். அவரவர்கள் வாழ்க்கைக்கு அவரவர்கள் எடுக்கும் முடிவே நல்லது. எத்தனை கல்யாணங்கள் திருப்திகரமாய் இருந்திருக்கிறது?. திருமணமாகி மூன்று மாதத்திற்கெல்லாம் டைவர்ஸ் கேட்டு கோர்ட்டு படியேறும் தம்பதிகளை என்னவென்று பார்க்கும் இந்த சமூகம்?. செக்ஸ் தான் பிரச்சனை என்றால்? டைவர்ஸ் செய்யும் பெண்களையும் கற்பு கெட்டுப் போனப் பெண் என்றுதான் சொல்வீர்களா? திருமணம் ஆகி ஒரு வருடத்தில் கர்பமாகி, அதற்கு பிறகு குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு, டைவர்ஸ் வாங்கிய என் உறவினர் பெண்ணையும் எனக்கு தெரியும். அந்த குழந்தைக்கு வேண்டுமானால் இனிஷியல் இருக்கலாம். அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?. ஜீவனாம்சம் கூட வேண்டாம் என்று தன் காலில் சுயமாய் என் குழந்தையை வளர்கிறேன் என்று நிற்கும் பெண்ணுக்கு தோள் கொடுப்பதுதான் என் கடமையாய் தெரிகிறதே தவிர, அவள் கன்னிப் பெண்ணல்ல, செகண்ட் ஹாண்ட் என்றெல்லாம் தோன்றவில்லை. அவள் செகண்ட் ஹாண்ட் என்றால் அந்த ஆணும் செகண்ட் ஹாண்ட்தான். ஆம்பளைக்கு ஆயிரம் கல்யாணம் என்பதெல்லாம் அந்தக்காலம் நல்ல சம்பாதித்து நல்ல நிலையில் இருக்கும் நிறைய பேருக்கு இன்றளவில் வயதேறிக் கொண்டிருக்கிறதே தவிர திருமணம் நடந்த பாடில்லை. டைவர்சியான ஆணுக்கும் மீண்டும் திருமணம் எனும் போது பல பிரச்சனைகளை கடந்துதான் திருமணமாகிறது. அப்படியெல்லாம் இல்லை என்று சொல்பவர்களுக்கு நான் ஏதும் பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் நிஜத்தில் நடக்கும் விஷயங்களை அறிய, தெரிய மறுப்பவர்களுக்கு நான் சொல்லி மட்டும் தெரிந்து விடவா போகிறது.

இன்னொரு விஷயம் இப்படி லிவிங் டு கெதரில் வாழ்ந்து பிரிந்து போன ஜோடிகளுக்கு பிறக்கும் குழந்தைகளால் தான் அமெரிக்காவில் வன்முறை தலைவிரித்தாடுகிறது என்று ஒரு சாரார் சொல்லியிருக்கிறார்கள். தினசரி பேப்பரை திறந்தால் கள்ளக்காதலினால் மனைவி கொலை, மனைவி கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்றாள். குழந்தைகளோடு விஷம் குடித்து சாவு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் தான் இருக்கிறது. இவர்கள் எல்லாம் நம் கலாச்சார வழக்கப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் தான். இப்படிப்பட்ட செயல்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனநலம் குன்றி, பின்னாளில் ஒரு ரவுடியாகவோ, அல்லது வக்கிரம்பிடித்தவனாகவோ, வன்முறையை கையாளுபவனாகக்கூட இருக்கக்கூடும். என் நண்பருடய குடும்பத்தில் தினம் ஒரு பிரச்சனை, கணவர் மீது சந்தேகம், அதனால் மனைவி கொடுக்கும் டார்சர் தாங்க முடியவில்லை இதனால் நிதம் சண்டை இந்த சண்டையை பார்த்த அவரது மகன் மன அழுத்தம் தாங்காமல் ஒரு நாள் கை நரம்பை அறுத்து கொண்டான் அவர்களின் சண்டையை நிறுத்துவதற்காக, அவனை காப்பாற்றுவதற்குள் பெரும் பாடு பட்டு விட்டார்கள். ஆனால் மீண்டும் பிரச்சனை என்னவென்றால் இதற்கெல்லாம் காரணம் நீதான்? என்று ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள். இவ்வளவு பிரச்சனையுடன் இவர்களும் கலாச்சாரப்படி சேர்ந்துதான் வாழ்கிறார்கள். ஏன்?

குடும்பம்னா ஆயிரம் இருக்கும் என்று சால்ஜாப்பு சொல்பவர்களுக்கு ஒன்று. ஆயிரம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த ஆயிரத்தில் பல நல்ல விஷயங்கள் இருந்தால் நல்லது. பொழுதன்னைக்கு பிரச்ச்னைதான் வாழ்க்கைன்னா சரிவராதவங்க பிரிஞ்சு போயிடறது நல்லதுதானே. அப்படி விவாகரத்துன்னு வர்றவங்களுக்கு ஜீவனாம்சம் அது இதுன்னு ஆயிரம் பார்மாலிட்டி இருக்கு, அந்த கஷ்டம் எல்லாம் டைவர்ஸ் பண்ணி பார்த்தவனுகும், கூட அலைஞ்சவனுக்கும் தான் தெரியும். டைவர்ஸுக்கு பிறகு நல்ல வாழ்க்கை செட்டான ஆண், பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதையெல்லாம் சொல்லி நான் லிவிங் டுகெதருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதிலும் பல பிரச்சனைகல் இருக்கத்தான் செய்கிறது. முதலில் வயதில் ஏற்படும் காதல் , காமம் வகையராக்களை தாண்டி வருவதற்குள் இவர்களிடமும் பிரச்சனை ஏற்படத்தான் செய்கிறது. என்ன கொஞ்சம் பொறுத்துப் பார்த்து பின்பு ஒரு முடிவுக்கு வந்து பிரிந்துவிடுகிறார்கள். கோர்ட்டு, வழக்கு, மற்றும் பல பிரச்சனைகள் கிடையாது. இதில் இன்னும் சில பேர் சொத்துகள் வாங்கி அதை ரிஜிஸ்டர் செய்யும் போது அக்ரிமெண்ட் கூட போட்டுக் கொள்கிறார்கள். அதே போல குழ்ந்தை பிறந்து ரெண்டு வருடம் கழித்து பிரிந்த ஒரு ஜோடி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று ப்ளான் செய்யும் நேரத்திலேயே அக்குழந்தைக்கான சேப்டி விஷயங்கள் அனைத்தையும் செய்துவிட்டுதான் குழந்தையே பெற்றுக் கொண்டார்கள். அக்குழந்தைக்கான எதிர்காலம், அவனுக்கான இனிஷியல் உள்பட. இன்று அந்த பெண் இன்னொரு திருமணம் செய்து கொண்டு நன்றாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவனும் தான்.
இந்த சமூகம் பல விஷயங்களை தனக்கேற்றார் போல மாற்றிக் கொண்டுதான் வருகிறது. ஒரு காலத்தில் என் தாத்தாவுக்கு மூணு பொண்டாட்டி என்று சொன்னதையெல்லாம் இப்போது சொல்ல முடிவதில்லை.. ஏனென்றால் ஒரு குடும்பம் நடத்துவதே பெரிசு என்றாகிவிட்டதும் ஒரு காரணம். இன்றைய காலகட்டத்தில் வாழ்வதே பிரச்சனையாய் நினைக்கும் மக்கள் இருக்குமிடத்தில் இம்மாதிரியான ரிலேஷன்ஷிப் பைண்டிங் இல்லாமல் வாழ ஆசைப்படும், பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கும் ஆண் பெண் நிறைய பேர். தங்கள் வாழ்க்கையில் தங்கள் பெற்றோர்கள், தங்கை, அக்கா, அண்ணண் என்று அவர்கள் வாழும் வாழ்கையை பார்த்து இப்படியெல்லாம் சகித்துக் கொண்டு அவனோடோ, அவளோடோ வாழ்ந்துதான் ஆக வேண்டுமா என்று பயந்து போனவர்கள் நிறைய பேர்.

தன்னுடய் அக்காள்கள் எவரும் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழவில்லை. அவரவர்களுக்கு வாழ வேண்டிய கட்டாயம் இருப்பதால் சேர்ந்திருக்கிறார்கள் எனறு என் தோழி திருமணமே வேண்டாமென்று ஒற்றைக்காலில் நின்றாள். கடைசியில் வீட்டில் இருப்பவர்க்ள் எல்லோரும் ஒரு வ்ழியாய் சம்மதிக்க வைத்தார்கள். ஆனால் அவள் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு தற்கொலை செய்து கொண்டாள். ஊரில் எல்லோரும் அவளூக்கு காதல் தோல்வி என்றார்கள். எனக்கு மட்டும் தான் தெரியும் அவளுக்கு வாழ்க்கையே தோல்வியென்று.. என்னை பொறுத்த வரை அது லிவிங் டு கெதரோ, அல்லது திருமணமோ.. இரு மனம் ஒத்து வாழூம் எல்லாருடய வாழ்கையும் நல் வாழ்கையே.. மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கையில் எட்டி பார்த்து மூக்கை நுழைக்காதவரை..

3 கருத்துகள்:

  1. எல்லோரும் அவளூக்கு காதல் தோல்வி என்றார்கள். எனக்கு மட்டும் தான் தெரியும் அவளுக்கு வாழ்க்கையே தோல்வியென்று..

    - நல்ல படைப்பு.

    பதிலளிநீக்கு
  2. pidithirukiradhu ungal padaipu.... vegu edaarthamaai kaiyaandu irukkirergal.... good

    பதிலளிநீக்கு