nanrasithathu.blogspot.com

புதன், 25 மே, 2011

கலைஞர்க்கு கடிதம்!

ஓய்வறியா சூரியனே! ஒளி குன்றா கதிரோனே!
உட்கார்ந்து கொண்டே வென்றிடலாம் என்றெண்ணிய உத்தமரே!
பார்த்தீரா இந்த பச்சோந்திகளை!
வாரி இறைத்தோம்!
அள்ளிக்கொடுத்தோம்!
பத்தவில்லை போலும் இந்த பரதேசிகளுக்கு!
கொடுத்த காசிற்கு கூவாமல், குத்திவிட்டார்கள் முதுகில்!
என்ன செய்ய இனி?

எதிர் வரிசையில் அமர இடமில்லை!
ஏங்காமலிருக்க மனமில்லை!
காமராசுவை தோற்கடித்து களிப்புற்ற நாம்,
ராசாவாலும் ராசாத்தியாலும் தோற்றுவிட்டோமே!
என் செய்வேன் தலைவா?

திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) -
திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி (தி.மு.க) -
என்றானதன் விளைவைப்பார்த்தீரா?
அன்று,செம்மொழிக்காக தார் பூசினோம்!
இன்று,கனிமொழியால் தார் பூசப்பட்டோம்!
இனம் காக்க தலைநகர்க்கு தந்தி சென்றது!
இருக்கை காக்க நீயே சென்றாய்!
இனத்தைவிட இருக்கை முக்கியமாகிவிட்டது!
என்ன நியாயம் இது?

பதவி தோளின் துண்டாக இருந்த காலம் போய்,
கோவணமாக மாறிவிட்டதோ?
பிறர் பாராட்டிதான் தெரியவேண்டுமா உன் புகழ் உனக்கு?
திரைமுன் முகம் மறைத்து
திரைபின் அகம் விரிக்கும் வேசிகள் - நம் புகழ் பாடவேண்டுமா?
பெரியாரும் அண்ணாவும் சொல்லித்தந்த பாடம் இதுதானா?
பிச்சைக்காரனுக்கும் பாராட்டு விழா நடத்தும் கூட்டமது!
அதை நம்பி ஏமார்ந்து போனாயே!
காக்கைகள் வந்து போகும் கூடாரமாகிப்போனதோ நம் கழகம்?
சிங்கத்தின் குகை, சிறு நரிகள் கூடுமிடமானதோ?

இனியும் ஒன்றும் குறைந்துவிடவில்லை!
பொறுத்தது போதும் தலைவா! பொங்கி எழு!
கழகம் எனும் சொல்லில் மறைந்துள்ள -
குடும்பம் எனும் கட்டை அவிழ்!

"என் உயிரினும் மேலான உடன் பிறப்பே" என்ற ஒற்றை வரிக்காவே ஏங்கிக் கிடக்கும் உள்ளங்களைப்பார்!
கழகத்திற்காக உழைத்தே காய்ந்துபோன உள்ளங் கைகளைப்பார்!

கழகத்திலுள்ள களையெடு! கலையெடு!
இனம் காண்! தொண்டனிவன்! துதிபாடுபவனிவன் என்று இனம் காண்!
தொண்டனோடு தோள் போடு!
துதிபாடுபவனை தூக்கிப் போடு!
எங்கிருந்து துவங்கினாயோ அங்கேயே சென்றுவிட்டாய்!
மீண்டு வா! மீண்டும் வா! மீட்க வா!

வாழ்த்துகிறேன் உண்மைத்தொண்டனாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக